தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில்


மெட்டாலா கணவாயில் எனும் இந்த இடம் ஒரு காலத்தில் கொடிய வனவிலங்குகள் உலவும் வனமாக இருந்தது. இப்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டவுடன் அழகான திருத்தலமாக மாறிவிட்டது.

கோரைப் புற்களிடையே ஓடியதால் கோரையாறு என்ற பெயருடன், காவிரி, திருக்கோயிலுக்கு எதிரே ஓடிக் கொண்டிருக்கிறது.

கன்னிமார் ஊற்று என்ற சிறு சுனை அருவியும் உண்டு. கோயிலைக் கடந்து செல்லும் எல்லா மக்களும் வாகனங் களும் இங்கு நின்று வணங்காமல் செல்வதில்லை.


உருண்டையான ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர், இரண்டடி உயரத்தில், நின்ற நிலையில், சாந்த வடிவத்தில் திருக்காட்சி அளிக்கிறார். நாமக்கல் குடவரைக் கோயில்களைக் கட்டிய அதியன் குணசீலன் என்ற, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் உருவாக்கிய கோயில் இது. அப்போது காவல் தெய்வமாக இந்த அனுமன் சிலை செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சங்ககிரி மலையில் எண்திசைக் காவலர்களாக, இதே தோற்றத்தில் ஆஞ்சநேயரின் உருவங்கள் சிறியதும் பெரியதுமாக காணப்படுகின்றன; இன்றும் வழிபடப்படுகின்றன. பரமத்தி கோட்டையண்ணன் கோயிலிலும் இதேபோன்ற ஆஞ்சநேயரை பெரிய வடிவில் தரிசிக்கலாம்.

உருண்டைப் பாறைக் கல்லைப் பிரதானமாக வைத்து, மகா மண்டபம், விநாயகர், சிவன், விஷ்ணு துர்க்கை, நவகிரகங்கள் சந்நதிகளை பக்தர்கள் உருவாக்கினர். ஆஞ்சநேயருக்கு எதிரில், திருக்கடையூர் அபிராமி, கொண்டமுத்து மூகாம்பிகை, சோட்டாணிக்கரை பகவதியம்மன், திருவானைக்காவல் அகிலேண்டேஸ்வரி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி, பராசக்தி, காயத்ரி ஆகிய தெய்வங்கள் சுதைச் சிற்பங்க ளாக அருள்பாலிக்கின்றனர். மேல் விதானத்தில் அஷ்டலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்திலேயே தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில் இதுதான் என்றே சொல்லலாம்.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில், கடைசி ஞாயிறு அன்று பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள். விழாவின்போது பஞ்சலோகத்தாலான உற்சவமூர்த்தி, அருகே, ஒடுவன்குறிச்சியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து இங்கு கொண்டு வரப்படும். இந்த ஈசன் கோயிலிலிருந்து ஆஞ்சநேயரை ரதத்தில் எழுந்தருளச் செய்து, காலை 10 மணிக்கு, ஒடுவன்குறிச்சி, சீராப்பள்ளி, தேவஸ்தானம் புதூர் வழியாக வரும் உலா இரவு 7 மணிக்கு நாமகிரிப்பேட்டையில் நிறைவுபெறும். 7:30 மணிக்கு நாமகிரிப்பேட் டையில் பந்த சேர்வை திருவீதி உலா வருவார்.

மறுநாள் காலை 7 மணிக்கு உற்சவமூர்த்தி ரதமேறி நாமகிரிப்பேட்டை, தண்ணீர்பந்தல் காடு, கும்பகொட்டாயி, கட்டப் புளியமரம், கோரையாறு வழியாக மெட்டாலா கணவாய்க்கு வந்தடைந்து தன் திருக்கோயிலில் எழுந்தருள்வார்.

காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். 11:00 மணிக்கு மெட்டாலா கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமி சக்தி அழைத்தல் நடைபெறும். மதியம் 12 மணிக்கு அக்கினி குண்டம் பற்ற வைக்கப்படும். 1 மணிக்கு சுவாமி கோரையாற்றில் நீராடிவிட்டு மதியம் 3 மணிக்கு அக்கினி குண்டம் இறங்குவார். மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா இனிதே முடியும். மீண்டும் உற்சவர் வந்த வழியே திருவீதி உலாவை முடித்துக் கொண்டு ஒடுவன் குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றடைவார்.

இத்திருக்கோயில் 2007-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மற்றுமொரு கும்பாபிஷேகத்தினைக் கண்டது. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதூர்யம் முதலியவை கிட்டும்.

இக்கோயில் வளாகத்தில் எண்ணற்ற குரங்குகள் உள்ளன. அவை யாருக்கும் இதுவரை எந்த துன்பத்தையும் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஞ்சநேயர் தன்னை நாடி வரும் பக்தர்களைப் பரிபாலிக்கத் தயாராக இருக்கும்போது, அவர் அம்சமான இந்தக் குரங்குகள் அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவா செய்யும்?

ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் ஆனந்தாயா மலையடி வாரத்தின் பாதையோரமாக மெட்டாலா கணவாயில் எனும் இத்தலம் அமைந்துள்ளது.

நான் இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்றுவருகிறேன். நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள் அந்த வழியாக செல்லும்போது. இத்திருத்தலத்தில் வழிபட்டு மேன்மை பெற வாழ்த்துக்கள்!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Dinakaran daily news paper.1 comments:

கோவை நேரம் said...

பகிர்வுக்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top