தாய்மைக்கு தண்டனை - ஒரு பக்கக் கதை

உலகத்தின் எல்லா சந்தோஷத்தையும் தானே அனுபவிப்பதை போல உணர்ந்தாள் ஆனந்தி.

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் பூரித்துப் போனாள்.

எத்தனை நாள் தவம்!
எத்தனை நாள் கண்ணீர்!
எத்தனை நாள் வேதனை!

இன்று முடிவுக்கு வந்தது. ஆனந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.


திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் ஆனந்திக்கும், ரவிக்கும் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்ற குறையை விட மலடி என்ற பட்டம் ஆனந்தியை வாட்டி வதைத்தது.

எத்தனை கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடிஎடுத்து வைத்தாளோ, அத்தனை கனவும் கண்ணீரில் கரைந்தன. கணவன் ரவி அன்பானவன் தான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் தான். ஆனால், குழந்தை இல்லாத குறையை எத்தனை நாள்தான் அவனும் ஜீரணிப்பது! ரவியும் சில நேரங்களில் ஆனந்தியிடம் முகம் சுளிக்க ஆரம்பித்தான். பார்க்காத டாக்டர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை. எல்லாமே வீண்!

ரவியின் அம்மா சாரதா புலம்பித் தள்ளுவாள்: "நேத்து வந்தவளெல்லாம் நெல்லிக்காயும், மாங்காயும் சாப்பிட்டு புள்ளைய பெத்து போடறா!... ம்... இந்த வீட்டுக்கு அந்த கொடுப்பனையே இல்லை..." என்று பெருமூச்சு விடுவாள்.

ஆயுசு முழுக்க ஆனந்தமாய் வாழ வேண்டுமென்றுதான் ஆனந்தி என்று பெயர் வைத் தார்கள். ஆனால், கழுத்தில் தாலியை சுமக்க ஆரம்பித்த நாள் முதல், மனம் வேதனையை சுமக்க ஆரம்பித்தது.

பெண்ணாய் பிறந்த யாரும் தாய்மையை வெறுப்பதில்லை. தாய்மை யாருக்கு வாய்க்குமோ? யாருக்கு வாய்க்காதோ? கடவுளுக்கே வெளிச்சம்! ஆனால் யாரும் கடவுளை குற்றம் சொல்வதில்லையே! ஆண்டுகள் கடந்தாலும் காலங்கள் மாறினாலும், என்ன தான் கம்ப்ïட்டர் யுகத்திலேயே வாழ்ந்தாலும் குழந்தை பேறு இல்லை என்றால் இந்த சமுதாயம் பெண்களைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கும். இது பெண் வர்க்கத்துக்கே உண்டான சாபக்கேடு.

எந்த பெண்ணும் அவ்வளவு சீக்கரம் முடி வெடுக்க முடியாத விஷயம். எந்த பெண்ணும் தன் கணவனைப் பார்த்து கேட்கக் கூடாத வார்த்தை. ஆனந்தி ஒருமுறை தன் கணவனை கேட்டே விட்டாள். "நீங்க வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?"

"பைத்தியமா உனக்கு... குழந்தை வேணுங் கிறது நம்முடைய ஆசை தான். அதுக்காக என்னுடைய மனிதாபிமானத்தை பலி கொடுக்க முடியாது" என்றான்.

பாலைவனத்தில் முளைத்தெழுந்த முல்லை கொடிக்கு அவ்வப்போது பாசமாய் பொழியும் வானமழைபோல், கணவனின் பாச வார்த் தைகளை உணர்ந்தாள். திருமணமாகி ஏழு வருடங்களாகியும் கணவன் நல்லவனா, கெட்டவனா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆனந்திக்கு.

நல்லவன் என்று எப்போதெல்லாம் நினைக்கிறாளோ, அப்போதெல்லாம் அதற்கு எதிர்மறையாகத் தான் இருப்பான். அவன் கெட்டவன் என்று ஒதுங்கி நிற்கும் போது, அவனே நெருங்கி வந்து அவளை கெஞ்சலோடு கொஞ்சுவான்.

ஆனந்திக்கு வாழ்க்கையும் கேள்விக்குறி! கணவனும் கேள்விக்குறி!

நடந்ததெல்லாம் போகட்டும். இத்தனை நாள் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்தது!

செவிலியர் கொடுத்த தன் குழந்தையை அன்போடு அள்ளி மார்போடு அணைத்தாள். கண்களில் நீர் சுரந்தது. மார்பில் பால் சுரந்தது. கண்ணீர் எப்போதுமே உப்பு கரிக்குமாம். ஆனால், ஆனந்திக்கு தேனாய் இனித்தது.

தன் மடியில் தவழும் இந்த மழலைக்காக ஏங்கிய நாட்கள் எத்தனை!

"என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" - எங்கோ தூரத்தில் ஒலித்த பாடல் வரிகள் எந்த அர்த்தத்துக்காக எழுதப்பட்டதோ தெரியவில்லை. ஆனால், ஆனந்திக்கு புரிந்தது ஒரே அர்த்தம்தான்.


உறவினர்கள் எல்லோரும் குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். உறவினர்களையும், அக்கம் பக்க வீட்டுக்காரர்களையும் பார்த்ததும் ஆனந்திக்கு அழுகை தாங்க வில்லை. குரல் உடைந்து அழுதாள்.

"ஏண்டி அழறே! அசடு! எல்லாம் முடிஞ்சி போச்சிடி! உன் கவலைகள் எல்லாம் முடிஞ்சி போச்சு! இன்னிலேர்ந்து நீ ராசாத்தி மாதிரி இருக்கணும். சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் பிள்ளையை பெத்தவடி நீ! எதுக்கும் கவலைப்படாதே!" என்று ஆனந்தியின் மாமியார் பூரிப்பில் ஆறுதல் சொன்னாள்.

"அவர் வரலியா" என்றாள் ஆனந்தி.

"போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டோம். முதலாளிகிட்ட கணக்கு ஏதோ கொடுத் துட்டு வரணுமாம். வர்றேன்னு சொன்னான்" என்றார்கள்.

மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிய, கணவன் வருகைக்காக காத்திருந்தாள் ஆனந்தி! உறவினர்களின் பார்வை நேரம் முடியும் தருணத்தில் வந்தான் ரவி. அவனது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்ததை ஆனந்தி கவனித்தாள்.

"இது என்ன புதுப்பழக்கம்? முதல் முதல் நம்ம குழந்தையை பார்க்க இந்த கோலத்திலேயா வருவது ?" என்றாள்.

அவன் எதுவும் பேசவில்லை. ஆனந்தி படுத்திருந்த கட்டிலருகே போடப்பட்டிருந்த தொட் டிலில் படுத்திருந்த குழந்தையை குனிந்து பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

"நல்லாருக்கானா நம்ம பையன்... ஏன் உங்க முகத்துல சந்தோஷத்தையே காணோம்...!" என்றாள்.

"நீயும் கறுப்பு, நானும் கறுப்பு. குழந்தை மட்டும் வெள்ளையா இருக்கு... நம்ம வீட்ல உள்ள வங்க யாருடைய முகச்சாயலும் குழந்தைக்கு இல்ல... இதை நான் மட்டும் சொல்லல... வெளியில் பேசிக்கிறாங்க... " அவன் குரலில் குடிகாரர்களுக்கே உரிய குழறல் இருந்தது. ஆனால், உளறல் இல்லை.

இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் அத்தனையையும் மறுபடியும் ஒரே நொடியில் அனுபவித்த மாதிரி இருந்தது ஆனந்திக்கு!

நேற்று வரை அவள் சுமந்த துன்பம் வேறு! இனி அவள் சுமக்கப் போகிற துன்பம் வேறு!


- மின்னூர் மகாதேவன்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!




Related Posts with Thumbnails
 
back to top