51 சக்தி பீடங்களும் - அவை அமைந்த இடங்களும்


அம்பாளின் 51 உடல் பாகங்கள் விழுந்த இடமே சக்தி பீடங்களாக உருவானதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த சக்தி பீடங்களையும், அவை அமைந்த இடங்களையும் வரிசையாகப் பார்க்கலாம்.

தேவி பாகவதம் என்ற நூல், அம்பாளுக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் தந்திர சூடாமணி என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் என்று தெளிவாக இருக்கின்றன. இந்த நூலை பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாளின் 51 உடல் பாகங்கள் விழுந்த இடமே சக்தி பீடங்களாக உருவானதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அந்த சக்தி பீடங்களையும், அவை அமைந்த இடங்களையும் வரிசையாகப் பார்க்கலாம்.

  1. கொல்லூர் மூகாம்பிகை (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா.
  2. காஞ்சி காமாட்சி (காமகோடி பீடம்), தமிழ்நாடு.
  3. மதுரை மீனாட்சி (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு.
  4. காசி விசாலாட்சி (மணிகர்ணிகா பீடம்), உத்தரபிரதேசம்.
  5. மகாகாளம் சங்கரி (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம்.
  6. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி (சேது பீடம்), தமிழ்நாடு.
  7. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி (ஞானபீடம்), தமிழ்நாடு.
  8. திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் (அருணை பீடம்), தமிழ்நாடு.
  9. திருவாரூர் கமலாம்பாள் (கமலை பீடம்), தமிழ்நாடு.
  10. கன்னியாகுமரி பகவதி (குமரி பீடம்), தமிழ்நாடு.
  11. உஜ்ஜையினி மகாகாளி (ருத்ராணி பீடம்), மத்திய பிரதேசம்.
  12. கும்பகோணம் மங்களாம்பிகை (விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு.
  13. ஜம்மு வைஷ்ணவி (வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்.
  14. விந்தியாசலம் நந்தாதேவி (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்.
  15. ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள் (சைல பீடம்), ஆந்திரா.
  16. ருத்ரகோடி மார்க்கதாயினி (ருத்ரசக்தி பீடம்), இமாசலப்பிரதேசம்.
  17. காளகஸ்தி ஞானாம்பிகை (ஞான பீடம்), ஆந்திரா.
  18. கவுகாத்தி காமாக்யா (காமகிரி பீடம்) அசாம்.
  19. ஸ்ரீநகர் சம்புநாதேஸ்வரி (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்.
  20. திருக்கடையூர் அபிராமி (கால பீடம்), தமிழ்நாடு.
  21. கொடுங்கலூர் பகவதி (மகாசக்தி பீடம்), கேரளா.
  22. கோலாப்பூர் மகாலட்சுமி (கரவீரபீடம்) மகாராஷ்டிரா.
  23. குருஷேத்திரம் ஸ்தாணுபிரியை (உபதேச பீடம்) அரியானா.
  24. திருவாலங்காடு மகாகாளி (காளி பீடம்) தமிழ்நாடு.
  25. கொல்கத்தா பிரதான காளி (உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்.
  26. பூரி பைரவி (பைரவி பீடம்) ஒடிசா.
  27. திராட்சவரமா மாணிக்காம்பாள் (மாணிக்க பீடம்) ஆந்திரா.
  28. துவாரகை பத்ரகாளி (சக்தி பீடம்) குஜராத்.
  29. திருக்குற்றாலம் பராசக்தி (பராசக்தி பீடம்), தமிழ்நாடு.
  30. அஸ்தினாபுரம் முக்திநாயகி (ஜெயந்தி பீடம்) அரியானா.
  31. குளித்தலை லலிதா (சாயா பீடம்) தமிழ்நாடு.
  32. புஷ்கரம் காயத்ரி (காயத்ரி பீடம்) ராஜஸ்தான்.
  33. சோமநாதம் சந்திரபாகா (பிரபாஸா பீடம்) குஜராத்.
  34. பாசநாசம் உலகநாயகி (விமலை பீடம்), தமிழ்நாடு.
  35. திருநெல்வேலி காந்திமதி (காந்தி பீடம்), தமிழ்நாடு.
  36. திருவெண்காடு பிரம்மவித்யா (பிரணவ பீடம்), தமிழ்நாடு.
  37. திருவையாறு தர்மசம்வர்த்தினி (தர்ம பீடம்), தமிழ்நாடு.
  38. திருவொற்றியூர் திரிபுரசுந்தரி (இஷீபீடம்), தமிழ்நாடு.
  39. தேவிபட்டினம் மகிஷமர்த்தினி (வீரசக்தி பீடம்), தமிழ்நாடு.
  40. நாகுலம் நாகுலேஸ்வரி (உட்டியாணபீடம்) இமாசலப்பிரதேசம்.
  41. ஜலாந்திரம் திரிபுரமாலினி (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்.
  42. திரியம்பகம் திரியம்பகதேவி (திரிகோணபீடம்) மகாராஷ்டிரா.
  43. மைசூர் சாமுண்டீஸ்வரி (சம்பப்பிரத பீடம்) கர்நாடகா.
  44. பிரயாகை ஸ்ரீலலிதா (பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்.
  45. சிம்லா நீலாம்பிகை (சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்.
  46. துளஜாபுரம் பவானி (உத்பலா பீடம்) மகாராஷ்டிரா.
  47. பசுபதி காட்மாண்ட் பவானி (சக்தி பீடம்) நேபாளம்.
  48. கயை மந்த்ரிணி (திரிவேணி பீடம்) பீகார்.
  49. கோகர்ணம் பத்ரகர்ணி (கர்ண பீடம்) கர்நாடகா.
  50. ஹஜ்பூர் விரஜை ஸ்தம்பேஸ்வரி (விரஜா பீடம்) உ.பி.
  51. மானசரோவர் தாட்சாயிணி (தியாக பீடம்) திபெத்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image



ஜென் கதை: பிரார்த்தனையின் வழி


எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே. இதை உணர்த்தும் ஒரு ஆன்மிக கதையை பார்க்கலாம்.


சமய நூல்களையும், சூத்திரங்களையும் திறம்பட கற்ற மகா குரு ஒருவர் இருந்தார். அவர் இறைவனை வழிபடும் போது இந்த முறையில், இந்த வழியில்தான் பிரார்த்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டவர். அவர் கூறும் தத்துவங்களையும், அறிவுரைகளையும் கேட்டு மக்கள் பலரும் மெய்மறந்து போவார்கள்.

ஒரு முறை அந்த மகா குரு கப்பல் பயணம் மேற்கொண்டார். கப்பல் பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, பலர் அவரது சீடர்களாக மாறிவிட்டனர். ஒரு நாள் அதிகாலை நேரம் மகா குரு கப்பலில் நின்று கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் மணல் திட்டு ஒன்று தென்பட்டது. உடனடியாக கப்பல் மாலுமியை அழைத்து, ‘அது என்ன மணல் திட்டு?’ என்று கேட்டார்.

‘ஆத ஒரு சிறிய தீவு. கடலில் மூழ்கிய ஒரு மலையில் சிறு பகுதி’ என்றான் கப்பல் மாலுமி.

உடனே மகாகுரு, ‘அந்த இடத்தில் யாராவது இருக் கிறார்களா?’ என்றார்.

மாலுமி, ‘அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. யாரோ மூன்று துறவிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு ஓரிரு இலந்தை மரங்கள்தான் இருக்கின்றன. இவர்கள் எப்படித்தான் அங்கு வசிக்கிறார்களோ?’ என்றான்.

அவனது வார்த்தையைக் கேட்ட மகாகுரு, ‘என்ன துறவிகளா?’ என்று வியந்தபடி, அந்த பகுதிக்கு கப் பலைச் செலுத்தும்படி உத்தரவிட்டார்.

அவர் சொல்படியே, கப்பல் அந்த மணல் திட்டின் அருகில் போய் நின்றது. கப்பலை விட்டு இறங்கிய மகா குரு, ‘நான் அந்த துறவிகளைக் காண வேண்டும். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று அறிய வேண்டும். அவர்கள் பண்டிதர்களாக இருந்தால், அவர்களுடன் வாதிட்டு, புத்தரை வழி படும்படி செய்துவிட்டு திரும்புவேன். பாமரர்களாக இருந்தால் என்னுடைய கருத்துக்களை போதிப்பேன். மாலைக்குள் நான் இந்தக் கப்பலுக்கு வந்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு மணல் திட்டில் இறங்கி காட்டிற்குள் நடக்கத் தொடங்கினார்.

கொஞ்ச தூரத்தில் ஒரு குடில் இருந்தது. அதில் மூவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வயோதிகர்களாக இருந்தனர். சாதாரண உடையால் அவர்களின் தோற்றம் பிச்சைக்காரர்களைப் போல் காணப்பட்டது.

மகா குருவின் தோற்றத்தைப் பார்த்ததும் மூவரும் வணக்கம் தெரிவித்தனர். குருவும் பதில் வணக்கம் கூறிவிட்டு, ‘நீங்கள் மூவரும் துறவிகளா?’ என்றார்.

‘இல்லை ஐயா..’ என்றார் அவர்களில் ஒருவர். ‘துறப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது? நாங்கள் எதைத் துறப்பது? எதனிடம் இருந்து துறப்பது?’ என்றார் மற்றொருவர்.

இப்போது குரு, ‘நீங்கள் எந்த மதம்?’ என்றார்.

அவர்களுக்கு ஒரே குழப்பம், ‘மதமா..? அப்படியென்றால்..?’

‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டார் குரு.

மூவருக்கும் மீண்டும் குழப்பம் ‘வழிபாடா?’ என்ற படி ‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

மகா குரு, ‘நான் புத்தரை வழிபடுபவன்’

‘ஓ.. புத்தரா? அவர் வணக்கத்திற்கு உரியவர்தான். நாங்களும் அவரை வணங்குவோம்’ என்றனர்.

‘எப்படி வணங்குவீர்கள்?. உங்கள் வழிபாட்டு முறை என்ன?’ என்றார் மகா குரு.

‘வழிபாட்டு முறை.. வழிபாட்டு நேரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது மனதிற்குள், ‘பூமியை படைத்தவனுக்கு வணக்கம். புத்தருக்கு வணக்கம். புத்தருக்கு முன்னும், பின்னும் உலகின் துயரங்களுக்கு விரிவு காண முயன்ற அனைவருக்கும் வணக்கம்’ என்று பிரார்த்திப்போம். அவ்வளவுதான்’ என்றனர் மூவரும்.

குருவிற்கு சிரிப்புதான் வந்தது. ‘இது சரியான முறை அல்ல.. எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கிறது. நியதி இருக்கிறது. அதுபோலத்தான் வழிபட வேண்டும். அதை நான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன்’ என்று கூறியவர், அவர்களுக்கு ஸ்தோத்திரங்கள், பாடல்கள், சூத்திரங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். சொல்லிக்கொடுத்ததை அவர்களிடம் ஒப்புவிக்க கூறினார். அவர்கள் திணறினர். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தார். ஓரளவு புரிந்து கொண்டதுபோல் தெரிந்தது குருவிற்கு. அதற்குள் மாலை நேரம் வந்து விட்டதால் குரு, மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கப்பலுக்குத் திரும்பினார்.

கப்பல் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், தீவில் இருந்த மூவரும் ஓடிவந்தனர். அவர்கள் குருவிடம், ‘எங்களை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னது எல்லாம் மறந்து போச்சு.. இன்னொரு தடவை சொல்லிக் கொடுங்க’ என்றனர்.

மகா குருவிற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.

‘நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும். உங்களின் வழிபாடு எதுவோ, அதையே செய்யுங்கள். ஏனெனில் அதைத்தான் புத்தர் விரும்புகிறார். அதில் எளிமை உள்ளது. அவர் நேசிப்பது அந்த எளிமையைத்தான்’ என்றார்.

எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image



விநாயகரின் 16 வகையான வடிவங்கள்

ஆனைமுகனான விநாயகப்பெருமானை, பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். இதில் 16 வகையான வடிவங்களையும், அவற்றிற்கான பலன்களையும் பார்க்கலாம்.

பாலகணபதி:- மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி, சிவந்த மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

தருண கணபதி:- எட்டு கரங்களை கொண்டவர். அந்த கரங்களில் பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறிந்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தியிருப்பார். செந்நிற மேனியனான இவரை வழிபட்டால் முகக்களை உண்டாகும்.

பக்த கணபதி:- நிலவின் ஒளியைப் போல் வெண்மை நிற மேனியும் காணப்படுவார். இவர் தனது நான்கு கரங்களில் தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தாங்கியபடி இருப்பார். இவரை வழிபட்டால் இறைவழிபாடு, உபாசனை நன்றாக அமையும்.

வீர கணபதி:- செந்நிற மேனியைக் கொண்ட இவர் வீராவேசத்தில் இருப்பது போல் காட்சியளிப்பார். இவரது 16 கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களையும் தாங்கி காணப்படுவார். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி:- பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர் இவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பார். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

துவிஜ கணபதி:- இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியபடி இருப்பார். வெண்ணிற மேனியை கொண்ட இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி:- மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி இருக்கும், பசும்பொன் நிறத்தை கொண்டவர் இவர். தன்னுடன் சித்தியை கொண்டிருப்பார். இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி:- வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியிருக்கும் விநாயகர் இவர். கருநீல மேனியுடைய இவரை வழிபட்டால் வாழ்க்கையில் உயர் பதவிகளை பெறலாம்.

விக்னராஜ கணபதி:- சொர்ண நிறத்தில் பிரகாசிக்கும் இந்த விநாயகர், பன்னிரு கரங்களைக் கொண்டவர். அவற்றில் சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தாங்கியிருப்பார். இவரை வணங்கினால் விவசாயம் செழிக்கும்.

சுப்ர கணபதி:- தனது நான்கு கரங்களிலும் கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகிய வற்றை தாங்கியிருப்பார். தனது துதிக்கையில் ரத்தினங்கள் பதித்த கும்பத்தை ஏந்தியிருப்பார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி:- இவருக்கு 5 முகங்களும், 10 கரங்களும் இருக்கும். அபய ஹஸ்தங்களுடன், பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் இவரை வழிபட்டால் விளையாட்டு, வித்தைகளில் புகழ் கிடைக்கும்.

லட்சுமி கணபதி:- வெள்ளை நிறத்தவரான இவர் ஆறு கரங்களைக் கொண்டவர். கரங்களில் பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றையும், துதிக்கையில் மாணிக்க கும்பத்தையும் ஏந்தியபடி அருள்கிறார். தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு காட்சி தரும் இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி:- பிறை சூடி, மூன்று கண்களுடன் காட்சி தருபவர் இந்த விநாயகர். இவர் தாமரை மலரை ஏந்தியபடியும், தன் சக்தியாகிய வல்லபையை அணைத்த வண்ணமும், கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தியபடி அருள்புரிகிறார். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

புவனேச கணபதி:- விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால், கஜமுகாசுரனின் சக்தி ஒடுங்கியது. அவன் சிறிய மூஞ்சுறு வடிவம் கொண்டு ஓடினான். அவன் மீது அமர்ந்து அவனை தனது வாகனமாக்கிக் கொண்ட விநாயகர் இவர். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் வழக்குகள் வெற்றியாகும்.

நிருத்த கணபதி:- மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடாரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக் காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ் திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

ஊர்த்துவ கணபதி:- பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாகும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image



Related Posts with Thumbnails
 
back to top