சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ்

இன்று நாம் பார்க்க இருப்பது சுவாரஸ்யமான 25 கிச்சன் /சமையல் டிப்ஸ்.


  1. கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.

  2. பக்கோடா செய்ய கடலை மாவுக்கு பதில் கடலைப்பருப்பைப் பயன்படுத்தலாம். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து, பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

  3. பூசணி அல்வா செய்யும் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா பொலபொலவென அருமையாக வரும்.

  4. சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

  5. துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். கேஸ் மிச்சமாகும்.

  6. பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

  7. சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.

  8. மளிகைக் கடையில் ‘தையல் இலை’ என்ற பெயரில் விற்கப்படும் மந்தார இலையை பானையில் போட்டு, அதன் மேல் புளியை வைத்தால் நெடுநாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

  9. சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.

  10. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.



  11. வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.

  12. சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.

  13. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

  14. ஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயையும் முட்டையில் நன்றாகக் கலக்கி செய்து பாருங்கள்... டேஸ்ட்டாக இருக்கும்.

  15. பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

  16. இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.

  17. பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.

  18. தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

  19. நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.

  20. பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.

  21. கமலா ஆரஞ்சு பழத் தோல்களை எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். தேநீர் தயாரிக்கும் போது அந்தத் தோலை துளியூண்டு கிள்ளி, தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணம் தூக்கலாக இருக்கும்.

  22. கேஸ் ஸ்டவ்வை சமையல் முடித்து, ஆறியபின், சுத்தமாகத் துடைத்து, நியூஸ் பேப்பரால் துடைக்க "பளிச் பளிச்"
    தான்!

  23. வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.

  24. ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

  25. கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் (Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சூது கவ்வும் (2013) - பாடல் விமர்சனம்

திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட்ஸ்நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'சூது கவ்வும்'.

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களின் மூலம் வெற்றியை குவித்த விஜய் சேதுபதியின் அடுத்த படம் சூது கவ்வும். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா செட்டி நடிக்க படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தினை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை நலன் குமாரசுவாமி இயக்க, ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். வெளியாகியிருக்கும் டீசர், படத்தை பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. வித்தியாசமான நடிப்பு இல்லா விட்டாலும் தனக்கேற்ற திரைக்கதையை தேர்வு செய்து வெற்றி காண்பது விஜய் சேதுபதி தாரக மந்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



படத்தில் நாற்பது வயது நாயகனாக விஜய் சேதுபதி, இளமை நாயகி சஞ்சிதா ஷெட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். விறுவிறுப்பான கதையோட்டத்தில் சிம்ஹா, அசோக், ரமேஷ், நெல்லை சிவா, தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ராதாரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணின் ஆர்ப்பாட்டமான இசையில் "மாமா டவுசுறு...", "காசு பணம் துட்டு மணி..." போன்ற கருத்தாழமிக்க பாடல்களை கணேஷ், முத்தமிழ், கானா பாலா ஆகியோர் எழுதியுள்ளார்கள்.

ஒவ்வொரு பாடலும் பல காலங்களைக்கடந்து நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச்செல்கிறது. போலித்தனமான சமாளிப்புகள் ஏதுமின்றி அந்த அந்தக்காலங்களில் உபயோகித்த இசைக்கருவிகளை வைத்து செவிக்குணவு கொடுத்திருக்கிறார்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம் வாருங்கள்...

01. கம் நா கம் கம்னாட்டி கோ...

சின்னா கணேஷ் குமார் குரல்களில் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு ராப் இசை. விஜயகாந்தின் 'ம்ம்ம்... ஆத்த வரட்டா..' டயலாக் சொருகிய இடம் அருமை. அதிரவைக்கும் இசையில்லாது மைல்டாக அடுக்கடுக்காக ராப் பாடலுக்கேயுரித்தான அளவில் வார்த்தைகளை இடையிடையே அடுக்கி வைத்து ரஹ்மானின் பழைய "பேட்டை ராப்" பை ஞாபகப்படுத்துகிறது.

02. மாமா டவுஸர் கழண்டுச்சு...

ஆண்ட்ரியா பின்னி பெடலேடுத்த பாடல். "மன்மதன் அம்பு"வில் அமைந்த ஒரு பாடல் 'Whos the Hero?' பாடல் வகையை சேர்ந்தது. பாட்ட கேட்கும்போதே ஆடனும் போல இருக்கு.

03. எல்லாம் கடந்து போகுமடா...

கோவை ஜலீல்-ன் குரல் Period Film Music ன் Feel கொண்டு வருவதில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. எம்ஜியார் மன்னாதி மன்னனில் "அச்சம் என்பது மடமையடா..." என்று குதிரையில் சென்றுகொண்டே பாடிக்கொண்டு செல்வது போல அமைந்திருக்கிறது. தனியாக ஒரு தபேலாவும் , கொஞ்சம் வயலினுமாக நம்மை அந்த 50-60 காலங்களுக்கு வெகு எளிதாகக் கூட்டிச்செல்கிறது.

04. தீம் மியூசிக்(Sudden Delight)...

இந்த தீம் மியூசிக், ஜேம்ஸ் பாண்ட்-ன் வழக்கமான நம் காதுகளுக்கு புளித்துப்போன பின்னணி இசையின் பாங்கில் அமைத்திருப்பது ரசிக்கும்படியில்லை. புதிதாக ஏதாவது செய்திருக்கலாம்.

05. நான் இமை ஆகிறேன்...

அருமையான வயலின் இழைத்து இழைத்து ஆரம்பிக்கிறது. தாளமேயில்லாது வெறும் வயலினும் பின்னால் கூடவே வந்து கட்டிப்போடுகிறது கேட்பவரை. ஒரு Christmas Carol கேட்ட பீலிங் வருவது இயற்கை. பல இழைகளாக வெவ்வேறு தளங்களில் ஒலிக்கும் வயலின் இழைகள் மனதை உறிஞ்சிக்கொண்டு செல்கிறது. "திவ்யா ரமணி" உணர்ந்து பாடியிருக்கிறார்.

06. காசு பணம் துட்டு Money Money...

கானா பாலா & அந்தோனி தாசன் குரல்களில் Mild Rap ஆக ஒலிக்கிறது இந்த காசு பணம் துட்டு Money Money. நன்கு வெறும் கையால் தாளம் போட்டுக் கொண்டே ரசிக்கலாம் இந்தப்பாடலை. பின்னால் ஒலிக்கும் போலீஸ் சைரன் அவ்வப்போது வந்து போய் அல்ர்ட் செய்துவிட்டுப்போகிறது. மிகவும் எளிமையாக Bathroom Singers-க்காகவே இசைத்திருக்கிறார் சந்தோஷ்.


சூது கவ்வும் பாடல்கள் ரொம்ப ஃப்ரெஸ்ஸாகவும் உற்சாகம் கொடுப்பதாகவும் இருக்கிறது. நேத்து நைட் தான் டவுன்லோட் செஞ்சிக்கேட்டேன் "கம் நா கம் கம்னாட்டி கோ" தான் ரொம்ப பிடிச்சிருக்கு "காசு பணம் ..." பாட்டும் காலையிலிருந்து ரிப்பிட்டில் ஓடிக்கிட்டு இருக்கு. "ஓ மாமா டவுசர் கழண்டுச்சு..." நல்லாயிருக்கு. ஏற்கனவே ட்ரைலர் பார்த்ததும் படம் பார்க்கனும் என்று முடிவு செஞ்சாச்சு...இந்த பாடல்கள் வேற இன்னும் எதிர்பார்ப்பை ஏத்தி விடுது...

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் சூது கவ்வும் பாடல்கள் மிக அருமை. புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Chinnappayal blog.



கருப்பம்பட்டி (2013) - விமர்சனம்

அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் அஜ்மலைத் தேடி சிலபல வாய்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து திருதிரு துறுதுறு, தநா 07 அல 4777, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து இப்போது அவர் நடித்து வெளிவந்த படம் தான் "கருப்பம்பட்டி".

டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் கருப்பம்பட்டி படத்தை இயக்கியுள்ளார் பிரபுசோழன். அஜ்மல் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.

கருப்பம்பட்டி என்ற தலைப்பிலேயே கதையைச் சொல்லி, பாசம், கூட்டுக்குடும்பம் போன்றவற்றின் அறுமை பெருமைகளை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.


படத்தோட கதை என்னனா ...

கருப்பம்பட்டி ஊரில் சொத்து பத்தையெல்லாம் அடகு வைத்து தனது பிள்ளையை நன்றாக படிக்க வைக்கும் அப்பா-அம்மாவுக்கு மகனாக அஜ்மல். இவர் தான் படிக்கும் கல்லூரியில் தன்னை மிகப்பெரிய பணக்காரராக சித்தரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் தனது அப்பா-அம்மாவாக கோட் சூட் போட்டு, பட்டுப்புடவை கட்டி என வாடகைக்கு அப்பா, அம்மா அமர்த்திக் கொள்கிறார். இந்த நேரத்தில் அஜ்மலின் உண்மையான அப்பா-அம்மா அங்கு வர, அவர்களை தன் வீட்டு வேலைக்காரர்கள் என சொல்லும் அஜ்மல், "ஏன் இங்கு வந்தீங்க? இங்கிருந்து போங்க..." எனக்கூறி அவர்களை விரட்டியடிக்கிறார்.

இதே கவலையில் ஊருக்கு திரும்பும் அம்மா இறந்து போகிறார். அம்மாவின் சாவுக்கு ஊருக்கு வரும் அஜ்மல் அவருக்கு கொள்ளிபோட மறுக்கிறார். ஏனென்றால் கொள்ளி போட்டால் மொட்டை அடிக்க வேண்டும். அழகு கெட்டுவிடும் என நினைக்கிறார். இதனை அந்த ஊர் மக்கள் கண்டிக்கின்றனர்.

தன்னை கண்டிக்கும் ஊர் மக்களின் சொத்து பத்திரங்களை திருடிக் கொண்டுபோய் அடகு வைத்து, அந்த பணத்தில் பாரீஸ் சென்று குடியேறுகிறார். அதன்பின் கருப்பம்பட்டி ஊரே காலியாகிறது. இவருடைய சொந்த பந்தங்கள் எல்லாம் சிதறிப் போகிறது. இந்த விஷயத்தை தனது மகன் அஜ்மலிடம் சாவு நிலையில் கிடக்கும்போது சொல்கிறார் தந்தை அஜ்மல்.

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த ஊருக்கு வருகிறார். தனது சொந்தங்களையெல்லாம் ஒன்று திரட்டுகிறார். இதற்கிடையில் அபர்ணா பாஜ்பாயை காதலிக்கிறார். இறுதியில் தன் ஊர்க்காரர்களுடன் அஜ்மல் சேர்ந்து வாழ்ந்தாரா? தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

ஹீரோ அஜ்மல்
அப்பா- மகன் என இருமாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் அஜ்மல். 90-களில் வரும் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஒரு சில இடங்களில் நடிப்பை வரவழைக்க கஷ்டப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

கதைகளை நிறையே சலித்துச் சலித்து செலக்ட் செய்துதான் நடிக்கிறேன் என்கிறார் அஜ்மல். இந்தக் கதையும் அப்படித்தானோ..? பாவம் அஜ்மல் :(

ஹீரோயின் அபர்ணா பாஜ்பாய்
அஜ்மல்போல், நாயகி அபர்ணா பாஜ்பாய்-ம் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாஜ்பாய் பாவாடை,தாவணியில் மட்டுமே கிராமத்து பெண்ணாக ரசிக்க வைக்கிறார். ஆனால் க்ளோசப்பில் பயமுறுத்துகிறார்.

கல்லூரி காலங்களில் அஜ்மலிடம் தனது காதலை சொல்லும்போது, அவர் அதை மதிக்காமல் கிண்டல் செய்யும்போது தன்னுடைய உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்பதால் இவரது நடிப்புக்கு வாய்ப்பு குறைவே.

எம்.எஸ்.பாஸ்கர், ஜெகன், ஸ்ரீநாத்
கல்லூரி விடுதி வார்டனாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முதல் பாதி முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய தோற்றம், நகைச்சுவை கலந்த ஆங்கிலப் பேச்சு என அட்டகாசமாக பண்ணியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் நண்டு ஜெகன், ஸ்ரீநாத் என இருவரும் காமெடி என்கிற பெயரில் காதுகளுக்கு இரைச்சலைக் கொடுத்திருக்கிறார்கள்.

காமெடிக்காக ரொம்பவே கஷ்ட்டப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய கஷ்ட்டத்தைப் பார்த்து, ரசிகர்கள் இறக்கப்பட்டு சிரிக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் ஜெகனின் காட்டுகத்தலில் நமது இரண்டு காதுகளும் பஞ்சரானது தான் மிச்சம்.



இயக்குனர் பிரபுராஜ சோழன்
உறவுகளோடு வாழ்கிற வாழ்க்கைதான் சந்தோஷம். பணம் ஒன்றும் பெரிதில்லை என்ற கதையை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார். சென்டிமென்ட்டுக்கள் கொஞ்சம் காமெடியை புகுத்தி சொல்லியிருக்கிறார். கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை, வசனத்தில் கவனம் செலுத்தாமல் போனதுதான் வருத்தமளிக்கிறது.

இசை கண்ணன்
கண்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். இந்தி இசையமைப்பாளர் பப்பிலகரியின் குரலில் ஒலித்த 1980 காலகட்டப் பாடலும், கருப்பம்பட்டி பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.

அஜ்மலின் உறவினர்கள் கும்பலில் தேவதர்ஷினி, சேத்தன், மகாதேவன் ஆகிய மூன்று பேர் மட்டும் மனதில் நிற்கிறார்கள்.

சந்தோஷ் ஸ்ரீராம், சஞ்சீவியின் கேமரா கருப்பம்பட்டி கிராமத்தின் பசுமை, வெறுமை என அனைத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறது.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
கருப்பம்பட்டி - சுமார்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top