உன் சமையல் அறையில் (2014) - விமர்சனம்

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்ற பொதுக்கருத்துக்கு மீண்டும் வலு சேர்த்திருக்கிறது "உன் சமையல் அறையில்'.

லால், ஸ்வேதா மேனன் நடிப்பில் மலையாளத்தில் மெஹா ஹிட்டான "சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். தமிழுக்கு ஏற்ப மசாலா சேர்த்துள்ளதால் "தலப்பாகட்டு பிரியாணி' போல வாசம் கமகமக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வாழ்க்கை என்பதே சாப்பிடுவதற்காகத்தான் என நம்பும் பிரகாஷ் ராஜ். 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காமல், பிரம்மச்சாரியாக நண்பர் குமாரவேலுவைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாழ்கிறார்.

நண்பரின் பலவித வற்புறுத்தலுக்குப் பின்பு, பெண் பார்க்கப்போகும் இடத்தில் சாப்பிட்ட வடையில் மனதைப் பறிகொடுத்து, பெண்ணுக்குப் பதிலாக சமையல்காரரை (தம்பி ராமையா) கையோடு வீட்டுக்கு அழைத்து வருமளவுக்கு, சாப்பாடுதான் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பிரகாஷ் ராஜுக்கு.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகா, தகுந்த வரன் கிடைக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாக இருக்கிறார். பிரகாஷ் ராஜ், சிநேகாவுக்கு இடையே, ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல் நட்பாகி, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகிறது. இருவரும் சந்தித்துப் பேச நினைக்கும்போது, வயதானவன் என சிநேகா நினைத்து விடுவாரோ எனத் தயங்கி, தனக்குப் பதிலாக தனது மருமகனை (நவீன்) அனுப்புகிறார் பிரகாஷ் ராஜ்.

அதே போல சிநேகாவும் தனக்குப் பதிலாக தனது அறை நண்பியை (மேக்னா) அனுப்புகிறார். இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொள்ள, பிரகாஷ் ராஜ் - சிநேகா காதல் என்னவானது என்பதை காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து தாளித்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரகாஷ் ராஜ்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரகாஷ் ராஜ்
வடையை ரசித்து ஆழமாக ருசிக்கும் ஒரு காட்சிபோதும் பிரகாஷ் ராஜின் அபரிமிதமான நடிப்பை விவரிக்க. 45 வயதான ஒருவரின் உளவியலை அப்படியே மனக்கண் முன்பாக நிறுத்துகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் - சிநேகா இடையேயான காதல் காட்சிகளில் இருக்கும் உயிர்ப்பு, நவீன் - மேக்னா காதல் காட்சிகளில் இல்லை.

சிநேகா
படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைவது இவர்களின் காதல் காட்சிகளால்தான். பெண்களுக்குத் திருமணம் தாமதமானாலோ, தடைபட்டாலோ சமூகம் என்ன சொல்லும் என்பதை சிநேகாவின் விம்மி வெடிக்கும் அழுகை உணர்த்துகிறது. வெல்டன் சிநேகா!


இசை இளையராஜா
படத்தில் இன்னொரு ஹீரோ இளையராஜாவின் இசை. இசையில் ராஜாங்கமே நடத்தி இருக்கிறார். நான்கு பாடல்களும் காதுக்கு இனிமையாக அமைந்து "ராஜா ஆல்வேஸ் ராஜா' என்று நிரூபிக்கின்றன. "இந்தப் பொறப்பு தான்' பாடல், உணவு வகைகளின் ருசிகளைச் சொல்லி ரசிக்க வைக்கிறது. "ஈரமாய்' பாடலில் காதல் வழிந்தோடி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. "காற்று வெளியில்' பாடலில் இளையராஜாவின் குரல், கேட்பவர்களை உருக வைக்கிறது.

படத்திற்குப் பெரிய பலம் ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. நம் வீட்டு சமையல் அறைக்குள் வழிமாறி நுழைந்து விட்டோமோ என தடுமாற வைக்கிறது இவரது ஒளிப்பதிவு.

படத்தில் வரும் காட்டுவாசி பாத்திரம்தான் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் அழகாக இருந்து இருக்குமே...

எப்போதாவது ஒரு தடவைதான் இதுபோன்ற "ஃபீல் குட்' படங்கள் தமிழில் வரும். அந்த வகையில் ஆபாசம், வன்முறை இல்லாமல் வெளிவந்துள்ள "உன் சமையல் அறையில்' நாம் அனைவருமே ஒருமுறை வலம் வரலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'உன் சமையல் அறையில்' - ஃபீல் குட் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



சைவம் (2014) - விமர்சனம்

தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் 'சைவம்'. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய் தெவத்திருமகள் போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருக்கிறார்.

"சைவம்" முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம். எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெளிவந்திருக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வேலை நிமித்தமாக வெளியூரிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்தங்கள், திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதால், சந்தோஷமும் கொண்டாட்டமுமாக கலகலப்பாக இருக்கிறது வீடு.

ஒருநாள் கோயிலுக்குச் சென்றிருக்கும் சமயத்தில், குழந்தை சாராவின் பாவாடையில் தீப்பற்றிக் கொள்ள, பதைபதைக்கும் தாத்தா நாசர் தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டைத் தவறவிடுகிறார். அதைப் பார்த்த அர்ச்சகர், "பாவாடையில் தீப்பற்றுவதும், அர்ச்சனைத் தட்டு தவறுவதும் நல்லதல்ல' என்று சொல்லி, "கடவுளுக்கு ஏதோ வேண்டுதல் மிச்சமிருக்கிறது. அதை உடனடியாக நிறைவேற்றுங்கள்' என்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, விபத்தில் இருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். விபத்தில் இருந்து காத்ததற்காக எல்லைச்சாமிக்கு சேவலொன்றை நேர்ந்து விடுகிறார்கள். ஆனால், அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் மறந்துவிடுகிறார்கள். அதை சாராவின் பாட்டி நினைவு படுத்த, அந்த வருட திருவிழாவில் சேவலைப் பலி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்கிறார்கள்.

மறுநாள் காலையில் பார்த்தால் சேவலைக் காணவில்லை. சேவலைத் தேடி வீடு வீடாக, தெருத் தெருவாக அனைவரும் சுற்றுகின்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க, திருவிழா நாளும் வருகிறது. சேவல் கிடைத்ததா? அதைப் பலிகொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்களா? என்பது சுவாரஸ்யமான நகைச்சுவைக் கதை

படத்துல எனக்கு பிடித்த சில ....

குழந்தை நட்சத்திரம் சாரா
படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சாராதான். சேவலிடம் அன்பு காட்டுவது, அதைப் பலிகொடுக்க விடாமல் காப்பாற்றப் போராடுவது, தன் அத்தை மகன் செய்த தவறுக்குத் தான் தண்டனை அனுபவிப்பது, நிதர்சனத்தைப் பெரியவர்களுக்கு உணர்த்துவது என "லவ் யூ சாரா!'

நாசர்
சாராவின் தாத்தாவாக நாசர் வழக்கம்போல ஜெயித்திருக்கிறார். சொந்தங்கள் சேர்ந்த மகிழ்ச்சியில் கிராமத்து தாத்தாக்களைக் கண்முன் நிறுத்துகிறார். நாசரின் மகன் லுத்புதீன் பாஷா இந்தப் படத்தில் நாசருக்குப் பேரனாக அறிமுகமாகியிருக்கிறார்.


சாராவின் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா, அத்தை, அவர்களுடைய குழந்தைகள் என எல்லோருமே தங்களுக்குத் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சிறுவன் ரே பாலின் அட்டகாசங்கள் அதிர வைக்கின்றன. வேலைக்காரராக வரும் ஜார்ஜ், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மாலதி இருவரின் நடிப்பும் அட்டகாசம்.

சண்முகராஜனின் வெற்றிலைக் காமெடி, கோழியைத் தேடிச் செல்லும்போது நிகழும் கலாட்டாக்கள் என சிரிப்புச் சரவெடிக்குப் பஞ்சமே இல்லை.

இயக்குநர் விஜய்
அருமையான திரைக்கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். செண்டிமெண்டான கதையை கலகல காமெடி கலந்து படமாக்கியுள்ளார். ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள். ஆபாச வசனங்கள், குத்துப்பாட்டு, பஞ்ச், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார். சேவலைக் காக்க சாரா படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது, நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

இசை ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகாக இருக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில், உத்ரா உன்னிகிருஷ்ணனின் குரலில் "அழகே... அழகே...' பாடல் மனதுக்கு இதமாக அமைவதோடு, வாழ்வின் ரசனையையும் உணர்த்திச் செல்கிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்ட வீடும், கிராமமும் ஓவியங்களாகத் தெரிகின்றன.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'சைவம்' - குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



Metro (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

மெட்ரோ ரெயில் திட்டம் இன்னும் முழுசா முடியல; அதுக்குள்ள அதுல நடந்த ஊழல் பற்றிய சினிமாவான்னு அதிர்ச்சி அடைஞ்சிடாதீங்க. இது வெளிநாட்டு மெட்ரோ ரெயில் ப்ராஜக்டில் நடந்த ஊழலைப் பற்றி வந்திருக்கும் வெளிநாட்டுப் படம்.

ரஷ்யாவில் சுரங்கப்பாதைக்குள் விபத்தில் சிக்கும் மெட்ரோ ரெயில், அதில் பயணித்த பயணிகளின் நிலை, மீட்பு போராட்டம் என பரபரப்பான காட்சிகளை பதிவு செய்திருக்கும் ஆக்சன் படம் மெட்ரோ.

படத்தோட கதை என்னனா ...

நாயகன் செர்ஜி புஸ்கிபலிஸ் தன் மனைவி ஸ்வெட்லானா கோட்சென்கோவா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் மனைவி ஸ்வெட்லானா தன் காதலன் அனடோலியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஒருநாள் அதிகாலையில் மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு முன் அதன் வழித்தடத்தில் நீர் கசிவதை காண்கிறார் ஒரு பணியாளர். இதை மேலதிகாரிகளிடம் கூறுகிறார். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இதை தடுக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று உணர்கிறார் பணியாளர். அதிகாரிகளோ, இவர் குடித்து விட்டு உளறுவதாக கூறுகிறார்கள். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பலதரப்பட்ட மக்கள் செல்லும் மெட்ரோ ரெயில் காலையில் புறப்படுகிறது. அதில் செர்ஜி தன் மகளை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் அதில் ஸ்வெட்லானாவின் காதலன் அனடோலியும் பயணம் செய்கிறார்.

மெட்ரோ ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் நீர் கசிவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஓட்டுனர். பயத்தில் திடீரென பிரேக் பிடிக்கிறார். இதனால் மெட்ரோ ரெயில் ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகிறது. இதில் பலருக்கு காயமும் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதில் செர்ஜி மற்றும் மகள், அனடோலி மற்றும் சிலர் சிறு காயங்களோடு உயிர் பிழைக்கிறார்கள்.


பிழைத்தவர்கள் சிலர் மெட்ரோ ரெயில் செல்லும் பாதையில் தப்பித்து செல்கிறார்கள். செல்லும் வழியில் நீர் கசிவதால் மின்சாரம் பாய்ந்து பலர் உயிர் இழக்கிறார்கள். ஆனால் செர்ஜி, அவருடைய மகள், அனடோலி, மற்றும் ஒரு காதல் ஜோடி மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு மெட்ரோ ரெயிலை விட்டு செல்கிறார்கள். ஒரு பக்கம் நீர் கசிந்து கொண்டே வருகிறது. இவர்கள் செல்லும் வழியில் மெட்ரோ ரெயிலின் ஒரு பாகம் அதிக நீர் வரத்தால் துண்டிக்கப்பட்டு இவர்கள் மேல் மோத வருகிறது. அதிலிருந்து தப்பித்து ஒரு குகைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.

உயிர் பிழைத்தவர்கள் சிலர் அடுத்த ஸ்டேசனுக்கு சென்று விடுகிறார்கள். மேலும் போலீசுக்கு தகவல் கொடுத்து மீட்பு பணிகளை தொடங்க வற்புறுத்துகிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், அதிகமாக நீர் கசிந்து வருவதாலும் மீட்பு பணிகள் செய்ய முடியாமல் போகிறது.

இறுதியில் குகைக்குள் மாட்டியிருக்கும் செர்ஜி, மகள், அனடோலி, மற்றும் அவர்களுடன் இருப்பவர்களை போலீசார் மீட்டார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

செர்ஜி புஸ்கிபலிஸ்
படத்தில் நாயகன் செர்ஜி அளவான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தன் மகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று துடிப்பது, அவள் தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்று உருகுவது போன்ற காட்சிகளில் இவரின் நடிப்பு பாராட்ட வைக்கிறது. சிறுமியாக வருபவர் அழகாக நடித்திருக்கிறார்.


ஸ்வெட்லானா கோட்சென்கோவா
நாயகி ஸ்வெட்லானா தன் மகள் பற்றி பதறும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் ஆண்டன் மெகர்டிச்வ்
பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம். ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக உள்ளது. மெட்ரோ ரெயில் விபத்தை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள். மெட்ரோ ரெயிலை மட்டுமே வைத்து அதில் காதல், பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்த இயக்குனர் ஆண்டனை பாராட்டலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'மெட்ரோ' - ஆபத்து!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



பப்பாளி (2014) - விமர்சனம்

அரசூர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் + ஏ.ரஞ்ஜீவ்மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பப்பாளி. இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன்.

கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்திருக்கிறார்கள் .

விஜய் எபிநேசர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். 3

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.கோவிந்த மூர்த்தி. இவர் வெற்றி பெற்ற கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

படத்தோட கதை என்னனா ...

சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் மிர்ச்சி செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம் தன் காதலை சொல்ல, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இஷாரா தன் தாய் சரண்யாவிடம் செந்திலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். செந்திலை பார்த்தவுடன் சரண்யாவுக்கு பிடித்துவிட, காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அப்போது செந்தில் தனது லட்சியமான ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதைக்கேட்ட சரண்யா, தன் வாழ்வில் நடந்த கதையை கூறுகிறார்.

'என் கணவர் நரேன் என்னைத் திருமணம் செய்வதற்கு முன் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டாரின் எதிர்ப்பால் அவரால் அவருடைய லட்சியத்தை அடைய முடியவில்லை.

இன்று வரை அதை நினைத்து அவர் வருத்தப்படுகிறார். என்னால் தான் அவரால் விஞ்ஞானியாக முடியவில்லை என்று நான் நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். அதேபோல் உங்கள் வாழ்க்கையும் வீணாகிவிடக்கூடாது, உங்கள் லட்சியத்திற்கு என் மகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது’ என்று செந்திலிடம் கூறுகிறார்.

இதைக்கேட்ட செந்தில், உங்கள் பெற்றோர்கள் உங்களை வெறுத்து ஒதுக்கியதால்தான் உங்கள் கணவரால் லட்சியத்தை அடைய முடியவில்லை. உங்கள் பெற்றோர்கள் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் நிச்சயமாக தேர்வு எழுதி வெற்றிப்பெறுவேன் என்று கூறுகிறார்.

செந்திலின் கருத்தை ஏற்றுக் கொண்ட சரண்யா தன் முடிவை மாற்றிக் கொண்டு, செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிப்பெற ஒத்துழைப்பு தர முடிவு செய்கிறார். அதே சமயம் செந்திலின் தந்தையான இளவரசு, ஓட்டலுக்கு ஆசைப்பட்டு செந்திலை வேறொரு ஓட்டல் முதலாளியின் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

இத்திருமணத்தை நிறுத்த வேறு வழியில்லாமல் தன் மகள் இஷாராவுக்கும், செந்திலுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சரண்யா. பின்பு தன் மாப்பிள்ளையை எப்படியாவது ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று சரண்யா மற்றும் அவரது கணவர் நரேன் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை இளவரசு தடுக்க முயற்சி செய்கிறார்.

இத்தனை தடைகளையும் கடந்து செந்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மிர்ச்சி செந்தில்
படத்தில் செந்தில் தன் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், சென்டிமென்ட் என நடிப்பை நன்றாக செய்திருக்கிறார். தன்னுடைய தோல்விகளை நினைத்து ஒவ்வொரு முறையும் சரண்யாவிடம் அழுது வருத்தப்படும் காட்சியில் நமக்கே லேசான சோகத்தை வரவழைத்துவிடுகிறார். இன்னும் நிறைய படங்கள் கிடைத்து நடித்தால் ஒரு லெவலுக்கு வரலாம்.

இஷாரா
நாயகி இஷாரா, நடுத்தர குடும்பப் பெண்ணாக பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் கொஞ்சம் கண்ணியம் காத்து, சில காட்சிகளில் அதைக் காற்றில் பறக்கவிட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி பெரிய அளவில் நம்மை கவரவில்லை என்றாலும் உறுத்தவும் இல்லை.

சரண்யா பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் அன்னையாக பல படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வந்தார். தற்போது அன்னையாக மட்டுமல்லாமல் சிறந்த மாமியாராகவும் வலம் வருவார் என்பதற்கு இப்படம் உதாரணம். படத்தின் பெரும் பகுதியை இவருடைய கதாபாத்திரமே தாங்கிச் செல்கிறது. அதை உணர்ந்து நடிப்பை திறம்பட செய்திருக்கிறார். போனில் அவர் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!

சிங்கம்புலி
காமெடி கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை துரத்தித் துரத்தி காதல் செய்யும் காட்சிகள், காதலையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசும் வசனங்கள் அருமை.


இளவரசு
நரேன், இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். அதிலும் தன மகன் தன்னை எதிர்த்து திருமணம் செய்து, தன கனவை தரைமட்டமாக்கிவிட்டான் என்பது தெரிந்ததும் இளவரசுவின் அட்ராசிட்டி இருக்கிறதே.. சூப்பர்..

இசை - விஜய் எபிநேசர்
விஜய் எபிநேசர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் திறம்பட செய்திருக்கிறார். விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். ‘மனைவி வீட்டில் வாழப்போகும் பையா…’ ரீமிக்ஸ் சூப்பர்!

இயக்குனர் கோவிந்த மூர்த்தி
குடும்பக்கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கோவிந்த மூர்த்தி, அதில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஐஏஎஸ் தேர்வு எழுத முயற்சி செய்பவர்களுக்கு இப்படம் நல்ல ஊக்கமாக இருக்கும்.

இதுவரை ஒருவனின் வெற்றிக்கு அவனது பெற்றோர்களோ, அண்ணனோ, நண்பர்களோ அல்லது மனைவியோ, காதலியோ உதவி செய்வதாக வந்த படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்க ஒரு மருமகனின் வெற்றிக்காக ஒட்டுமொத்த மாமனார் குடும்பமும் துணை நிற்பது என்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'பப்பாளி' - கசப்பும் இனிப்பும் கலந்த சுவை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



Related Posts with Thumbnails
 
back to top