சென்னையில் ஒருநாள் (2013) - விமர்சனம்

டிராஃபிக்கை தமிழில் எடுக்க விருப்பப்படுகிறேன் என்று கமல் சொன்ன பிறகு டிராஃபிக் பற்றி தமிழில் அதிகம் பேச ஆரம்பித்தனர். கேரளாவில் வெற்றி பெற்ற "டிராபிக்" என்ற மலையாள படமே தமிழில், "சென்னையில் ஒரு நாள்" ஆகியிருக்கிறது. ஹிதேந்திரனின் இதய தானம் சம்பவம்தான் கதையின் கரு.

சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயகுமார், சேரன், மல்லிகா, பிரகாஷ்ராஜ், பிரசன்னா, இனியா, ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, பாலாசிங், மனோபாலா, சந்தானபாரதி, சுப்பு பஞ்சு, சச்சின், பார்வதி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஷாகித் காதர் டைரக்டு செய்துள்ளார். ஐ பிக்சர்ஸ் மற்றும் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.


படத்தோட கதை என்னனா ...

ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் சச்சின். டி.வி நிருபராக சாதிக்க வேண்டும் என்பது கனவு. முதல்நாளே முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜை பேட்டி எடுக்கும் வாய்ப்பு. நண்பனுடன் பைக்கில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள். யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலை. ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.

தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார். சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூருக்கு 170 கி.மீட்டர். அதை ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டும். நெரிசலான போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலையில் சீறும் வாகனங்கள். இதைத்தாண்டி சவாலை எதிர்கொள்கிறது, போலீஸ் கமிஷனர் சரத்குமார் தலைமையிலான டீம். இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற போலீசார் அனைவரும் பின்வாங்கும்போது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில், காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’


படத்துல எனக்கு பிடித்த சில ....

சேரன்
டிராபிக் கான்ஸ்டபிள் சேரனின் வாழ்க்கை அழுத்தமானது. லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பிறகு பணியில் சேரும் போது, அவருடைய தங்கையே அவரை மதிக்காமல் இருக்க, எப்படியாவது இந்த கலங்கைத்தை போக்க வேண்டி, இந்த பணியை தான் செய்வதாக ஒப்புக்கொள்கிறார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கறைகளை துடைப்பதற்கான முயற்சியில், சென்டிமெண்ட் ஏரியாவை சொந்தமாக்குகிறார்.

ஜெயப்பிரகாஷ் vs லட்சுமி ராமகிருஷ்ணன்
மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா. உருக்கி விடுகிறார்கள்.

"யாரோ ஒரு உயிரை காப்பாத்தறதுக்காக, என் மகனை கொன்னுடாதீங்க" என்று உருகும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதியர் கலங்க வைக்கின்றனர். "அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?" என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பது, சோகமும் சுகமும் கலந்த கவிதை. மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில், படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.

பிரகாஷ்ராஜ்
புகழ் போதையிலும், பணத்திலும் மிதக்கும் முன்னணி நடிகராக பிரகாஷ்ராஜ். கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். மகளின் பாசத்தையே பரபரப்புச் செய்தியாக்கும் தந்திரம், யதார்த்தம் புரியாமல் தன் செல்வாக்கால் எதையும் சாதித்து விடலாம் என்ற இறுமாப்பு என பிரமாதப்படுத்துகிறார்.



புதுமுகங்கள்
விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டாக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள். சச்சினின் காதலியாக வரும் பார்வதியின் அழகும், நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. மின்னல் போல் வந்து மறையும் சச்சின், ஆழமாகப் பதிகிறார்.

ராதிகா
பிரகாஷ்ராஜின் மனைவி. கேரக்டர் பவர்புல். "நாளைக்கு நீங்க மார்க்கெட் இல்லாம வீட்ல இருக்கும்போது, உங்க பக்கத்துல இருக்குறது நானும், உங்க மகளும் மட்டும்தான்" என்று நெற்றிப்பொட்டில் அடித்து உட்கார வைக்கிறார். பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா... ராதிகா தான்.

சரத்குமார்
பொறி பறக்கும் சண்டை, படபடக்கும் துப்பாக்கி, மாடிப்படியில் ஏறி இறங்கும் ஸ்டைல், பஞ்ச் டயலாக் இல்லாமல், மிடுக்கான போலீஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி, படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.



இயக்குனர் ஷஹித் காதர் & டீம்
ஒரு வரி நிஜக்கதையை, இரண்டு மணி நேர திரைக்கதையாக மாற்றிய விதத்திலேயே மிரட்டுகிறார்கள். வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார். விபத்து ஏற்பட்டு விட்டது. ஆனால், அது யாருக்கு ஏற்பட்டு விட்டது என்பதில் சிறு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, படத்தின் ஆரம்பத்திலே ரசிகர்களை கதையின் வசம் இழுத்து விடும் இயக்குநர் ஷஹித் காதரின் திறமைக்கு ஆயிரம் அப்ளாஸ்கள்.

வில்லன் இல்லாமல், சூழ்நிலைகளையே வில்லனாக்கி, பரபரப்பான ஆக்ஷன் படத்தை உண்மைக்கு நெருக்கமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஷஹித் காதர்.

இதயத்தை எடுத்துச் செல்ல ஒரு டீம் சின்சியராக வேலை செய்ததைப் போல், இப்படத்தை எடுத்துச் செல்ல அவரது தலைமையில் இசையமைப்பாளர் மெஜோ ஜோசப், ஒளிப்பதிவாளர் ஷேஹநாத் ஜே.ஜலால், வசனகர்த்தா அஜயன் பாலா, எடிட்டர் மகேஷ் நாராயண், ஸ்டண்ட் இயக்குனர் மிராக்கிள் மைக்கேல் என, ஒரு பட்டாளமே கடினமாக உழைத்துள்ளது. சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், எனர்ஜி டானிக்.

இசை - மொஜெ ஜோசப்
பாடல்கள் இந்த படத்திற்கு தேவை இல்லை என்றாலும், நேரத்தைக் கறுதி முதலில் ஒரு காதல் பாடல், பிறகு ஒரு சிறிய பாடல், பிறகு இறுதியில் ஒரு பாடல் என்று மொத்தம் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மொஜெ ஜோசப்பின் இசையில் பாடல்கள் சாலையில் கடக்கும் வேடத்தடைகளாக இருந்தாலும், படத்தின் பின்னணி இசை திரைக்கதையை வேகமாகவும், அதே சமயம் உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைக்கிறது.

படத்துல குறையே இல்லையா...? என்று கேட்டால்.... இருக்கு.... என்று சொல்வேன். அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஒரு சில நிமிட அஜாக்கிரதை வாழ்வில் எத்தனை பெரிய சோகத்தை ஏற்படுத்தும்… என்பதை வலியோடு சொல்கிறது ‘சென்னையில் ஒரு நாள்’… இந்த படம் வந்த பிறகாவது விழிப்புணர்வு வரட்டும்..!

சென்னையில் ஒருநாள் - காட்டாயம் பார்க்கவேண்டிய படம்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது ஆந்திர ஸ்பெஷல் செட்டிநாட்டுச் சமையல்.

பச்சைப் பயறு/பாசிப்பருப்பினால் தோசை செய்து அதன் மேல் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத் துண்டுகளைத் தூவி எடுப்பது பெசரட்டு ஆகும். தமிழ் நாட்டு தோசையைப் போன்றது. ஆந்திரர்களின் சிறப்பு உணவு.

சரி.. சரி இனி பெசரட்டு செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

பச்சைப் பயறு - 2 கப்
பச்சரிசி - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:-

  • பச்சைப்பயறையும் அரிசியையும் நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவையுங்கள்.

  • இரண்டையும் ஒன்றாக்கி 1 பச்சைமிளகாய், இஞ்சி, ஒரு வெங்காயம், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

  • அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.

  • இன்னொரு வெங்காயத்தையும், மீதமுள்ள பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

  • வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் மாவில் கலந்து கொள்ளுங்கள்.

  • தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி மெலிதாக பரப்பி வேகவையுங்கள்.

  • கமகமக்கும் ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

  • வதக்கிய அயிட்டங்களை மாவில் சேர்க்காமல் தோசைமேல் தூவியும் வேகவைக்கலாம். அலங்காரத்துக்கு அலங்காரமும் ஆயிற்று... கூடுதல் ருசியும் ஆயிற்று!

  • பெசரட்டுடன் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி ஆகியவை தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பரதேசி (2013) - விமர்சனம்


"அவன்-இவன்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் ஆறாவது படம் 'பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா, தன்ஷிகா, வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘பரதேசி' படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்'. இரண்டாவதாக 'கல்லறைத்தோட்டம்' என வைத்தார்கள். இறுதியாகத்தான் ‘பரதேசி’ தலைப்பு உறுதியானது.

ரெட் டீ (‘எரியும் தணல்’) என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்பட்டப் படம். 1940களில் ஆங்கிலே‌‌யர் நம் மண்னை ஆண்டபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இப்படத்தின் கதைக்களமாக்கியுள்ளார்.


படத்தோட கதை என்னனா ...

1939-ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்குகிறது கதை. ஊர் கோடாங்கியாக இருக்கும் அதர்வா, உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல், தெருதெருவாக சென்று கொட்டடித்து சேதி சொல்லி, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்பா, அம்மாவை இழந்த அதர்வாவுக்கு பாட்டி மட்டுமே துணையாக இருக்கிறார். இந்நிலையில், அந்த ஊரிலேயே வசிக்கும் வேதிகா மீது அதர்வா காதல் வயப்பட்டு, இந்த காதல் ஊடலாகவும் மாறுகிறது.

இந்நிலையில், ஊரில் பஞ்சம் ஏற்பட, பிழைப்பு தேடி பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வா, அங்கு கங்காணி ஒருவரை சந்திக்கிறார். அதர்வா மூலம் ஊர் மக்களை சந்திக்கும் கங்காணி, தன்னுடைய ஊரில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாக இருக்கிறது. அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. நல்ல சம்பளம், ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைக்கிறார்.

வறட்சியின் பிடியில் கிடந்து சாவதைவிட அங்கு சென்று ஒரு வாய் சோறு உண்டு காலத்தைத் தள்ளலாம் என முடிவெடுக்கும் கிராம மக்களிடம், கங்காணி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, முன்பணத்தையும் கொடுத்து தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். 48 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு ஒருவழியாக தேயிலைத் தோட்டத்துக்கு வந்து சேர்கிறார்கள்.

இந்நிலையில், ஊரில் அதர்வாவுடன் நெருங்கிப் பழகிய வேதிகா கற்பம் அடைகிறாள். இதுதெரிந்து, அவளது வீட்டில் பிரச்சினை வர அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். இதனால், அதர்வாவின் பாட்டி வேதிகாவுக்கு அடைக்கலம் தந்து, தனது வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.


தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டு, 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழும் தன்சிகாவை சந்திக்கிறார் அதர்வா. ஆதரவற்று இருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் அதர்வா.

இந்நிலையில், வேதிகா கற்பமான விஷயம் பாட்டி அனுப்பும் கடிதம் மூலம் அதர்வாவிற்கு தெரிய வருகிறது. எனவே, வேதிகாவைப் பார்க்கத் துடிக்கும் அதர்வா, விடுமுறையில் ஊருக்கு சென்றுவர நினைக்கிறான். ஆனால், விடுமுறை கொடுக்கமுடியாது. மேலும் சில ஆண்டுகள் நீங்கள் இங்கு பணிபுரிய வேண்டும் என சம்பளத்தை பிடித்துக் கொண்டு ஊர் மக்களை ஏமாற்றுகிறார் கங்காணி.

இதனால் ஏமாற்றமடைந்த அதர்வா, தேயிலைத் தோட்டத்திலிருந்து தப்பித்து செல்ல முடிவெடுக்கிறார். ஒருமுறை தப்பித்துச் செல்லும்போது, கங்காணியின் ஆட்கள் அதர்வாவை பிடித்து விடுகின்றனர். இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாதபடி அதர்வாவின் கால் நரம்பை துண்டித்துவிடுகிறார்கள்.

கடுமையான வேலைப்பளு, சரியான மருத்துவ வசதி இல்லாமை மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் நிறைய பேருக்கு விஷ காய்ச்சல் வந்து இறந்து போகிறார்கள். இந்த விஷக்காய்ச்சலுக்கு தன்ஷிகாவும் பலியாகிறாள்.

இதிலிருந்து தப்பித்து அதர்வா, வேதிகாவை சந்தித்தாரா? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விடுவித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

கதாநாயகன் அதர்வா

ஊர் கோடங்கியாக வரும் கதாநாயகன் அதர்வா, முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கண் அசைவில் இருந்து நடை, உடை, பாவனை என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார்.

தனக்கு சாப்பாடு போடாத கோபத்தில் தனியே அமர்ந்து இவர் கொட்டடிக்கும் காட்சியில் நம்மை பரிதாபப்பட வைக்கிறார். படம் முழுக்க கோணிப் பையையே உடையாகவும், செருப்பே போடாமலும் நடித்துள்ள அதர்வாவுக்கு மிகப்பெரிய சல்யூட். கிளைமாக்சில் இவர் கதறி அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

"ஹேட்ஸ் ஆப் அதர்வா. அதர்வாவுக்கு பல விருது நிச்சயம்!

வேதிகா

கிராமத்து அங்கம்மாவாக + அதர்வாவின் காதலியாக வரும் வேதிகாவுக்கு உண்மையிலேயே பாராட்டத்தக்க வேடம். கவர்ச்சி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்த வேதிகா இப்படத்தின் முதல்பாதியில் நடிப்பு யுத்தமே நடத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

தன்னுடைய முகத்தை மட்டுமல்லாமல், கை, நகம் என அனைத்தையும் கருப்பாக்கி, உடல் அமைப்பையே மாற்றி வாழ்ந்துள்ளார்.

அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண்டுங்கெட்டானான அதர்வாவின் கருவை தன் வயிற்றில் சுமந்து, தனது வீட்டாரால் ஒதுக்கிவைக்கப்படுவதும், பின் க்ளைமாக்ஸில் அதர்வாவுக்கு பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார்.

ரித்விகா

வேதிகாவின் தோழியாக வரும் புதுமுக நாயகி ரித்விகா நெஞ்சை வருடுகிறாள். ரித்விகாவின் கணவனாக வரும் கார்த்திக்-ன் நடிப்பு மெய்சிலிர்க்கிறது. இந்த கணவன்-மனைவி ஜோடி பல இடங்களில் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது.

இன்னொரு நாயகி தன்ஷிகா

‘அரவான்’ புகழ் தன்சிகா நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இவருடைய நடிப்பு அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. மரகதம் கேரக்டரில் அதர்வாவிற்கு முந்தைய செட் அடிமையாக ஒரு ‌பெண் குழந்தையுடன், புரு‌ஷனை தொலைத்துவிட்டு படும்பாடு சொல்லிமாளாது. இதுநாள்வரை பாலா பட நாயகர்கள் அளவு, பாலா பட நாயகிகள் பேர் வாங்கியதில்லை எனும் குறையை போட்டி போட்டுக்கொண்டு போக்குவார்கள் தன்ஷிகாவும், வேதிகாவும் ‌என நம்பலாம்.

பாலா

முதல் பாதி முழுக்க காதல், காமெடி என ஆரம்பித்து, கிளைமாக்சில் நெஞ்சை அதிர வைக்கும் காட்சிகள் என தனக்கே உரித்தான பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார் பாலா.

முதல் பாதியில் பொழுதுபோக்கு அம்சங்களை கொடுத்த பாலா, இரண்டாம் பாதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தபட்டு, பல்வேறு கொடுமைகள் அனுபவித்ததற்கு ஆங்கிலேயர்கள் மட்டும் காரணமல்ல, நம் இன மக்களும்தான் என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பாலா.

ஒரு இனத்தைப் பற்றிய கதை என்பதால் படம் முழுக்க காமிராவில் குறைந்தபட்சம் 50 பேர் இருந்து கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேரிடமும் இவ்வளவு அழுத்தமான நடிப்பை பாலா எப்படி வாங்கினார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.

பாலா தான் யார் என்பதை பிதாமகனில் காண்பித்து விட்டார் மேலும் ஒருமுறை அதை நிருபித்து விட்டார் சல்யுட் பாலா சார் விருது நிச்சயம் உண்டு

இசை G.V.பிரகாஷ்

G.V.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. அவற்றை படத்தில் காட்சியப்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். படத்தின் டைட்டில் போடுவது முதல் கடைசி வரை படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைப்பதில் இவரின் பங்கும் இன்றியமையாதது.

வசனகர்த்தா நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் மொழிபெயர்ப்பு செய்த ‘எரியும் தணல்’ நாவலின் தழுவலே இந்த பரதேசி. நாஞ்சில் நாடனே இப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய வசனங்கள் சில இடங்களில் சற்று முகம் சுளிக்க வைக்கும் நகைச்சுவையாக இருந்தாலும் பல இடங்களில் கதை கருவின் உண்மை தன்மையை விளக்கி கூறியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் செழியன்

சுதந்திர போராட்டத்திற்கு முன்பு நடக்கும் நடக்கும் கதை என்பதால் உடை, அலங்காரம், செட், வசன உச்சரிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒருங்கே காட்சிப்படுத்தி நம் கண்களில் நீங்கா இடம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தியே லைட்டிங் அமைத்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

கிஷோரின் "நச் என்ற படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

மொத்தத்தில் ‘பரதேசி’ விருதுகள் பல குவிக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமாவில் இந்த மாதிரி படம் வந்ததில்லை !!இனி வர போவதும் இல்லை... படம் நெஞ்சை உருக்குகிறது!!

பரதேசி - தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம் 'பரதேசி' தவிர்க்காமல் பாருங்கள்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பரதேசி படம் பற்றிய சில தகவல்கள்!

"அவன்-இவன்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் ஆறாவது படம் 'பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா, தன்ஷிகா, வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



இப்படம் குறித்து சுவையான பத்து தகவல்கள் உங்கள் பார்வைக்கு இதோ :-

01. ‘பரதேசி' படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்'. இரண்டாவதாக 'கல்லறைத்தோட்டம்' என வைத்தார்கள். இறுதியாகத்தான் ‘பரதேசி’ தலைப்பு உறுதியானது.

02. பாலா தன்னுடைய படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுணுக்கமாக சித்தரிப்பது வழக்கம். படத்தில் கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பு நன்றாக இருக்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார். இதற்காக ரொம்பவும் மெனக்கெடுவார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தவில்லையென்றால் நடிகர்களிடம் லேசாக கடிந்து கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தில் அதர்வாவை ஒரு வார்த்தைகூட திட்டவில்லையாம். பலமுறை ரீடேக் வாங்கியபோதும் அமைதியோடு அதர்வாவுக்கு சொல்லிக் கொடுத்தாராம் பாலா.

03. படம் முழுக்க கோணியையே உடையாக அணிந்து வாழ்ந்திருக்கும் அதர்வா, பாலாவின் நினைவாக அந்த உடையை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம்.

04. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் உடன் முதன்முதலாக இணைந்திருக்கும் பாலா, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவின் ஆசிக்குப் பிறகே பிறரிடம் காட்டும் முடிவில் இருக்கிறாராம்.

05. இந்த படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து பாலாவிடம் "அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு வழங்குங்கள். வெட்கத்தை விட்டு கேட்கிறேன்" என்று கேட்டிருக்கிறார். ஆகவே, அடுத்த படத்திலும் வைரமுத்துக்கே வாய்ப்பு வழங்க உள்ளாராம் பாலா.



06. இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், என்ன காரணமா தெரியவில்லை. கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்.

07. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்தபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டாராம் பாலா. படப்பிடிப்பு நடந்த சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் தன்னையும் மறந்து இரண்டு நாட்கள் படுத்து உறங்கி இருக்கிறார்.

08. இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாலா படங்களிலேயே மிகக்குறுகிய காலத்தில் (90 நாட்களில்) எடுத்த ஒரே படம் பரதேசிதான். எனவே, தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இதே வேகத்தில் செய்ய முடிவெடுத்திருக்கிறார் பாலா!

09. பாலா-வின் படம் என்றாலே, பெரும்பாலும் நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் விறுவிறுப்பாக செல்லும். இறுதியில் வலிமையான கருத்து இருக்கும். அந்த வரிசையில் 'பரதேசி'-யும் இடம்பெறும் என்பதை 100 சதவீதம் நம்பலாம்.

10. ரெட் டீ (‘எரியும் தணல்’) என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்பட்டப் படம். 1940களில் ஆங்கிலே‌‌யர் நம் மண்னை ஆண்டபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இப்படத்தின் கதைக்களமாக்கியுள்ளார்.

பாலாவின் பரதேசி படத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிய ஆரம்பித்துள்ளன. இப்படம் வருகிற 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது.


தெரியாத சில தகவல்கள்...


பாலாவின் பரதேசி ஒரு புறம் இப்படி இருக்க நம்மில் பலருக்கும் தெரியாத இன்னொரு பரதேசி படத்தை பற்றி பாப்போம்.

நடிகர் சிவாஜியின் முதல் படம் என்ன என்று கேட்டால் அனைவரும் யோசிக்காமல் சொல்வோம் பராசக்தி என்று.

உண்மை என்னவென்றால் நாடக துறையில் இருந்து நடிகர் சிவாஜி முதன்முதலில் டப்பிங் பேசுபவராக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் முதன்முதலில் நடித்த படம் "பரதேசி". இது ஒரு தெலுங்கு படமாகும்.

அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த படம் தான் பராசக்தி. திரைக்கு முதலில் பராசக்தி வந்த காரணத்தால் அதுவே அவர் நடித்த முதல் படமாக மாறிவிட்டது.

பரதேசி படத்தின் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் இது நடிகை அஞ்சலிதேவி அவர்கள் தயாரித்த படம் மற்றும் இந்த படத்தில்தான் பழம்பெரும் நடிகர் S.V. ரங்கா ராவ் அறிமுகமானார். இப்படி இரு பெரும் நடிகர்களை அறிமுகபடுத்திய ஒரு படம் தான் பரதேசி.



தன்னுடைய முதல் படமான 'பரதேசி' சரியாக கவனிக்கபடாமல் போனதால் நடிகர் சிவாஜி அதனை மீண்டும் "அந்தமான் காதலி" என்ற பெயரில் அதே கதையை வைத்து 25 வருடங்களுக்கு பிறகு 1977-ல் நடித்தார். அந்த படம் அப்பொழுது மிகபெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடந்த ஒரு சிறிய தவறு இன்று வரை பேசப்படுகிறது. அந்தமான் காதலி படத்தில் திரு. யேசுதாஸ் அவர்கள் பாடிய "திருகோவிலே ஓடிவா..." என்ற பாடல் ஒரு சூப்பர் ஹிட் பாடலாகும் அனால் அதனை 'திரு. யேசுதாஸ்' "தெருகோவிலே..." என்று பாடியிருப்பார்.

பரதேசி படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம்!

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா?

குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் (Institute of Biosciences of Botucatu, Brazil) நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ (Gustavo Castro) தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...



"சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம்.

மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.



நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்" என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்.

உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?!

வளமுடன் வாழ என் வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



விஜய் புதிய படத்தோட பேரு பில்லா ஸாரி… ‘ஜில்லா’!


விஜய் நடிக்கும் புதிய படம் 'ஜில்லா'. இதென்ன அஜித்தின் பில்லாவுக்கு போட்டி படமா என்று கேட்டால் அதைப்பத்தியெல்லாம் எதுவும் சொல்லல. ஆனா ஏதோ ஒரு தெலுங்கு படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணினா எப்படி டைட்டில் வைப்பாங்களோ? அப்படி ஒரு டைட்டிலை ஜில்லான்னு வெச்சிருக்காங்க விஜய் நடிக்கப்போற புதுப்படத்துக்கு.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். ஆர்.பி.சௌத்ரி பேசும்போது சூப்பர் குட் பிலிம்சின் 25-வது படமாக ‘ஜில்லா’ தயாராகிறது. ‘திருப்பாச்சி’ படத்துக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளோம் என்றார்.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்துல துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்- காஜல் அகர்வால் மறுபடியும் ஜோடி சேர்றார்.



கூடுதல் ஸ்பெஷலா இந்தப்படத்துல மலையாள நடிகர் மோகன்லால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.

பூர்ணிமா பாக்யராஜ், தம்பி ராமையா, பரோட்டா சூரி, மகத், ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை நேசன் இயக்குகிறார். ரீமேக் படங்களை டைரக்ட் பண்ணி பாப்புலரான ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல்.

இமான் இசையமைக்கிறார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருது.

ஜில்லா பட பூஜை இன்று காலை தியாகராயநகரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜய் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘லவ்டுடே’, ‘திருப்பாச்சி’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் ஹிட்டாயின. அந்த படங்களின் சாதனையை ‘ஜில்லா’ படம் முறியடிக்கும். காஜல் அகர்வால் நாயகியாக வருகிறார்.

இவ்வாறு விஜய் கூறினார்.

விஜய் - அதிரடி ஆட்டம்

நடிகர் விஜய் மிக வேகமாகத்தான் இயங்குகிறார், அடுத்து வெளிவரப்போகும் தலைவா இன்னும் திரைக்கு வராத நிலையில், அதற்கு அடுத்த படமான ‘ஜில்லா’ வரும் 11-ம் தேதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.

வழமையாக ஒரு படத்திற்கும் அடுத்தப் படத்திற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது இடைவெளிவிடும் விஜய், இப்போது அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதுவும், அடுத்த படம் வெளியாவதற்குமுன், அதற்கு அடுத்த படம்!

தமிழ் சினிமா மார்க்கெட் வேல்யூவில் கிட்டத்தட்ட இவரது இடத்துக்கு அருகில் உள்ள மற்றைய ஹீரோக்கள், தமது அடுத்த படமே எது என்று அறிவிக்காத நிலையில், விஜய்யின் இந்த வேக நடவடிக்கை, அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பது நிஜம்தான்.

துப்பாக்கி வெற்றியைப் பற்றி திரையுலகம் பேசிக்கொண்டிருந்த போதே, அந்த சூடு ஆறுவதற்குள் அதிரடியாக தனது 'தலைவா' பட அறிவிப்பை வெளியிட்டு, மீண்டும் செய்திகளில் பரபரப்பாக அடிப்பட்ட விஜய், 'ஜில்லா' அறிவிப்பின் மூலம், மீடியாக்களில் அடுத்த ரவுண்ட் வருகிறார்.

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'தலைவா' படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுகின்றன. அது ஏன் தெரியுமா?



தலைவா படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுவதற்கு இரண்டு காரணங்கள்.

1. புதுமுக இயக்குநர் நேசன்.

நடிகர் விஜய், ஜில்லா படத்தின் கதையைப் பற்றி ஆஹா... ஒஹோ என்றும், இயக்குநர் நேசன் இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார் என்றும் புகழ்ந்தார். அதையடுத்து அவர்மீது பலரது கவனமும் சென்றது.

தவிர, தற்போது மார்க்கெட்டின் உச்சியில் உள்ள விஜய், நடிக்க சம்மதித்தால் உடனே கதை பண்ண தயாராக பிரபல இயக்குனர்கள் காத்திருக்க, புதுமுக இயக்குநர் ஒருவர்மீது நம்பிக்கை வைத்து தமது அடுத்த படத்தை கொடுத்திருக்கிறார்.



2. மோகன்லால்

'ஜில்லா' படத்தின் கதையும், தமது கதாபாத்திரமும் மோகன்லாலுக்கு மிகவும் பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். விஜய்க்கு அடுத்தபடியான மிக முக்கிய கதாபாத்திரம் என்பது ஒரு ஊகமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில், ‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை சிலர் கவனித்திருக்கலாம்.

‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்விக்கு விடை அறியும் ஆவலும், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஒரு விதத்தில் சொன்னால், ரூ.150 கோடியை விட அதிக பட்ஜெட்டில் தயாராவதாக சொல்லப்படும் (பவர் ஸ்டாரின்) ‘ஐ’ படத்தைவிட, இன்னமும் பூஜையே போடப்படாத ‘ஜில்லா’வுக்கு மீடியா பப்ளிசிட்டி அதிகம்!

‘ஜில்லா’ படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : விறுவிறுப்பு சினிமா



வெள்ளச்சி (2013) - விமர்சனம்

கீதாலயா மூவிஸ் சார்பில் ஆம்பூர் கே.ஆனந்தன் நாயுடு தயாரிக்கும் படம் வெள்ளச்சி. இதில் நாயகனாக பிண்டு நடிக்கிறார். இவர் பாண்டுவின் மகன். இவர் ஏற்கனவே நதியா நடித்த பட்டாளம் என்ற படத்தில் பள்ளி மாணவர்களில் ஒருவராக நடித்து சினிமாவில் அறிமுகமானார். வெள்ளச்சி படத்தின் மூலம் முழு ஹீரோவாக அறிமுகமாகியிறுக்கிறார்.

நாயகியாக சுசித்ரா உண்ணி நடிக்கிறார். கஞ்சா சருப்பு, பாண்டு, செவ்வாளை கிருஷ்ணமூர்த்தி, மதுமாறன், சோமு, சேர்மன், ரெங்கம்மா பாட்டி, சீனு பாட்டி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு இசை இளையராஜா மகள் பவதாரணி.


படத்தோட கதை என்னனா ...

கிராமத்து மன்மதனாக திரியும் செவ்வாளைக்கு ஒரே மகன் பிண்டு. தன் இன்பங்களுக்கு மகன் இடையூறாக வந்து விடுவானோ எனக்கருதும் செவ்வாளை அவனை அடிமைபோல நடத்துகிறார்.

அந்த ஊருக்கு பிழைப்பு தேடி வரும் சுசித்ரா உன்னியை காதலிக்கிறார் பிண்டு. தந்தையின் கொடுமை தாங்காமல் ஊரைவிட்டு செல்ல நினைக்கும் பிண்டுவை, உள்ளூரிலேயே சுயமாக வேலை செய்ய வைக்கிறாள் சுசித்ரா.

ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கும் பிண்டு பெரிய ஆளாக வருகிறார். இத்தனைக்கும் காரணமான வெள்ளச்சியை திருமணம் செய்யப்போகும் நேரத்தில் அவர்கள் காதலை பிரிக்க கொலை செய்ய துணிகிறார் செவ்வாளை.

தந்தை, மகனை பழிவாங்கினாரா, பிண்டு-சுசித்ரா காதல் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிண்டு
கணேசன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் பிண்டு. முதல் படத்திலேயே ரொம்ப வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிண்டு, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்.

அப்பாவை எதிர்க்க துணிவில்லாமல் அவரது கொடுமைகளை சகித்துக்கொண்டே வேலை செய்யும் அப்பாவி கேரக்டரிலும், ரியல் எஸ்டேட்டில் வளர்ந்த பிறகு வெள்ளை வேட்டி, சட்டை, தங்க சங்கிலி பளபளக்க பண்ணுகிற அலப்பறை கேரக்டரிலும் பிண்டு கச்சிதம்.

இரண்டு கேரக்டரிலும் தன் காதலை மென்மையாக கடப்பது அழகு. "நீ விஷத்தை கொடுத்தாக் கூட ஏன்னு கேட்காம சாப்பிடுவேன்" என்று உருகுவதும், காதலியை செல்லமாக அழைப்பதுமாக கிராமத்து யதார்த்த இளைஞனை கண்முன் நிறுத்துகிறார்.

சுசித்ரா
புதுமுகம் சுசித்ரா உண்ணி கேரளத்து புதுவரவு. சுசித்ரா வெள்ளச்சியாக நடித்திருக்கிறார். ஹோம்லியான முகம். கிராமத்து கதாபாத்திரத்திற்கு ரொம்ப கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

ஓடிப்போன தாயின் அவமானம், தந்தையின் கவுரவம் இவற்றுக்கு இடையில் தவித்து நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் காதல் காட்சிகளில் பிண்டுவிடம் இருக்கும் துடிப்பு இவரிடம் மிஸ்சிங்.

பவதாரிணி
பவதாரிணியின் இசையில் அப்பாவின் (இளையராஜா) சாயல். சில காட்சிகளில் அவரது இசையை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். பவதாரினியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் தான் என்றாலும், பாடல் வரிகள் அத்தனையும் புரிகிறது.


செவ்வாளை vs மதுமாறன்
ஹிரோவின் அப்பாவாக நடித்திருக்கும் செவ்வாளையின் குசும்புக்கு அளவே இல்லை. வில்லன், தந்தையாக மிரட்டுகிறார்.

வில்லனாக 'வெள்ளை அண்ணாச்சி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுமாறன், நல்ல அறிமுகம். தமிழ் சினிமாவுக்கு ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் கிடைத்திருக்கிறார்.

கஞ்சா கருப்பு vs பாண்டு
வில்லனாக அறிமுகமாகும் மதுமாறன் காமெடியனாகி விடுகிறார். காமெடியனாக இருக்கும் கஞ்சா கருப்பு, வில்லனாகிறார். "உன் கல்யாணத்துக்கு மொய் எழுத மறந்துடுவேன்" என்று அடிக்கடிச் சொல்லி சிரிக்க வைக்கிறார் பாண்டு.

இயக்குனர் - வேலு விஸ்வநாத்
80-களில் பாரதிராஜா காட்டிய கிராமத்தில் மீண்டும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேலு விஸ்வநாத். காட்சி அமைப்பிலும், வசனங்களின் அந்த சாயல் அதிகம்.

ஊராரிடம் தன் காதலை மறைக்க "என்னை காதலிக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கு?" என்று கேட்கும் ஹீரோயின், அதே வசனத்தை கிளைமாக்சில் பயன்படுத்துவது உட்பட, ஆங்காங்கே பளிச்சிடும் யதார்த்தங்கள் படத்துக்கு பலம். மற்றபடி கிராமம், காதல், பாட்டு, சண்டை எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவும் புதிதாக இல்லையே.

சாய் நடராஜின் கேமராவில் கிராமத்தின் அழகு பளிச்.

இயக்குநர்கள் - ஏன் இப்படி ?

பருத்திவீரன் என்ற ஒரு படம் வெளியானதில் இருந்து க்ளைமாக்ஸை இருக்கத்தோடு முடிப்பதையே சில இயக்குநர்கள் வெற்றி சூத்திரமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அதுதான் தோல்விக்கான முதல் காரணம் என்பதை எப்போதுதான் புரிந்துக்கொள்ளப் போகிறார்களோ.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
வெள்ளச்சி - ஒரு முறை பார்க்கலாம்!

காதலை மறைக்க கதாநாயகி விளையாட்டாகச் சொல்லும் பொய் விபரீதத்தில் முடிவதுதான் வெள்ளச்சி படம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to dinamalar new paper which inspired me to see this movie.




வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்

சேலம்-ஆத்தூர் அருகே, வடசென்னிமலையில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய முருகன் கோவில் உள்ளது. அதன் தல வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்.

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை

மூலவர் : பாலசுப்பிரமணியர்
உற்சவர் : சுப்பிரமணியர்
அம்மன்/தாயார் : வள்ளி & தெய்வானை
தல விருட்சம் : --
தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : --
ஊர் : வடசென்னிமலை
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

  • பங்குனி உத்திரம்
  • திருகார்த்திகை
  • கந்தசஷ்டி
  • தைபூசம்.

தல சிறப்பு:

கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். இந்த மூன்று மூர்த்திகளும் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,
வடசென்னிமலை - 636121,
சேலம் மாவட்டம்.

போன்: +91- 4282 - 235 201.

பொது தகவல்:

5 நிலைராஜ கோபுரம், தொடக்கத்தில் சுயம்புமூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. பக்தர் ஒருவரின் கனவில் சென்ற முருகன் இத்தலத்தில் குழந்தை வடிவாக இருக்க விரும்புவதாக கூறினாராம். அதன்பின் சுயம்புமூர்த்தி சிலைகளுக்கு பின்பகுதியில் பாலசுப்பிரமணியராக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். மூன்று கோலத்தில் முருகன் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலவிநாயகர் அடிவார விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை. மன அமைதி வேண்டுபவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நிலம், வீடு வாங்க விரும்புவோர் மலைப்பாதையில் உள்ள அவ்வையார் சிலை அருகில் கல் வைத்து வேண்டுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

முக்கோல தலம்: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம்.

ஒரேசமயத்தில் முருகனின் இம்மூன்று கோலங்களையும் வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும், பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை. இம்மூன்று கோலங்களும் வாழ்க்கையின் பெரும் உண்மையையும் விவரிக்கின்றது. மனிதன் குழந்தையாக இருக்கும்போது மகிழ்ச்சியின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கிறான். அவனே இல்லற வாழ்க்கை எனும் பந்தத்தில் இருக்கும் போது மகிழ்ச்சியும் துன்பமும் கலந்த கடமையில் உழல்கிறான். எதன் மீதும் பற்றில்லாத துறவற நிலையை அடையும்போது எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

மொத்தத்தில் எதன் மீதும் அதிக பற்று வைக்கவேண்டாம் என இத்தலத்து முருகன் உணர்த்துகிறார்.

சிறப்பம்சம்:

இங்குள்ள தண்டாயுத பாணி கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், தலைப்பாகை அணிந்து காட்சி தருகிறார். நடுமலையில் இடும்பன் சன்னதியும், அதனருகில் நெல்லிக்கனியை முருகனுக்கு அவ்வையார் வழங்கிய காட்சியை விவரிக்கும் சிலையும் உள்ளது. இவ்விடத்தில், பக்தர்கள் வீடு போல கற்களை குவித்து வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் வீடு கட்டும் பாக்கியம் பெறலாம் என நம்புகின்றனர். சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் அறுபது வருடங்களை குறிக்கும்படியாக படிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

வடசென்னிமலையில் இருக்கும் பாலசுப்பிரமணியர் ஒரு குன்றின் மீது கோயில் கொண்டுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொண்டான்.

சிறிது நேரம் விளையாடிய அவன், திடீரென ஒன்றும் சொல்லாமல் குன்றின் மீது வேகமாக ஏறினான். சிறுவர்களும் விளையாட்டு எண்ணத்தில் பின் தொடர்ந்தனர். ஓரிடத்தில் நின்ற அச்சிறுவன், பேரொளி தோன்ற அதன் மத்தியில் மறைந்துவிட்டான். உடன் சென்ற சிறுவர்கள், அதிர்ச்சியடைந்து ஊர்மக்களிடம் நடந்ததை கூறினர். மக்கள் வந்து பார்த்தபோது, சிறுவன் மறைந்த இடத்தில் மூன்று சுயம்பு சிலைகளும், அவ்விடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. சிறுவனாக வந்து அருள் புரிந்தது முருகன்தான் என்றறிந்த மக்கள் இவ்விடத்தில் கோயில் கட்டினர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். இந்த மூன்று மூர்த்திகளும் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சந்தமாமா (2013) - விமர்சனம்

பாலாவின் நந்தா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். முதல்படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

காமெடி நடிகராக இருந்த அவருக்கும், ஹீரோவாகும் ஆசை வந்ததை தொடர்ந்து, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றுதந்ததை தொடர்ந்து, இப்போது சந்தமாமா.

காமெடி ப்ளஸ் கதையம்சம் என்ற மந்திரத்தைப் பயன்படுத்தி தனது ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களை குடும்பத்தோடு தியேட்டருக்கு வரவைக்கும் கருணாஸ், சந்தமாமா படத்தின் மூலமும் அதையே செய்திருக்கிறார்.


படத்தோட கதை என்னனா ...

ஒரு எழுத்தாளனாக பலராலும் அறியப்படவேண்டும் என்ற பெரும் ஆசையுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார். சந்தமாமா என்ற பெயரில் எழுதி, அதனை அவரே அச்சிட்டு, வெளியிட்டு, தனது செலவிலேயே விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

ஆனால், இவரது எழுத்துக்களை படிக்க யாரும் முன்வரவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்வேதாபாசு-வை சந்திக்கும் கருணாஸ் அவர் மூலமாக தன்னுடைய புத்தகங்களை விற்கு முயற்சி செய்கிறார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில், தனக்கு உதவியாக இருந்த ஸ்வேதாபாசுவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மணமகன் திருமணத்திற்கு முன்பே ஓடிவிட திருமணம் நடைபெறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்வேதாபாசு-வுக்கு வாழ்க்கை கொடுக்க கருணாஸ் முன்வருகிறார். அதன்படி திருமணமும் செய்து கொள்கிறார்.

கருணாஸ் சந்தமாமா என்ற பெயரில் எழுதிய கதைகளை எல்லாம் இவர் பெரிதும் மதிக்கும் ஜெ.காந்தன் என்னும் எழுத்தாளர் குப்பை என ஒதுக்கித் தள்ளுகிறார்.

ஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்றால் அனுபவித்து எழுத வேண்டும், அது படிப்பவர்களின் மனசை தொட வேண்டும் என்ற அறிவுரையின் பேரில் அனுபவ ரீதியாக ஒரு காதல் கதையை எழுதி பெயரெடுக்க நினைக்கிறார்.

ஆனால் காதலித்த அனுபவம் தனக்கு இல்லை என தவித்துக் கொண்டிருக்கிற நிலையில், தனது மனைவியை அவள் திருமணம் ஆனவள் என்பது கூடத் தெரியாமலேயே காதலிக்கும் இளைஞனான ஹரீஸ் கல்யாண் வருகிறார். அவனை காதலிப்பது போல தனது மனைவியை நடிக்கச் சொல்கிறார் கருணாஸ். ஆனால் ஸ்வேதாபாசு இதற்கு மறுக்கிறார்.

உடனே, கருணாஸ் எனக்கு காதலில் முன் அனுபவமில்லை. அதனால் நீ அவனை காதலிப்பது போல நடித்தால் அந்த அனுபவத்தை நேரில் பார்த்து நான் ஒரு கதையை வார இதழில் தொடராக எழுதி நல்ல பெயரும், புகழும் அடைவேன் என்கிறார்.

தனது கணவனின் ஆசைக்காகவும், நீண்ட நாள் லட்சியத்துக்காகவும் ஹரீஸ் கல்யாணை காதலிப்பது போல நடிக்க ஆரம்பிக்கிறார் ஸ்வேதாபாசு. ஆனால், ஸ்வேதாபாசு-வை உண்மையாக காதலிக்கும் ஹரீஸ் கல்யாண் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக, அதன் பின் பிரச்சினைகள் துவங்குகிறது.

இந்த பிரச்சினைகளிலிருந்து ஸ்வேதா பாசு மீண்டு வந்தாரா? கருணாஸின் எழுத்தாளனாக பேரெடுக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

கருணாஸ்
சந்தமாமாவாக கருணாஸ். வழக்கம்போலவே அப்பாவியான எழுத்தாளர், கணவர், நண்பன் என கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். ஃபேன் விற்க வந்த ஸ்வேதாபாசு-வை தன்னுடைய ரசிகை என்று எண்ணி, அதன்பிறகு அவர் சேல்ஸ் கேர்ள் என்று தெரிந்தபின் அவர்மீது கோபப்படுவதும், தான் ஒரு எழுத்தாளானாக ஆகவேண்டும் என்பதற்காக ஹரீஸ் கல்யாணை காதலிக்க மனைவியிடம் கெஞ்சுவதும் என ஒரு மொக்கை எழுத்தாளனை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.

ஸ்வேதாபாசு
கதாநாயகியாக ஸ்வேதாபாசு கொள்ளை அழகு. குழந்தைத்தனமான முகம். இவர் படத்தில் அவ்வப்போது காட்டும் முகபாவனைகள் நம்மை கவர்ந்திழுக்கிறது. தனது கணவன் கருப்பாக இருந்தாலும் அவனது நல்ல மனதை அறிந்து அவனுக்காகவே வாழ்வது, அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது என தனது கேரக்டரில் அக்மார்க் மனைவியின் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

ஹரீஷ் கல்யாண்
ஸ்வேதாபாசுவை காதலிக்கும் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். படத்தின் துணை கதாபாத்திரத்திற்கு தூணாய் நின்றிருக்கிறார். மேலும், இந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.

இளவரசு & Co
கருணாஸின் அப்பாவாக வருகிறார் இளவரசு. மகன் எவ்வளவு பணம் கேட்டாலும் காரணம் கேட்காமல் கொடுக்கிறார். அதற்கு இரண்டாம் பாதியில் தரும் பிளாஸ்பேக் மிகச் சாதாரணமாக இருக்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர், பாவா லட்சுமணன், கொட்டாச்சி என சக காமெடி நடிகர்களும் படத்தில் உண்டு, ஆனால் காமெடிதான் இல்லை.


இசை - ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘கோயம்பேடு சில்க்கக்கா’ என்ற குத்துப் பாடலும் ‘யாரோ நீ’ என்ற மெலோடி பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் இது ஸ்ரீகாந்த் தேவாவின் இசை என்பதற்கு அடையாளமாக இருக்கிறதே தவிர புதிதாக வேறொன்றும் இல்லை.

ஒளிப்பதிவு - ஆனந்த குட்டன்
ஆனந்தக்குட்டனின் ஒளிப்பதிவில் கேரளாவில் ‘யாரோ நீ’ பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் அருமை. நடுத்தர பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல காட்சியமைப்புகளை எளிமையாக கையாண்டிருக்கிறார்.

இயக்குனர் - ராதா கிருஷ்ணன்
படம் தொடங்கியது முதல், ஜெ.காந்தன் போலீஸ் ஸ்டேஷனில் கருணாஸின் புத்தகத்தை படித்துவிட்டு கோபப்படும் காட்சி வரை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள். அதன்பின், வரும் காட்சிகளால் கதையை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

குழந்தைகளை கவரக்கூடிய எந்த சமாச்சாரங்களும் இல்லாத இந்தப்படத்தை ஏன் குழந்தைகளுக்கான படம்போல காட்ட முயற்சி செய்கிறார்கள் என்ற கேள்வியை இயக்குனர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கத் தோன்றுகிறது.

இப்படியெல்லாம் செஞ்சுதான் ஒரு மனுஷன் எழுத்தாளன்னு பேரெடுக்கணுமா என்ற கேள்விக்கு படத்தின் இடையிடையே பலமுறை கருணாஸ் பற்றிய வசனத்தில் பதில் சொல்லிவிடுவதால் படத்தின் ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
சந்தமாமா - ஒரே காமெடி மாமா.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to maalaimalar new paper which inspired me to see this movie.





வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு கார வகை. மாலை நேர டீ டைம் ஸ்நாக்காக கொரிக்க ஏற்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி வேளைகளில் தயாரிப்பதற்கு ஏற்ற சுண்டல் இது.

சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் வேர்க்கடலை கார சுண்டல் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

வேர்க்கடலை – 3 கப்
வெங்காயம் – பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 தேவையான அளவு

கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • கடலையை நன்றாக அலசிக் கொள்ளவும். கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரும்வரை வேக விடவும்.

  • மிருதுவாக வெந்த வேர்க்கடலையை தண்ணீர் இன்றி வடிகட்டவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியபின் அதனுடன் வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு,தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டவும். சுவையான வேர்க்கடலை கார சுண்டல் தயார்.

  • தேவைட்டால் மல்லித்தழை தூவி அலங்கரித்து கொள்ளலாம். பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாயையும் பயன்படுத்தலாம்.

  • ருசியான வேர்க்கடலை கார சுண்டல் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்...

கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும் அறிந்த ஒன்றே.

கேன்சர் பற்றிய செய்திகளை கமல் தனது படங்களின் வாயிலாக வழங்கியுள்ளார். அதில் ஒரு சில உங்கள் பார்வைக்கு....



1. நம்மவர் – இன்றும், கமலின் ரசிகர்கள், அவரை அழைக்கும் பெயர்களில் ஒன்றாகவே மாறிப்போன படம் இது. ரவுடிகள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வாத்தியாராக வரும் ஒரு ஆள், அந்த மாணவர்களை மாற்றியமைப்பதே கதை.


2. தசாவதாரம் - பஞ்சாபி பாடகர் அவதார் சிங் தமிழகத்துக்கு வருவதாக ஐந்தாம் அவதாரமெடுக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெயப்பிரதா. பாடகர் கமலை வைத்து தமிழ் சினிமாவின் தலையெழுத்துக்களில் ஒன்றான கேன்சர் வியாதியும் இந்த படத்திலொரு அவதாரமாய் இருக்கிறது. ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது.

தன் மனைவிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு குரலை இழந்தாவது உயிரோடு இருக்க எண்ணும் பஞ்சாபி பாப் பாடகர் அவ்தார் சிங்கின் தொண்டைக்குள் இருக்கும் கேன்சர் பகுதியை வெளியே எடுத்துச் சென்று, அவரை குணப்படுத்தி விடுகிறது ஃபிளேட்சரின் துப்பாக்கி குண்டு.


3. கேன்சர் என்ற நோய் எத்தனை கொடியது என்று முதன்முதலில் புரிய முடிந்தது வாழ்வே மாயம் படத்தில் வரும் ஒரு 'வாழ்வே மாயம்..' பாடல் மூலம் தான்.


4. சமீபத்திய உதாரணம் வசூல்ராஜா MBBS, இதில் கேன்சர் வந்த இளைஞனை காப்பாற்றமுடியாமல் கமல் கண்கலங்கி நடிப்பது நடிப்பாக தெரிய வாய்ப்பிருக்கவில்லை.


5. மலையாளத்தில் கமலின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்த படம் 4 பிரன்ஸ், இதில் ஜெயராம், ஜெய்சூர்யா, குஞ்சாக்கோ போபன், மற்றும் மீரா ஜஸ்மின் என்போர் நடித்திருந்தனர். இந்த நான்குபேரும் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மரணத்தை நோக்கி போகும் இவர்களின் விரத்திப்போக்கில் திருப்புமுனையாக அவர்களை இரட்சிக்கும் பாத்திரத்தில் வருகின்றார் கமல்ஹாசன்.


கேன்சர்

மனிதனின் மகிழ்ச்சியான வாழ்வின் ஒரு பெரும் குறுக்கீடாக இந்த கேன்சர் எனும்நோய் நாளாந்தம் ஒவ்வொருவரினம் வாழ்வில் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றது.

மார்பு புற்றுநோய், கற்பப்பை புற்றுநோய், எலும்பு புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், தோல் புற்றுநோய், இரத்தப்புற்றுநோய், மூளை புற்றுநோய் என பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஒருவருக்கு மட்டுமின்றி அவரை சுற்றமுள்ள சுற்றத்தையும் ஆழாத துயரத்தில் ஆழ்திவிடுகின்றது.

கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும் அறிந்த ஒன்றே.


வாழ்வே மாயம் திரைப்படத்தில் ஒரு புற்றுநோய் உள்ளவராக கமல் நடித்திருந்தாலும், இந்த கேன்சர் என்ற நோய் கமலை சுற்றியுள்ள, கமலுக்கு நெருக்கமான பலரை காவு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றே.

சாவித்திரியில் இருந்து கௌத்தமி வரை அந்த நோய்க்குள்ளான பலருக்கு அவர்களின் வேதனைகளில் பங்கெடுத்து கமல் ஆறுதலளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றே. குறிப்பாக மகேந்திரனுடைய மரணம், ஸ்ரீ வித்யாவுடைய மரணங்கள் என்பன கேன்சரால் இடம்பெற்றன.

அந்த மரணங்கள் கமலை வெகுவாக பாதித்தும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் நடித்த வாழ்வே மாயம் படத்துல வரும் ஒரு பாடல் என்னை ரொம்பவே ஈர்க்கிறது. வாங்க நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்....


படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
பாடியவர் : KJ.ஏசுதாஸ்
இயற்றியவர் : வாலி
வெளியான ஆண்டு : 1982

மரணம் காத்திருக்கிறது மறைந்து நின்றபடி.... பாடல் பிறக்கின்றது.

பாடல் வரிகள்...

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா

கமலும் கன்சரும்! புற்றுநோய்க்கு எதிரான விளிப்புணர்வு நடவடிக்கைகளில் கமல் ஆர்வம் காட்டி ஈடுபடுவது பாராட்டப்பட வேண்டியவர்!!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top