இவன் வேற மாதிரி (2013) - விமர்சனம்

"எங்கேயும் எப்போதும்" முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் M.சரவணனின் இரண்டாவது படம். பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம். என ஏகப்பட்ட "இரண்டாவது..." எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

அருமையான கதைகளம் .... பிரமாண்டம் இல்லாமல் நமக்கு அருகாமையில் நடந்தது பொல இருந்தது!

படத்தோட கதை என்னனா ...

சட்டத்துறை அமைச்சர் சட்டக்கல்லூரியில் தனக்கு 30 சீட்டுகள் ஒதுக்கித் தரவேண்டும் என அக்கல்லூரி முதல்வரிடம் முறையிடுகிறார். ஆனால், கல்லூரி முதல்வரோ அவருக்கு சீட் ஒதுக்கித் தரமுடியாது. ஏற்கெனவே தங்களுக்கு ஒதுக்கித் தந்த சீட்டுகளில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ரவுடிகளாக இருக்கின்றனர். இதனால், அவ்வப்போது கல்லூரியில் கலவரம் வருகிறது. அதனால் இந்த முறை தங்களுக்கு சீட் ஒதுக்கித்தர முடியாது என கூறுகிறார்.

தனக்கு சீட் தராத முதல்வருக்கு பாடம் புகட்டும்விதமாக, தனது சிபாரிசில் அக்கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவன் மூலமாக அக்கல்லூரியில் கலவரம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார். அந்த கலவரத்தில் அப்பாவி மாணவர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் விக்ரம் பிரபு இதற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறான்.

இந்நிலையில், ஜெயிலில் இருக்கும் தனது தம்பி வம்சி கிருஷ்ணாவை சட்டத்துறை மந்திரி தனது பரிந்துரையின் பேரில் பரோலில் வெளிக்கொண்டு வருகிறார். வெளியில் வரும் வம்சி கிருஷ்ணாவை விக்ரம் பிரபு கடத்தி விடுகிறார். இதையடுத்து தன் தம்பியை கடத்தியவர்கள் யார் என்று மந்திரி தேடிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் பரோலில் வெளியே வந்த வம்சி கிருஷ்ணாவின் பரோல் முடிந்துவிட, அவரைத் தேடி போலீஸ் சட்டத்துறை மந்திரியிடம் செல்கிறது. வம்சி கிருஷ்ணா அங்கு இல்லாததால் மந்திரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர். இதனால் மந்திரியின் பதவியும் போய்விடுகிறது. மந்திரியை பழிவாங்கும் தன்னுடைய எண்ணம் நிறைவேறிவிட, கடத்திய மந்திரியின் தம்பியை விடுவித்துவிடுகிறார் விக்ரம் பிரபு.

இதற்கிடையில், பஸ்ஸில் நாயகி சுரபியிடம் விக்ரம் பிரபு செய்யும் சிறுசிறு குறும்புகள் சுரபியை அவர் மீது காதல்கொள்ள வைக்கிறது. ஆனாலும் தன் காதலை நாயகனிடம் வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்.

இந்நிலையில் தன்னை யார் கடத்தியது என்பது தெரியாத வம்சி கிருஷ்ணா, கடத்தியவனை எப்படியாவது கண்டுபிடித்து கொன்றுவிட வேண்டும் என முடிவெடுக்கிறான். இதனால், விக்ரம் பிரபுவை தேடி அலைகிறான்.

இறுதியில், வில்லன் நாயகனை கண்டுபிடித்து அவனை பழிவாங்கினானா? நாயகி தன் காதலை விக்ரம் பிரபுவிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

விக்ரம் பிரபு
இயக்குநர் M.சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா (அ)குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. கும்கியில் ஒரு மாதிரி விக்ரம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி" விக்ரம் பிரபு. ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார்.

புதுமுகம் சுரபி
புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.
நாயகனிடம் வம்பு இழுக்கும் காட்சியில் அழகாக நடித்து இருக்கிறார். மற்றபடி நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும்.

நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார்.

கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா
அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன். கம்பீரமா இருக்கிறாரு, ஆனால் நடிக்கத்தான் அதிக வாய்ப்பில்லை. சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன்(ரஜினிகாந்த் தயாரிச்ச ‘வள்ளி’ படத்தோட ஹீரோ ஹரிராஜ்), அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, சண்டை
C.சத்யாவின் இசையில் "லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன்... இது தான்..." உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்!

சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

சக்தியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எடுத்த விதம் அருமை. விபத்து காட்சிகளை படமாக்கிய விதம் அழகு. சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது.
இயக்குநர் M.சரவணன்
நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

கதைக்கு தேவையில்லாத காட்சிகளை ஆங்காங்கே நுழைத்து சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகியைத் தேடி நாயகன் அலையும் போது ஏற்படும் விபத்து காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
இவன் வேற மாதிரி - ஒரு நல்ல படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2 comments:

Sastha L said...

Nice review

suyambu said...

நல்ல படம்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top