கிறிஸ்துமஸ் தாத்தா பிறந்த கதை

அன்பான உலகில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ள கிறிஸ்துமஸ் திருநாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்துபவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப் பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண் தாடி தாத்தா தான்.


குழந்தைகளால் அன்புடன் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சாந்தா கிளாஸ். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சாந்தா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார். தற்போது உலகம் முழுவதும் எல்லோரின் உள்ளங்களில் அன்பாக உலா வருகிறார் அந்த அன்பு தாத்தா.

அந்த காலத்து ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார்.


ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.


மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. பாரியில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேராலயத்தில் இப்போதும் அவரது நினைவுச் சின்னங்கள் உள்ளன. காலம் உருண்டோடிவிட்டாலும் அவரது நினைவுகள் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை.

ரஷ்யாவும் கிரீஸும் அவரைத் தங்களது நாட்டு பாதுகாவலராக ஏற்றுக் கொண்டன. சமூக சேவை அமைப்புகள், குழந்தைகள், இளம் பெண்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அவரை தங்களது பாதுகாவலராக ஏற்றுக் கொண்டனர். இது வழி வழியாக பின்பற்றப்பட்டது. அவரது பெயரில் ஐரோப்பா முழுவதும் ஆலயங்கள் உருவாகின.

டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். காலப் போக்கில், சமுதாயத்தில் தீமை செய்யும் குழந்தைகளுக்கு தண்டனையும் நன்மை செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளும் அளிக்கும் தாத்தாவாக அவர் உருவகப்படுத்தப்பட்டார்.


1822ல் கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார். அது பத்திரிகைகளில் வெளியாக மிகவும் பிரபலமடைந்தது.

புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார். அவரின் பிரவேசம் அப்பகுதியில் அன்பு, மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் பாருங்களேன். நாமும் கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவேற்று அன்பையும் மகிழ்ச்சியையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வோம்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... பாராட்டுக்கள்...

வாழ்த்துக்கள்...

ஏன் மற்ற எந்த தளத்திலும் கோலிப்பையனை பார்க்க முடிவதில்லை...?

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top