சாப விமோசன தலங்கள் - ஒரு பார்வை!

1. திருக்கைச் சின்னம் :-

திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கைச் சின்னம் என்ற திருக்கச்சனத்திலுள்ள கைச்சின்ன நாதரை வழிபட்டு இந்திரன் தன் சாபம் நீங்கினான். இங்கே ஈசனோடு திருமாலும் திருவருள் புரிகிறார்.

குற்றம் புரிந்தோர் மனமுருகி வழிபட்டால் இத்தல ஈசன் அவர்களை மன்னித்து அருள்கிறான்.

2. குறுமாணக்குடி :-

கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோயிலுக்கருகே உள்ள குறுமாணக்குடி கண்ணாயிரநாதரை வழிபட்டு கௌதம முனிவர் இட்ட சாபத்தை, இங்கே தீர்த்தம் நிறுவி அதில் நீராடி, இந்திரன் நீங்கப்பெற்றான்.

கண்நோய்களைத் தீர்ப்பதிலும் குழந்தை வரம் தருவதிலும் இத்தல ஈசன் நிகரற்றவர்.


3. திருமீயச்சூர் :-

மேகங்களுக்கு அதிபதியான இந்திரனுடன் புஷ்பகம், ஆவணி, புஷ்பக தரணி, சலநிதி, சலாநிதி, நீலம், சலவாரிணி ஆகிய மேகங்களும் வழிபட்டு பேறுபெற்ற ஈசன், திருமீயச்சூரில் மேகநாதராக அருள்கிறார்.

இத்தலம் சூரியதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

4. மதுரை :-

மதுரை சொக்கநாதப் பெருமானை இந்திரன் சித்ரா பௌர்ணமியன்று பூஜை செய்வதாக ஐதீகம். இங்கு அஷ்டதிக்பாலகர்களுள் ஒருவனாக இந்திரனை தரிசிக்கலாம். சித்திரை திருவிழாவின் நிறைவு நாளில் சொக்கநாதர் இந்திரனுக்கு அருளும் லீலை வைபவத்தில் அவருடன் இந்திரன் உலா வருகிறான்.

இங்குள்ள தியான பிராகாரத்தில் அமர்ந்து தியானம் செய்ய, மனம் ஒருமைப்படும்.

5. மயிலாடுதுறை கறிப்பறியலூர் :-

மயிலாடுதுறையை அடுத்த கறிப்பறியலூர் தலத்தில் இந்திரனின் கர்வத்தை அழித்த, 'குற்றம் பொருத்தருளிய நாதர்' எனும் ஈசன் ஆலயம் கொண்டுள்ளார்.

நாம் அறியாமல் செய்த தவறுகளை மன்னிக்கும் ஈசன் இவர்.

6. சுசீந்திரம் :-

சுசீந்திரம் தாணுமாலயனை இந்திரன் தினமும் அர்த்தஜாம பூஜை செய்து வழிபடுவதாக ஐதீகம். இத்தல விநாயகரும் இந்திர விநாயகர் என்றே வணங்கப்படுகிறார். மும்மூர்த்திகளும் ஓருருவில் அருள்வதால் இத்தலம் அனைத்து வித பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் தலமாக போற்றப்படுகிறது.

7. காஞ்சிபுரம் :-

காஞ்சிபுரம் ஜ்வரஹரேஸ்வரர் சந்நதியின் பின்புறம் தேவர்களுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தை (காய்ச்சலை) போக்க இந்திரன் வழிபடும் சிற்பம் உள்ளது. விஷ ஜ்வரங்களிலிருந்து பக்தர்களைக் காப்பவராக இவர் போற்றப்படுகிறார்.

8. திருவாரூர் :-

திருவாரூர் தியாகராஜர், இந்திரனால் வழிபடப்பட்டவர். முசுகுந்த சக்ரவர்த்தியின் தவத்தின் பயனாக அவர் பூலோகம் எழுந்தருளியது வரலாறு. மனிதர்களுக்கு மறுபிறவியைத் தவிர மற்ற வரங்களை வாரி வழங்கும் கருணாமூர்த்தி இவர்.

காணாமல் போன தன் ஐராவதம் யானையை கும்பகோணம், தாராசுரத்தில் சிவனருளால் கண்டுபிடித்த இந்திரன், இந்திர விமானம் அமைத்து ஐராவதேஸ்வரரை பூஜித்து பேறு பெற்றிருக்கிறான்.

காணாமல் போன பொருட்களை இவரிடம் வேண்டிக்கொண்டால் அவை மீண்டும் கிடைக்கின்றனவாம். இத்தல இறைவியின் துவாரபாலகிகளாக கங்கையும் யமுனையும் உள்ளது சிறப்புத் தகவல்.

9. காஞ்சிபுரம் :-

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சிநெறிக்காரைக்காட்டில் இந்திரன் தீர்த்தம் நிறுவி, இத்தல ஈசனான சத்திய விரதநாதரை வழிபட்டு வளங்கள் பெற்றான்.

இத்தல ஈசனை புதன் கிழமைகளில் வணங்க புத தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

10. ஓமாம்புலியூர் :-

ஓமாம்புலியூருக்கு அருகே உள்ள திருக்கடம்பூர் எனும் கரக்கோயிலில் அருளும் அமிர்தகடேசுவரரை இந்திரன் வழிபட்டிருக்கிறான்.

இத்தல ஈசன், பக்தர்களுக்கு அமிர்தம் போன்ற இனிமையான வாழ்வை அருள்பவர்.

11. பூம்புகார் :-

பூம்புகாரில் உள்ள திருச்சாய்க்காடு எனும் சாயாவனத்தில் உள்ள ஈசனை பூஜித்து இந்திரன் பல வரங்கள் பெற்றான்.

நிழல் போல் நம்மை தொடரும் துன்பங்கள் இத்தல ஈசனை வணங்கிட விலகுகின்றன.


12. மதுராந்தகம் :-

மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள கருங்குழியிலிருந்து சற்றே உள்ளடங்கிய கிணாரில் அருளும் வீரவனநாதரை இந்திரனும் அவன் வாகனமான ஐராவதமும் வழிபட்டு வரங்கள் பல பெற்றுள்ளனர்.

இத்தல ஈசன் வாழ்வில் ஏற்படும் பயங்களை அழித்து நம்மைக் காப்பதாக ஐதீகம்.

13. கீழ்வேளூர் :-

கீழ்வேளூர் தலத்தில் இந்திரன் சித்திரகூடகிரி எனும் கட்டுமலை அமைத்து ஈசனை நோக்கி தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றான். இத்தல கேடிலியப்பரை அப்பரடிகள் "கீழ்வேளூர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுபவர் கேடிலாரே" என்று ஓரடியில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.

14. சிதம்பரம் :-

சிதம்பரம் கிழக்கு ரத வீதியில் தேர் முட்டுக்கு அருகில் இந்திரபுவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்திரன் நிறுவி வழிபட்ட ஈசன் இவர்.

இவரை வழிபட, இந்திரன் போன்றே சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

15. மருதாடு :-

மேல்மருவத்தூர்-வந்தவாசி சாலையில் உள்ள மருதாடு எனும் தலத்தில் இந்திரனின் வேறு பெயரான புரந்தரன் பெயரில் புரந்தரேஸ்வரர் அருள்கிறார். இத்தல அம்பிகை இந்திரப் பிரசாத வல்லியாகத் திகழ்கிறாள்.

இத்தல அம்பிகை திருமண வரம் தருபவள்.

16. கருங்குயில் நாதன் பேட்டை :-

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கருங்குயில் நாதன் பேட்டை ஈசனை, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை அழிக்க வந்த வீரபத்திரனுக்கு அஞ்சி குயில் வடிவில் இந்திரன் பூஜித்தான் என்கிறது தலபுராணம்.

இத்தல ஈசனை வழிபட குயில் போன்ற குரல் வளம் கிட்டும்.

17. கொள்ளிடம் மகேந்திரபள்ளி :-

சிதம்பரம்-மயிலாடுதுறை பாதையில் உள்ள கொள்ளிடத்திற்கு சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திரபள்ளியில் இந்திரன் வழிபட்ட ஈசன் அவனின் மற்றொரு பெயரான மகேந்திரநாதராக அருள்கிறார்.

கல்வி வளம் சிறக்க இத்தல ஈசன் அருள்கிறார்.

18. பொன்னேரி ஆங்காடு :-

பொன்னேரியை அடுத்த ஆங்காட்டில் இந்திரன் நிறுவி வழிபட்ட சிவலிங்கம் இந்திரேஸ்வரராக அருள்கிறது. ஆகண்டலன் எனும் இந்திரன் அசுரர்களுக்கு அஞ்சி மறைந்திருந்து வழிபட்ட இடம் ஆகண்டலன்காடு என்றிருந்து பின் மறுவி ஆங்காடு ஆனது.

பகைவர்களின் தொல்லையிலிருந்து இத்தல ஈசன் பக்தர்களைக் காக்கிறார்.

19. திருவாய்மூர் :-

சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருவாய்மூரில் இந்திரன் வழிபட்ட நீலக்கல் லிங்கமூர்த்தி அருளாட்சி செய்கிறார்.

நீலக்கல் சனிபகவானுக்குரியதால் இத்தல ஈசனை வழிபட சனி தோஷங்கள் அகல்கின்றன.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source :ந.பரணிகுமார் & Dinakaran news paper



1 comments:

SNR.தேவதாஸ் said...

அன்பு நண்பரே வணக்கம்.
ஆன்மீக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.இந்த பதிவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.
தேவைபடும்போது பயன்படுத்திக்கொள்வேன்.
நன்றி.
வாழக வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top