சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12 = 36!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு 12.12.12 ஒரு சூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது.

அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள். இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12.

சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ இணையதள வாசகர்களுக்கு...


1. ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே..."என்பது தான். நடித்த காட்சிகள் 6.

2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அது அறிமுகமான படம் மூன்று முடிச்சு.

3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.

4. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே "ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்த பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.

5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.

6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.

7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.

8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.

10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர் "மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.



11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன் நடித்த கடைசிப் படம் "படையப்பா".

12. முதல் பேண்டசி படம் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.

13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் "பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம் "மூன்று முகம்".

14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் "மாங்குடி மைனர்".

15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம் "தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

16. முதல் சினிமாஸ்கோப் படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம் "கோச்சடையான்".

17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி". பாடல் பாடிய படம் "மன்னன்".

18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார். இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பது அவரது கருத்து.

19. "பாண்டியன்", "அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.


21. ரஜினியின் 50வது படம் "டைகர்(தெலுங்கு)". 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்". ரங்கா படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.

22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்". அவர் முதல்வரானதால் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.

23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. "நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது. "நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது. "காலம் மாறிப்போச்சு" என்ற டைட்டில் "தர்மதுரை" ஆனது.

24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.

25. ரஜினி எடிட் செய்த படம் "படையப்பா". படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2 இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர் சொன்ன கருத்து "ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது" என்பது.

26. அதிக நாள் ஓடிய படம் "சந்திரமுகி". அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "எந்திரன்". குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "அன்புள்ள ரஜினிகாந்த்".

27. "மூன்று முடிச்சு", "மாப்பிள்ளை", "மன்னன்", "படையப்பா" படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.

28. "முள்ளும் மலரும்", "மூன்று முகம்", "முத்து", "படையப்பா", "சந்திரமுகி", "சிவாஜி" படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள்.

29. மீசையில்லாமல் நடித்த முதல் படம் "தில்லு முல்லு", முதல் முழு நீள காமெடி படமும் அதுதான்.

30. ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்றது பைரவியில் புகழ் பெற்றது அண்ணாமலையில்.


31. இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் "6லிருந்து 60 வரை". ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம்.

32. கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து.

33. நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை. "ஆறு புஷ்பங்கள்" படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

34. ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த படம் "முரட்டுக்காளை", "சந்திரமுகி". எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த படம் "ஸ்ரீராகவேந்திரர்" மற்றும் "பாபா".

35. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். ரஜினின் பல படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாக நடித்த இந்திப் படம் 16.

36. தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்" என்பார். அதுதான் சூப்பர் ஸ்டார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி...!

வாசகர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கலாம்!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Thanks : Dinamalar



2 comments:

sajirathan said...

அருமையான பதிவு... அப்பிடியே எனது தளத்திற்கும் வருகைதந்து பதிவை வாசித்தபின் follow பண்ணுங்கள் நண்பரே.. http://sajirathan.blogspot.com/

RANJITHFLEX said...

அருமை

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top