The Conjuring (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் படம் "தி கான்ஜுரிங்". நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் பயங்கரமான திகில் படம்.

இதில் பேட்ரிக் வில்சன்,விரபர்மிகா,லிலீ டெய்லர், ஜோய் கிங்,ரோன் லிவிங்ஸ்டன்,ஷேன்லி கேஷ்வெல் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான்.

உங்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட பேய் படம்.

படத்தோட கதை என்னனா ...

ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக காட்டுக்குள் அமைந்து இருக்கிறது, ஒரு பழைய பங்களா. அதை விலைக்கு வாங்குபவர் தனது மனைவி, மகள்களுடன் அந்த வீட்டுக்கு குடி வருகிறார். அவருடைய நாய் மட்டும் அந்த பங்களாவுக்குள் வர மறுக்கிறது.

பங்களாவுக்குள் ஒரு பாதாள அறை இருக்கிறது. உள்ளே ஒரு பழைய பியானோ உள்பட பல பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மறுநாள் காலை பங்களாவை வாங்கியவரின் மனைவியின் கால்களில் கறுப்பாக ஒரு தழும்பு காணப்படுகிறது. சுவர் கடிகாரங்கள் மூன்று மணி எட்டு நிமிடங்களை காட்டியபடி நின்று இருக்கிறது. வெளியில், அவர்களின் நாய் இறந்து கிடக்கிறது.

அடுத்தநாள் நள்ளிரவில், குழந்தைகளின் படுக்கை அறை கதவை யாரோ பலமாக தட்டுகிறார்கள். ஒரு குழந்தையின் கால்களை யாரோ பிடித்து இழுக்கிறார்கள். இன்னொரு குழந்தை தூக்கத்தில் நடக்கிறது. பயன்படுத்தப்படாத அறை கதவு தானாக திறக்கிறது. வீட்டை வாங்கியவரும், அவருடைய மனைவி–மகள்களும் பீதியாக உணர்கிறார்கள்.

பேய்–பிசாசுகள் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஒரு தம்பதியை அணுகி, உதவி கேட்கிறார்கள். அந்த தம்பதிகள் இருவரும் காட்டு பங்களாவுக்கு வருகிறார்கள். பங்களாவை சுற்றிப்பார்த்துவிட்டு, "இந்த வீட்டில் ஒரு தீய சக்தி இருக்கிறது..." என்று கூறுகிறார்கள். அதை விரட்டுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இருவரும் சேர்ந்து பேயை விரட்டினார்களா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பயமுறுத்தல்கள்
அந்த குடும்பம் காட்டு பங்களா முன்பு வந்து இறங்கியதுமே திகில் ஆரம்பத்து விடுகிறது. குழந்தையின் கையில் இருக்கும் பொம்மைக்குள் ஏதோ ஆபத்து இருப்பதை உணர முடிகிறது. குழந்தையின் கால்களை பிடித்து இழுப்பது, பயன்படுத்தப்படாத அறை கதவு மெதுவாக திறப்பது என இடைவேளை வரை, சின்ன சின்ன பயமுறுத்தல்கள்.

குடும்ப தலைவிக்குள் பேய்
இடைவேளைக்குப்பின், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் அந்த தம்பதிகள் காட்டு பங்களாவுக்குள் வந்ததும், எதிர்பார்ப்பு அதிகமாகி இன்னும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்த வீட்டு குடும்ப தலைவிக்குள் பேய் புகுந்து செய்யும் ரகளைகள் இதய துடிப்பை எகிற வைக்கிறது. பெற்ற தாயே பிள்ளைகளை கொல்ல துடிக்கும் காட்சி, மிரட்டலின் உச்சம்.

ஜேம்ஸ் வான்
திரைக்கதையை ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’. இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம்..வேகம்..வேகம். இரண்டு மணி நேரம் எப்படி போனது? என்று தெரியாத அளவுக்கு விறுவிறுப்பு.

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் ‘தி கான்ஜுரிங்’ - வெகு நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பேய் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றது..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Dailythanthi.2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு சுவாரஸ்யமான விமர்சனம்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top