பரதேசி (2013) - விமர்சனம்


"அவன்-இவன்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் ஆறாவது படம் 'பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா, தன்ஷிகா, வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘பரதேசி' படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்'. இரண்டாவதாக 'கல்லறைத்தோட்டம்' என வைத்தார்கள். இறுதியாகத்தான் ‘பரதேசி’ தலைப்பு உறுதியானது.

ரெட் டீ (‘எரியும் தணல்’) என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்பட்டப் படம். 1940களில் ஆங்கிலே‌‌யர் நம் மண்னை ஆண்டபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இப்படத்தின் கதைக்களமாக்கியுள்ளார்.


படத்தோட கதை என்னனா ...

1939-ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்குகிறது கதை. ஊர் கோடாங்கியாக இருக்கும் அதர்வா, உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல், தெருதெருவாக சென்று கொட்டடித்து சேதி சொல்லி, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்பா, அம்மாவை இழந்த அதர்வாவுக்கு பாட்டி மட்டுமே துணையாக இருக்கிறார். இந்நிலையில், அந்த ஊரிலேயே வசிக்கும் வேதிகா மீது அதர்வா காதல் வயப்பட்டு, இந்த காதல் ஊடலாகவும் மாறுகிறது.

இந்நிலையில், ஊரில் பஞ்சம் ஏற்பட, பிழைப்பு தேடி பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வா, அங்கு கங்காணி ஒருவரை சந்திக்கிறார். அதர்வா மூலம் ஊர் மக்களை சந்திக்கும் கங்காணி, தன்னுடைய ஊரில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாக இருக்கிறது. அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. நல்ல சம்பளம், ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைக்கிறார்.

வறட்சியின் பிடியில் கிடந்து சாவதைவிட அங்கு சென்று ஒரு வாய் சோறு உண்டு காலத்தைத் தள்ளலாம் என முடிவெடுக்கும் கிராம மக்களிடம், கங்காணி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, முன்பணத்தையும் கொடுத்து தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். 48 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு ஒருவழியாக தேயிலைத் தோட்டத்துக்கு வந்து சேர்கிறார்கள்.

இந்நிலையில், ஊரில் அதர்வாவுடன் நெருங்கிப் பழகிய வேதிகா கற்பம் அடைகிறாள். இதுதெரிந்து, அவளது வீட்டில் பிரச்சினை வர அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். இதனால், அதர்வாவின் பாட்டி வேதிகாவுக்கு அடைக்கலம் தந்து, தனது வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.


தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டு, 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழும் தன்சிகாவை சந்திக்கிறார் அதர்வா. ஆதரவற்று இருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் அதர்வா.

இந்நிலையில், வேதிகா கற்பமான விஷயம் பாட்டி அனுப்பும் கடிதம் மூலம் அதர்வாவிற்கு தெரிய வருகிறது. எனவே, வேதிகாவைப் பார்க்கத் துடிக்கும் அதர்வா, விடுமுறையில் ஊருக்கு சென்றுவர நினைக்கிறான். ஆனால், விடுமுறை கொடுக்கமுடியாது. மேலும் சில ஆண்டுகள் நீங்கள் இங்கு பணிபுரிய வேண்டும் என சம்பளத்தை பிடித்துக் கொண்டு ஊர் மக்களை ஏமாற்றுகிறார் கங்காணி.

இதனால் ஏமாற்றமடைந்த அதர்வா, தேயிலைத் தோட்டத்திலிருந்து தப்பித்து செல்ல முடிவெடுக்கிறார். ஒருமுறை தப்பித்துச் செல்லும்போது, கங்காணியின் ஆட்கள் அதர்வாவை பிடித்து விடுகின்றனர். இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாதபடி அதர்வாவின் கால் நரம்பை துண்டித்துவிடுகிறார்கள்.

கடுமையான வேலைப்பளு, சரியான மருத்துவ வசதி இல்லாமை மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் நிறைய பேருக்கு விஷ காய்ச்சல் வந்து இறந்து போகிறார்கள். இந்த விஷக்காய்ச்சலுக்கு தன்ஷிகாவும் பலியாகிறாள்.

இதிலிருந்து தப்பித்து அதர்வா, வேதிகாவை சந்தித்தாரா? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விடுவித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

கதாநாயகன் அதர்வா

ஊர் கோடங்கியாக வரும் கதாநாயகன் அதர்வா, முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கண் அசைவில் இருந்து நடை, உடை, பாவனை என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார்.

தனக்கு சாப்பாடு போடாத கோபத்தில் தனியே அமர்ந்து இவர் கொட்டடிக்கும் காட்சியில் நம்மை பரிதாபப்பட வைக்கிறார். படம் முழுக்க கோணிப் பையையே உடையாகவும், செருப்பே போடாமலும் நடித்துள்ள அதர்வாவுக்கு மிகப்பெரிய சல்யூட். கிளைமாக்சில் இவர் கதறி அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

"ஹேட்ஸ் ஆப் அதர்வா. அதர்வாவுக்கு பல விருது நிச்சயம்!

வேதிகா

கிராமத்து அங்கம்மாவாக + அதர்வாவின் காதலியாக வரும் வேதிகாவுக்கு உண்மையிலேயே பாராட்டத்தக்க வேடம். கவர்ச்சி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்த வேதிகா இப்படத்தின் முதல்பாதியில் நடிப்பு யுத்தமே நடத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

தன்னுடைய முகத்தை மட்டுமல்லாமல், கை, நகம் என அனைத்தையும் கருப்பாக்கி, உடல் அமைப்பையே மாற்றி வாழ்ந்துள்ளார்.

அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண்டுங்கெட்டானான அதர்வாவின் கருவை தன் வயிற்றில் சுமந்து, தனது வீட்டாரால் ஒதுக்கிவைக்கப்படுவதும், பின் க்ளைமாக்ஸில் அதர்வாவுக்கு பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார்.

ரித்விகா

வேதிகாவின் தோழியாக வரும் புதுமுக நாயகி ரித்விகா நெஞ்சை வருடுகிறாள். ரித்விகாவின் கணவனாக வரும் கார்த்திக்-ன் நடிப்பு மெய்சிலிர்க்கிறது. இந்த கணவன்-மனைவி ஜோடி பல இடங்களில் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது.

இன்னொரு நாயகி தன்ஷிகா

‘அரவான்’ புகழ் தன்சிகா நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இவருடைய நடிப்பு அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. மரகதம் கேரக்டரில் அதர்வாவிற்கு முந்தைய செட் அடிமையாக ஒரு ‌பெண் குழந்தையுடன், புரு‌ஷனை தொலைத்துவிட்டு படும்பாடு சொல்லிமாளாது. இதுநாள்வரை பாலா பட நாயகர்கள் அளவு, பாலா பட நாயகிகள் பேர் வாங்கியதில்லை எனும் குறையை போட்டி போட்டுக்கொண்டு போக்குவார்கள் தன்ஷிகாவும், வேதிகாவும் ‌என நம்பலாம்.

பாலா

முதல் பாதி முழுக்க காதல், காமெடி என ஆரம்பித்து, கிளைமாக்சில் நெஞ்சை அதிர வைக்கும் காட்சிகள் என தனக்கே உரித்தான பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார் பாலா.

முதல் பாதியில் பொழுதுபோக்கு அம்சங்களை கொடுத்த பாலா, இரண்டாம் பாதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தபட்டு, பல்வேறு கொடுமைகள் அனுபவித்ததற்கு ஆங்கிலேயர்கள் மட்டும் காரணமல்ல, நம் இன மக்களும்தான் என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பாலா.

ஒரு இனத்தைப் பற்றிய கதை என்பதால் படம் முழுக்க காமிராவில் குறைந்தபட்சம் 50 பேர் இருந்து கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேரிடமும் இவ்வளவு அழுத்தமான நடிப்பை பாலா எப்படி வாங்கினார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.

பாலா தான் யார் என்பதை பிதாமகனில் காண்பித்து விட்டார் மேலும் ஒருமுறை அதை நிருபித்து விட்டார் சல்யுட் பாலா சார் விருது நிச்சயம் உண்டு

இசை G.V.பிரகாஷ்

G.V.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. அவற்றை படத்தில் காட்சியப்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். படத்தின் டைட்டில் போடுவது முதல் கடைசி வரை படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைப்பதில் இவரின் பங்கும் இன்றியமையாதது.

வசனகர்த்தா நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் மொழிபெயர்ப்பு செய்த ‘எரியும் தணல்’ நாவலின் தழுவலே இந்த பரதேசி. நாஞ்சில் நாடனே இப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய வசனங்கள் சில இடங்களில் சற்று முகம் சுளிக்க வைக்கும் நகைச்சுவையாக இருந்தாலும் பல இடங்களில் கதை கருவின் உண்மை தன்மையை விளக்கி கூறியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் செழியன்

சுதந்திர போராட்டத்திற்கு முன்பு நடக்கும் நடக்கும் கதை என்பதால் உடை, அலங்காரம், செட், வசன உச்சரிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒருங்கே காட்சிப்படுத்தி நம் கண்களில் நீங்கா இடம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தியே லைட்டிங் அமைத்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

கிஷோரின் "நச் என்ற படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

மொத்தத்தில் ‘பரதேசி’ விருதுகள் பல குவிக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமாவில் இந்த மாதிரி படம் வந்ததில்லை !!இனி வர போவதும் இல்லை... படம் நெஞ்சை உருக்குகிறது!!

பரதேசி - தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம் 'பரதேசி' தவிர்க்காமல் பாருங்கள்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top