தமிழக "ஜேம்ஸ்பாண்ட்" ஜெய்சங்கர்

தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் :

மேல்நாட்டு "ஜேம்ஸ்பாண்ட் 007" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், "தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர். குறுகிய காலத்தில் 300-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் பெயரை முன்சேர்த்து ஜெய்சங்கர் என்று அழைக்கப்பட்டார்.

முதல் அறிமுகம் :

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி யூனியன் செயலாளராக இருந்தார். அப்போது கல்லூரியில் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினார்.

பின்னர் முதன் முதலாக 'மேக்-அப்' போட்டு "காதலுக்கு மருந்து" என்ற நாடகத்தின் மூலம் மேடை ஏறினார். இது எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது.

முதல் வெற்றி திரைப்படம் - இரவும் பகலும் :

அந்த காலகட்டத்தில் டைரக்டர் ஜோசப் தளியத் தன்னுடைய புதிய படத்திற்காக புது முகங்களை தேடிக்கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. இவரை (ஜெய்சங்கர்) தளியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே ஜெய்சங்கருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். "இரவும் பகலும்" என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படம் 1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.
ஜெய்சங்கர் ஜோடி வசந்தா. முதல் படமே ஜெய்சங்கருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது.

இரவும் பகலும் படத்தை தொடர்ந்து "நீ", "எங்க வீட்டுப் பெண்", "பஞ்சவர்ணக்கிளி" (இதில் ஜெய்சங்கர் இரு வேடங்களில் நடித்தார்). "குழந்தையும் தெய்வமும்" ஆகிய படங்கள் வெளிவந்தன.

ஜெயலிதாவுடன் நடித்த ஜெய்சங்கர் :

"நீ" படத்தில் ஜெயலலிதாவும், "குழந்தையும் தெய்வமும்" படத்தில் ஜமுனாவும் கதாநாயகிகள். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "குழந்தையும் தெய்வமும்" 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

திரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே ஜெய்சங்கருக்கு அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. மேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில், 1966-ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" தயாரித்த "இரு வல்லவர்கள்", "வல்லவன் ஒருவன்" ஆகிய படங்களில் ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தார். அதனால், தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார்.

இதே ஆண்டில், "காதல் படுத்தும் பாடு", "கவுரி கல்யாணம்", "நாம் மூவர்", "யார் நீ" (பி.எஸ்.வீரப்பா தயாரித்தது) ஆகிய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்தார்.

அதற்கு அடுத்த ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து 9 படங்கள் வெளிவந்தன. "காதலித்தால் போதுமா", "சபாஷ் தம்பி", "நான் யார் தெரியுமா?", "பட்டணத்தில் பூதம்", "பவானி", "பெண்ணே நீ வாழ்க", "பேசும் தெய்வம்", "பொன்னான வாழ்வு", "முகூர்த்த நாள்" ஆகியவை அவை.

ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த "பட்டணத்தில் பூதம்" பெரிய வெற்றி படமாகும். ஜாவர் சீதாராமன் இப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் "பூதம்" வேடத்திலும் தோன்றினார்.
1968-ம் ஆண்டில் "அன்புவழி", "உயிரா மானமா", "சிரித்த முகம்", "டீச்சரம்மா", "தெய்வீக உறவு", "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "நேர்வழி", "பால்மனம்", "புத்திசாலிகள்", "பொம்மலாட்டம்", "முத்துசிப்பி", "ஜீவனாம்சம்" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.

15 படங்களில் நடித்து சாதனை :

தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார்.

சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம் வளரவில்லை.

இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.

வெள்ளிக்கிழமை நாயகர் :

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

முதல் வில்லன் வேடம் :

அந்த வேடத்தில் தோன்றிய முதல் படம் "முரட்டுக்காளை". குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "முரட்டுக்காளை", "பாயும்புலி", "துடிக்கும் கரங்கள்" போன்ற படங்களில் ஜெய்சங்கர் வில்லன் வேடம் ஏற்றார்.

குணசித்திர வேடம் :

ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்றும் நடித்தார். மொத்தத்தில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.

உடல் நலம் குறைவு :

62-ஆம் வயதில் நடிகர் ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு மே மாதம் குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.

நடிகர் மறைவு :

மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே நினைவு இழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் 3-6-2000 அன்று இரவு மரணம் அடைந்தார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார், நெப்போலியன் உள்பட நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெய்சங்கர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஜெய்சங்கர் குடுப்பம் :

ஜெய்சங்கரின் மனைவி பெயர் கீதா. சஞ்சய், விஜய் என்ற 2 மகன்கள். சங்கீதா என்ற மகள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

Thanks : Maalaimalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



3 comments:

Thava said...

என் இனிய வணக்கம்,
ஜெய்சங்கர் அவர்களது படங்களை பார்த்திருக்கிறேன்.என்னை வெகுவாக கவர்ந்த இயல்பான நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் படத்தில் வரும் பாடல்களுக்கு அம்மாவும், அப்பாவோடு சேர்த்து நானும் பெரிய ரசிகன்.நல்ல நடிகர்.. தங்களது பதிவின் வழி பல தகவல்களை அறிந்துக்கொண்டேன்,ரசித்தேன்.என் நன்றிகள்.

Kolipaiyan said...

வருகைக்கு நன்றிகள்! மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

கோவை நேரம் said...

இவர்தான் முதன் முதலில் கௌபாய் பட ஸ்டைல் இல் நடித்தார்.ரொம்ப கவர்ச்சியான படமும் கூட ....

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top