பப்பாளி (2014) - விமர்சனம்

அரசூர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் + ஏ.ரஞ்ஜீவ்மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பப்பாளி. இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன்.

கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்திருக்கிறார்கள் .

விஜய் எபிநேசர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். 3

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.கோவிந்த மூர்த்தி. இவர் வெற்றி பெற்ற கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

படத்தோட கதை என்னனா ...

சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் மிர்ச்சி செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம் தன் காதலை சொல்ல, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இஷாரா தன் தாய் சரண்யாவிடம் செந்திலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். செந்திலை பார்த்தவுடன் சரண்யாவுக்கு பிடித்துவிட, காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அப்போது செந்தில் தனது லட்சியமான ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதைக்கேட்ட சரண்யா, தன் வாழ்வில் நடந்த கதையை கூறுகிறார்.

'என் கணவர் நரேன் என்னைத் திருமணம் செய்வதற்கு முன் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டாரின் எதிர்ப்பால் அவரால் அவருடைய லட்சியத்தை அடைய முடியவில்லை.

இன்று வரை அதை நினைத்து அவர் வருத்தப்படுகிறார். என்னால் தான் அவரால் விஞ்ஞானியாக முடியவில்லை என்று நான் நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். அதேபோல் உங்கள் வாழ்க்கையும் வீணாகிவிடக்கூடாது, உங்கள் லட்சியத்திற்கு என் மகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது’ என்று செந்திலிடம் கூறுகிறார்.

இதைக்கேட்ட செந்தில், உங்கள் பெற்றோர்கள் உங்களை வெறுத்து ஒதுக்கியதால்தான் உங்கள் கணவரால் லட்சியத்தை அடைய முடியவில்லை. உங்கள் பெற்றோர்கள் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் நிச்சயமாக தேர்வு எழுதி வெற்றிப்பெறுவேன் என்று கூறுகிறார்.

செந்திலின் கருத்தை ஏற்றுக் கொண்ட சரண்யா தன் முடிவை மாற்றிக் கொண்டு, செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிப்பெற ஒத்துழைப்பு தர முடிவு செய்கிறார். அதே சமயம் செந்திலின் தந்தையான இளவரசு, ஓட்டலுக்கு ஆசைப்பட்டு செந்திலை வேறொரு ஓட்டல் முதலாளியின் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

இத்திருமணத்தை நிறுத்த வேறு வழியில்லாமல் தன் மகள் இஷாராவுக்கும், செந்திலுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சரண்யா. பின்பு தன் மாப்பிள்ளையை எப்படியாவது ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று சரண்யா மற்றும் அவரது கணவர் நரேன் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை இளவரசு தடுக்க முயற்சி செய்கிறார்.

இத்தனை தடைகளையும் கடந்து செந்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மிர்ச்சி செந்தில்
படத்தில் செந்தில் தன் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், சென்டிமென்ட் என நடிப்பை நன்றாக செய்திருக்கிறார். தன்னுடைய தோல்விகளை நினைத்து ஒவ்வொரு முறையும் சரண்யாவிடம் அழுது வருத்தப்படும் காட்சியில் நமக்கே லேசான சோகத்தை வரவழைத்துவிடுகிறார். இன்னும் நிறைய படங்கள் கிடைத்து நடித்தால் ஒரு லெவலுக்கு வரலாம்.

இஷாரா
நாயகி இஷாரா, நடுத்தர குடும்பப் பெண்ணாக பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் கொஞ்சம் கண்ணியம் காத்து, சில காட்சிகளில் அதைக் காற்றில் பறக்கவிட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி பெரிய அளவில் நம்மை கவரவில்லை என்றாலும் உறுத்தவும் இல்லை.

சரண்யா பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் அன்னையாக பல படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வந்தார். தற்போது அன்னையாக மட்டுமல்லாமல் சிறந்த மாமியாராகவும் வலம் வருவார் என்பதற்கு இப்படம் உதாரணம். படத்தின் பெரும் பகுதியை இவருடைய கதாபாத்திரமே தாங்கிச் செல்கிறது. அதை உணர்ந்து நடிப்பை திறம்பட செய்திருக்கிறார். போனில் அவர் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!

சிங்கம்புலி
காமெடி கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை துரத்தித் துரத்தி காதல் செய்யும் காட்சிகள், காதலையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசும் வசனங்கள் அருமை.


இளவரசு
நரேன், இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். அதிலும் தன மகன் தன்னை எதிர்த்து திருமணம் செய்து, தன கனவை தரைமட்டமாக்கிவிட்டான் என்பது தெரிந்ததும் இளவரசுவின் அட்ராசிட்டி இருக்கிறதே.. சூப்பர்..

இசை - விஜய் எபிநேசர்
விஜய் எபிநேசர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் திறம்பட செய்திருக்கிறார். விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். ‘மனைவி வீட்டில் வாழப்போகும் பையா…’ ரீமிக்ஸ் சூப்பர்!

இயக்குனர் கோவிந்த மூர்த்தி
குடும்பக்கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கோவிந்த மூர்த்தி, அதில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஐஏஎஸ் தேர்வு எழுத முயற்சி செய்பவர்களுக்கு இப்படம் நல்ல ஊக்கமாக இருக்கும்.

இதுவரை ஒருவனின் வெற்றிக்கு அவனது பெற்றோர்களோ, அண்ணனோ, நண்பர்களோ அல்லது மனைவியோ, காதலியோ உதவி செய்வதாக வந்த படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்க ஒரு மருமகனின் வெற்றிக்காக ஒட்டுமொத்த மாமனார் குடும்பமும் துணை நிற்பது என்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'பப்பாளி' - கசப்பும் இனிப்பும் கலந்த சுவை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com2 comments:

ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

super boss!

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top