கருப்பம்பட்டி (2013) - விமர்சனம்

அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் அஜ்மலைத் தேடி சிலபல வாய்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து திருதிரு துறுதுறு, தநா 07 அல 4777, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து இப்போது அவர் நடித்து வெளிவந்த படம் தான் "கருப்பம்பட்டி".

டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் கருப்பம்பட்டி படத்தை இயக்கியுள்ளார் பிரபுசோழன். அஜ்மல் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.

கருப்பம்பட்டி என்ற தலைப்பிலேயே கதையைச் சொல்லி, பாசம், கூட்டுக்குடும்பம் போன்றவற்றின் அறுமை பெருமைகளை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.


படத்தோட கதை என்னனா ...

கருப்பம்பட்டி ஊரில் சொத்து பத்தையெல்லாம் அடகு வைத்து தனது பிள்ளையை நன்றாக படிக்க வைக்கும் அப்பா-அம்மாவுக்கு மகனாக அஜ்மல். இவர் தான் படிக்கும் கல்லூரியில் தன்னை மிகப்பெரிய பணக்காரராக சித்தரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் தனது அப்பா-அம்மாவாக கோட் சூட் போட்டு, பட்டுப்புடவை கட்டி என வாடகைக்கு அப்பா, அம்மா அமர்த்திக் கொள்கிறார். இந்த நேரத்தில் அஜ்மலின் உண்மையான அப்பா-அம்மா அங்கு வர, அவர்களை தன் வீட்டு வேலைக்காரர்கள் என சொல்லும் அஜ்மல், "ஏன் இங்கு வந்தீங்க? இங்கிருந்து போங்க..." எனக்கூறி அவர்களை விரட்டியடிக்கிறார்.

இதே கவலையில் ஊருக்கு திரும்பும் அம்மா இறந்து போகிறார். அம்மாவின் சாவுக்கு ஊருக்கு வரும் அஜ்மல் அவருக்கு கொள்ளிபோட மறுக்கிறார். ஏனென்றால் கொள்ளி போட்டால் மொட்டை அடிக்க வேண்டும். அழகு கெட்டுவிடும் என நினைக்கிறார். இதனை அந்த ஊர் மக்கள் கண்டிக்கின்றனர்.

தன்னை கண்டிக்கும் ஊர் மக்களின் சொத்து பத்திரங்களை திருடிக் கொண்டுபோய் அடகு வைத்து, அந்த பணத்தில் பாரீஸ் சென்று குடியேறுகிறார். அதன்பின் கருப்பம்பட்டி ஊரே காலியாகிறது. இவருடைய சொந்த பந்தங்கள் எல்லாம் சிதறிப் போகிறது. இந்த விஷயத்தை தனது மகன் அஜ்மலிடம் சாவு நிலையில் கிடக்கும்போது சொல்கிறார் தந்தை அஜ்மல்.

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த ஊருக்கு வருகிறார். தனது சொந்தங்களையெல்லாம் ஒன்று திரட்டுகிறார். இதற்கிடையில் அபர்ணா பாஜ்பாயை காதலிக்கிறார். இறுதியில் தன் ஊர்க்காரர்களுடன் அஜ்மல் சேர்ந்து வாழ்ந்தாரா? தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

ஹீரோ அஜ்மல்
அப்பா- மகன் என இருமாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் அஜ்மல். 90-களில் வரும் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஒரு சில இடங்களில் நடிப்பை வரவழைக்க கஷ்டப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

கதைகளை நிறையே சலித்துச் சலித்து செலக்ட் செய்துதான் நடிக்கிறேன் என்கிறார் அஜ்மல். இந்தக் கதையும் அப்படித்தானோ..? பாவம் அஜ்மல் :(

ஹீரோயின் அபர்ணா பாஜ்பாய்
அஜ்மல்போல், நாயகி அபர்ணா பாஜ்பாய்-ம் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாஜ்பாய் பாவாடை,தாவணியில் மட்டுமே கிராமத்து பெண்ணாக ரசிக்க வைக்கிறார். ஆனால் க்ளோசப்பில் பயமுறுத்துகிறார்.

கல்லூரி காலங்களில் அஜ்மலிடம் தனது காதலை சொல்லும்போது, அவர் அதை மதிக்காமல் கிண்டல் செய்யும்போது தன்னுடைய உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்பதால் இவரது நடிப்புக்கு வாய்ப்பு குறைவே.

எம்.எஸ்.பாஸ்கர், ஜெகன், ஸ்ரீநாத்
கல்லூரி விடுதி வார்டனாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முதல் பாதி முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய தோற்றம், நகைச்சுவை கலந்த ஆங்கிலப் பேச்சு என அட்டகாசமாக பண்ணியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் நண்டு ஜெகன், ஸ்ரீநாத் என இருவரும் காமெடி என்கிற பெயரில் காதுகளுக்கு இரைச்சலைக் கொடுத்திருக்கிறார்கள்.

காமெடிக்காக ரொம்பவே கஷ்ட்டப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய கஷ்ட்டத்தைப் பார்த்து, ரசிகர்கள் இறக்கப்பட்டு சிரிக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் ஜெகனின் காட்டுகத்தலில் நமது இரண்டு காதுகளும் பஞ்சரானது தான் மிச்சம்.இயக்குனர் பிரபுராஜ சோழன்
உறவுகளோடு வாழ்கிற வாழ்க்கைதான் சந்தோஷம். பணம் ஒன்றும் பெரிதில்லை என்ற கதையை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார். சென்டிமென்ட்டுக்கள் கொஞ்சம் காமெடியை புகுத்தி சொல்லியிருக்கிறார். கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை, வசனத்தில் கவனம் செலுத்தாமல் போனதுதான் வருத்தமளிக்கிறது.

இசை கண்ணன்
கண்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். இந்தி இசையமைப்பாளர் பப்பிலகரியின் குரலில் ஒலித்த 1980 காலகட்டப் பாடலும், கருப்பம்பட்டி பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.

அஜ்மலின் உறவினர்கள் கும்பலில் தேவதர்ஷினி, சேத்தன், மகாதேவன் ஆகிய மூன்று பேர் மட்டும் மனதில் நிற்கிறார்கள்.

சந்தோஷ் ஸ்ரீராம், சஞ்சீவியின் கேமரா கருப்பம்பட்டி கிராமத்தின் பசுமை, வெறுமை என அனைத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறது.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
கருப்பம்பட்டி - சுமார்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!1 comments:

Arif .A said...

விமர்சனம் நன்று

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top