அந்த கிராமத்தின் கடைக்கோடியில் இருந்த அண்ணாச்சி கடை என்றால் தெரியாதவர்கள் இல்லை. நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் அண்ணாச்சி. காலை, பகல் பொழுதை விட, மாலை வேளைகளில் தான் கடையில் கூட்டம் மிகுதியாக காணப்படும், ஊரில் பெரும்பாலும் கூலிப்பாட்டு மக்கள்தான்! மானம்பார்த்த தெக்கத்திச் சீமை மண்ணையே நம்பி வாழும் சனங்க.
உடல் உழைப்பையும், கூலிப்பாட்டையுமே நம்பி வாழும் கூட்டம், வேலை முடிந்து களைத்து வீடு திரும்பும்போது கூலிக்காசுக்கு அரிசி, பருப்பு, புளி என்று வாங்கிப் போய் உலை வைத்து பொங்கித் தின்று எட்டு மணிக்கெல்லாம் முடங்கி விடுவார்கள்.
காலையில் கூலிப்பாட்டுக்கு வெள்ளன எழும்பணுமே! அதனால் பலசரக்கு சாமான் வாங்க மாலைப் பொழுதில்தான் அண்ணாச்சி கடையில் கூட்டம் கூடும்.
"அண்ணாச்சி அரை கிலோ புழுங்கரிசி. நூறு மொளகாத் தூளு, நூறு பருப்பு, அம்பது புளி. வெரசா கட்டிக் குடுங்க!" முந்தானை முடிச்சிலிருந்து காசை எடுத்துப் பிரித்தபடியே சொன்னாள் பவுனம்மா.
பவுனம்மா அருகில் நின்றிருந்த காமாட்சி கேட்டாள். ``என்ன பவுனு இன்னிக்கென்ன வெறும் சாம்பாரு தானாக்கும், வெஞ்சனமில்லியா?''
"ஆமா தெனமும் நாலுவகை பொரியல் காய்கறிகளோட விருந்து சாப்பாடா சமைக்கிறேன்? கிடைக்கிற கூலிக்காசிலே அரிசிக்கே அரைவாசிப் பணம் போயிருது. இதுல வெஞ்சனத்துக்கு வேறு நாக்கு அலையுதாக்கும்? மோர் மொளவா பொரிச்சா போதும்'' என்றபடி காசைக் கொடுத்துவிட்டு சாமான்களை அள்ளிக்கொண்டு நடந்தாள்.
அப்போதுதான் கவனித்தார் அண்ணாச்சி. சனிக்கிழமை தோறும் கூலிப்பணம் வாங்கியதும் கொஞ்சமாக மளிகை சாமான் வாங்கும் தேவானை தயங்கி நிற்பது தெரிந்தது. கூட்டம் கலையட்டும் என்று காத்திருப்பது போலிருந்தது.
``என்னலே ஒதுங்கி நிக்கே, சட்டுபுட்டுனு சாமான்க வாங்கிப் போவியா.. இப்படி ஒத்தையிலே நிக்கியே? என்ன வேணும்?'' கேட்டார் அண்ணாச்சி. "அரைக்கிலோ அரிசி, கருப்பட்டி காக்கிலோ, காப்பித்தூளு அம்பது, புளி நூறு வேணும்.
``அறுபத்தேழாச்சு''.
``தப்பா நெனைச்சுக்கிடாதிய அண்ணாச்சி. காசு கம்மியாயிருக்கு. பதினைஞ்சு ரூவாதே இப்பம் இருக்கு. மிச்சத்தை கடன்லே எழுதிக்கிடுங்க'' என்றபடி தயக்கத்தோடு கையிலிருந்த காசைக் கொடுத்தாள்.
``இதுக்காவா சொணங்கி நின்னே? எப்பமும் வாங்குகிற ஆளுதானே நீ! அதனாலென்ன ஜாமான் வாங்கிப்போ. காசு வந்ததும் குடு'' என்றபடி பொட்டலங்களை பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுத்தார்.
``பிஞ்சு கத்தரிக்காயா வாங்கி சுள்ளுனு புளிக்கொழம்பு வைக்கணும். கையிலே அஞ்சு ரூவாதே மிச்சமிருக்கு!'' தனக்குத்தானே முனுமுணுத்தபடி நடந்தாள் தேவானை.
அவள் கணவன் தேனப்பனுக்கு சூளையில் கல்லடுக்குகிற வேலை. வேலை கிடைத்தால் கூலி. வானம் மப்புத்தட்டி மூடியிருந்தால் சூளையில் வேலை நடக்காது. மண்ணும் மிதிக்க மாட்டார்கள். இரண்டு பிள்ளைகள். கூலிப்பணம் இல்லையென்றால் கும்பி எப்படி நிறையும்? கோழிக்குஞ்சாய் தீனிக்கு பறக்கும் குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியுமா? பவலையில் கெவுருக் கூழைக் கரைத்துக் குடிச்சாலும் ராப்பொழுதுக்கு கொதிக்கக், கொதிக்க புளிக்குழம்போடு சோறு கிடைக்கும் என்று காத்திருக்கிற குஞ்சும், குலுவனுமாச்சே? புருஷனுக்கு கூலிப்பாடு இல்லாத நாட்களில் உடையார் ரைஸ் மில்லுக்குப் போய் அரிசி புடைப்பாள். கூலிக்காசோடு கொஞ்சம் அரிசிக் குருணையும் கிடைக்கும். அரிசி வாங்கக் காசில்லாத இக்கட்டான நேரங்களில் அந்த அரிசிக் குருணை கமகமக்கும் சுடுகஞ்சியாக மாறும்! தொட்டுக் கொள்ள தோதாய் பருப்புத் துவையல் அரைப்பாள் தேவானை.
அண்ணாச்சி கடையில் கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. பொழுதடையும் நேரத்தில் வேர்க்க, விறுவிறுக்க ஓலைக்கூடையோடு வந்தாள் வேலம்மா.
``அண்ணாச்சி சுள்ளிக்கட்டு வித்து வர்ற பணத்திலேதான் தெனத்திக்கும் அரிசி, பருப்பு வாங்குவேன். இட்லிக்காரம்மா இன்னிக்கி காசு தரலே. நாளைக்குத் தரம்னுட்டாவ! நாள் வந்து சோறாக்கித் தருவேன்னு வூட்லே புள்ளைவ பசியோட காத்துக் கெடக்குங்க. இன்னிக்கி மட்டும் அரிசி, பருப்பு, எண்ணெய் குடுங்க அண்ணாச்சி. நாளைக்கு சுள்ளிக்கட்டு வித்த பணத்த வாங்கித் தந்துடறேன்.'' கெஞ்சலோடு கேட்டாள் வேலம்மா.
அவளது புருஷன்காரன் அவளை கை விட்டு விட்டான். வேறொருத்தியோடு பக்கத்து ஊரில் குடித்தனம் நடத்துகிறான். ஓலைக்கூரை வேயும் வேலை செய்து சம்பாதிக்கிறான். ஆனால் குழந்தைகளுக்காகக் கூட பணம் தருவதுமில்லை. திரும்பிப் பார்ப்பதுமில்லை. அவனைப் பொறுத்தவரை இவர்கள் கை கழுவப்பட்டவர்கள் என்பதே சரி.
ஆனால்.......
ஒரு தாயால் பெற்றபிள்ளைகளை உதறித் தள்ள முடியுமா? அதிலும் வேலம்மா படிக்காத கைநாட்டுக்காரி. அன்னாடங்காய்ச்சி, புருஷன் கொண்டு வந்தால் ஆக்கிப் போடவும், துவைத்துப் போடவும், பாத்திரம் தேய்க்கவும் மட்டுமே தெரிந்த வீட்டுப் பறவை.
ஆனால் இப்போதோ? காடு கரை என்று திரிந்து சுள்ளி பொறுக்கி விறகு வெட்டி கட்டாக சுமந்து இட்லி கடைக்கும், ஓட்டல் கடைக்கும் போட்டு வயிற்றுப்பாட்டை கவனிக்கிறாள்.
``என்ன அண்ணாச்சி யோசிக்கிறிய, அப்ப நான் கௌம்பட்டா?'' என்றாள் வேலம்மா. "இந்தாப்பா முருகா! வேலம்மா கேட்ட சாமான்களை போட்டுக் கொடுத்தனுப்பு!'' என்ற அவரது உத்தரவைத் தொடர்ந்து பலசரக்குச் சாமான்கள் கைமாறின.
கிட்டத்தட்ட இதேநேரத்தில் வந்தான் சேகர். "அண்ணாச்சி, இந்த சாமானெல்லாம் போட்டுத்தாங்க'' என்றபடி துண்டுக் காகிதத்தை நீட்டினான்.
பட்டியலை வாங்கிப் பார்த்த அண்ணாச்சி நிமிர்ந்தார்.
``என்னப்பா 5 கிலோ அரிசி, பருப்பு, ஆயில்னு கிலோ கணக்கிலே லிஸ்ட் போட்டிருக்கே... மொத்தமாப் பார்த்தாக்கா எழுநூறு ரூபாய்க்கு மேலே ஆவும்போலிருக்கே? பணமிருக்கா?'' என்றார் அண்ணாச்சி.
"அடுத்த வாரம் தந்துடறேன் அண்ணாச்சி. இப்ப மளிகை சாமான்களைப் போட்டுத்தாங்க''. என்றான் சேகர்.
"ஏற்கனவே நீ சாமான் வாங்கிய கடன் மூன்னூத்தி இருபது நிக்கி. அதைத்தராம மேக்கொண்டு ஜாமான தர தோதுபடாது'' என்று அவன் கொடுத்த சீட்டைத் திருப்பிக் கொடுத்தார்.
``வீட்லே மளிகை சாமான் ஏதுமில்லே, இப்பக் கொடுங்க. அடுத்த வாரம் பணம் தர்றேன்.''
``இல்லப்பா. கடன் தர ஏலாது. பழைய பாக்கி நிக்கில்ல?'' கறாராக மறுத்தார் அண்ணாச்சி.
இவ்வளவு நேரமும் இறங்கிய குரலில் பேசியவன், கோபம் உசுப்பேற்ற, குரலை உசத்தினான். ``நான் கடனுக்கு ஜாமான் கேட்டாக்க தரமாட்டிய! மப்பும், மந்தாரமுமா பார்க்க கண்ணுக்கு லட்சணமா எள வயசுக்காரியா வேலம்மா போல பொம்பிளை கேட்டாக்கா மறுக்காம கடனுக்கு ஜாமாங்க தருவிய. சேலை கட்டினவளுக்கு ஒரு நாயம், மீசை வெச்சவனுக்கு ஒரு நாயம்'' ஆங்காரம் தொனித்தது அவனது குரலில்.
"நீ சம்பாதிக்கிறதையெல்லாம் குடியிலயும், சீட்டாட்டத்திலேயும் அழிக்கிறே அதனாலே ஒன்னோட பொண்டாட்டி புள்ளைவ, பசி, பட்டினினு கஷ்டப்படறாங்க. வேலம்மாவோ... புருஷன் கைவிட்டாலும், படிப்பறிவில்லாதவ. அவ சுள்ளி பொறுக்கியாச்சும் பெத்த புள்ளைகளைக் காப்பாத்துறா. அவ நாணயத்தை நம்பித்தான் கடன் குடுத்தேன். வியாபாரத்துல மட்டுமில்லே, வாடிக்கைக்காரர்களுக்கும் தேவை நாணயந்தே! நாளைக்கு இதே நேரம் இந்தக் கடைப்பக்கம் வந்து நின்னு வேடிக்கை பாரு. வேலம்மா சுள்ளி பொறுக்கறவதான். ஆனா சொன்ன சொல்லைக் காப்பாத்தறவ! நாளைக்கு காசைக் கொண்டுகிட்டு வருவா. அப்படிப்பட்டவளை தப்பாப் பேசிப்புட்டியே?'' அண்ணாச்சி சொன்னதைக் கேட்டு, அதிலுள்ள நியாயம் சாம்பலை உதிர்த்த தணலாய்ப் புரிபட, மனதிற்குள் உறுதிமொழி எடுத்தான் `குடியும், சீட்டும் இனிமேல் என் வாழ்க்கையில் இல்லே' என்று.
"மன்னிச்சிடுங்க அண்ணாச்சி கோபத்திலே பேசிப்புட்டேன். தரவேண்டிய பணத்தை அடுத்த வாரம் கண்டிப்பா தந்துடறேன்'' என்றபடி திரும்பி நடந்தான். திருந்திய மனத்தோடு சேகர்.
ஞான விடியலுக்கு போதி மரம் தேவையில்லை. அண்ணாச்சியின் பலசரக்கு கடையும் போதி மரம் தான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

1 comments:
அன்றாட வாழ்வை விளக்கும் அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
Post a Comment