ஜென் கதை: பிரார்த்தனையின் வழி


எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே. இதை உணர்த்தும் ஒரு ஆன்மிக கதையை பார்க்கலாம்.


சமய நூல்களையும், சூத்திரங்களையும் திறம்பட கற்ற மகா குரு ஒருவர் இருந்தார். அவர் இறைவனை வழிபடும் போது இந்த முறையில், இந்த வழியில்தான் பிரார்த்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டவர். அவர் கூறும் தத்துவங்களையும், அறிவுரைகளையும் கேட்டு மக்கள் பலரும் மெய்மறந்து போவார்கள்.

ஒரு முறை அந்த மகா குரு கப்பல் பயணம் மேற்கொண்டார். கப்பல் பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, பலர் அவரது சீடர்களாக மாறிவிட்டனர். ஒரு நாள் அதிகாலை நேரம் மகா குரு கப்பலில் நின்று கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் மணல் திட்டு ஒன்று தென்பட்டது. உடனடியாக கப்பல் மாலுமியை அழைத்து, ‘அது என்ன மணல் திட்டு?’ என்று கேட்டார்.

‘ஆத ஒரு சிறிய தீவு. கடலில் மூழ்கிய ஒரு மலையில் சிறு பகுதி’ என்றான் கப்பல் மாலுமி.

உடனே மகாகுரு, ‘அந்த இடத்தில் யாராவது இருக் கிறார்களா?’ என்றார்.

மாலுமி, ‘அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. யாரோ மூன்று துறவிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு ஓரிரு இலந்தை மரங்கள்தான் இருக்கின்றன. இவர்கள் எப்படித்தான் அங்கு வசிக்கிறார்களோ?’ என்றான்.

அவனது வார்த்தையைக் கேட்ட மகாகுரு, ‘என்ன துறவிகளா?’ என்று வியந்தபடி, அந்த பகுதிக்கு கப் பலைச் செலுத்தும்படி உத்தரவிட்டார்.

அவர் சொல்படியே, கப்பல் அந்த மணல் திட்டின் அருகில் போய் நின்றது. கப்பலை விட்டு இறங்கிய மகா குரு, ‘நான் அந்த துறவிகளைக் காண வேண்டும். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று அறிய வேண்டும். அவர்கள் பண்டிதர்களாக இருந்தால், அவர்களுடன் வாதிட்டு, புத்தரை வழி படும்படி செய்துவிட்டு திரும்புவேன். பாமரர்களாக இருந்தால் என்னுடைய கருத்துக்களை போதிப்பேன். மாலைக்குள் நான் இந்தக் கப்பலுக்கு வந்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு மணல் திட்டில் இறங்கி காட்டிற்குள் நடக்கத் தொடங்கினார்.

கொஞ்ச தூரத்தில் ஒரு குடில் இருந்தது. அதில் மூவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வயோதிகர்களாக இருந்தனர். சாதாரண உடையால் அவர்களின் தோற்றம் பிச்சைக்காரர்களைப் போல் காணப்பட்டது.

மகா குருவின் தோற்றத்தைப் பார்த்ததும் மூவரும் வணக்கம் தெரிவித்தனர். குருவும் பதில் வணக்கம் கூறிவிட்டு, ‘நீங்கள் மூவரும் துறவிகளா?’ என்றார்.

‘இல்லை ஐயா..’ என்றார் அவர்களில் ஒருவர். ‘துறப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது? நாங்கள் எதைத் துறப்பது? எதனிடம் இருந்து துறப்பது?’ என்றார் மற்றொருவர்.

இப்போது குரு, ‘நீங்கள் எந்த மதம்?’ என்றார்.

அவர்களுக்கு ஒரே குழப்பம், ‘மதமா..? அப்படியென்றால்..?’

‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டார் குரு.

மூவருக்கும் மீண்டும் குழப்பம் ‘வழிபாடா?’ என்ற படி ‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

மகா குரு, ‘நான் புத்தரை வழிபடுபவன்’

‘ஓ.. புத்தரா? அவர் வணக்கத்திற்கு உரியவர்தான். நாங்களும் அவரை வணங்குவோம்’ என்றனர்.

‘எப்படி வணங்குவீர்கள்?. உங்கள் வழிபாட்டு முறை என்ன?’ என்றார் மகா குரு.

‘வழிபாட்டு முறை.. வழிபாட்டு நேரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது மனதிற்குள், ‘பூமியை படைத்தவனுக்கு வணக்கம். புத்தருக்கு வணக்கம். புத்தருக்கு முன்னும், பின்னும் உலகின் துயரங்களுக்கு விரிவு காண முயன்ற அனைவருக்கும் வணக்கம்’ என்று பிரார்த்திப்போம். அவ்வளவுதான்’ என்றனர் மூவரும்.

குருவிற்கு சிரிப்புதான் வந்தது. ‘இது சரியான முறை அல்ல.. எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கிறது. நியதி இருக்கிறது. அதுபோலத்தான் வழிபட வேண்டும். அதை நான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன்’ என்று கூறியவர், அவர்களுக்கு ஸ்தோத்திரங்கள், பாடல்கள், சூத்திரங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். சொல்லிக்கொடுத்ததை அவர்களிடம் ஒப்புவிக்க கூறினார். அவர்கள் திணறினர். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தார். ஓரளவு புரிந்து கொண்டதுபோல் தெரிந்தது குருவிற்கு. அதற்குள் மாலை நேரம் வந்து விட்டதால் குரு, மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கப்பலுக்குத் திரும்பினார்.

கப்பல் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், தீவில் இருந்த மூவரும் ஓடிவந்தனர். அவர்கள் குருவிடம், ‘எங்களை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னது எல்லாம் மறந்து போச்சு.. இன்னொரு தடவை சொல்லிக் கொடுங்க’ என்றனர்.

மகா குருவிற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.

‘நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும். உங்களின் வழிபாடு எதுவோ, அதையே செய்யுங்கள். ஏனெனில் அதைத்தான் புத்தர் விரும்புகிறார். அதில் எளிமை உள்ளது. அவர் நேசிப்பது அந்த எளிமையைத்தான்’ என்றார்.

எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top