நண்டு (1981) விமர்சனம்

'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது...!

சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொன்ன படம். எழுத்தாளர் சிவசங்கரியில் நாவலை படமாக எடுத்திருக்கிறார் நம் இயக்குனர் மகேந்திரன்.

வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று!

இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படத்தோட கதை என்னனா ...

கதை லக்னோவில் தொடங்குகிறது. பெரிய இடத்து பையன் ராம். பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல், அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்.

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரிமுத்து சேர்த்து விடுகிறார். சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம்.

ராமை விரும்பும் வீட்டு ஓனர் மகள் மற்றும் சீதா இடையே சீதா ஜெயிகிறாள். கல்யாணம் செய்யபோகும் போது... சீதாவின் அக்கா வீட்டுகாரர் வில்லனாக வர, அதையும் மீறி திருமணம் நடந்து, குழந்தை பிறந்து, மாமனார்-மாமியாரை காணும் கனவுடன் ராமுடன் லக்னோ வருகிறாள் சீதா. வந்த இடத்தில் மாமனாரை தவிர மற்றவர் அன்பாக பழக... அங்கிருந்து புறப்பட்டு சென்னை வரும் வழியில் ஆஸ்துமா தொல்லையால் மிகவும் அவதிபடுகிறான் ராம்.

அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன..? சீதா தனது கணவர் குடுப்பத்தோடு இணைந்தாளா என்பது தான் மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இயக்குனர் மகேந்திரன்

சிதாவின் அம்மா, சீதா அக்கா, அவள் கணவன், வீட்டு ஓனர், LIC ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி, வீட்டு ஓனர் மகள், அங்கு இருக்கும் மற்ற பெண்கள், சீதாவின் தோழி, அவள் தகப்பன், என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ), வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்... ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்... அந்த நேரத்தில் அது பேருதவி...

ஓர் ஆணுடன் பேசினால், புரணி பேசுபவர்கள் இருந்தால், ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்... திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்... அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்...

வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும், துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்... இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..


கதைக்கு உயிர்கொடுத்தவர்கள்

செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர், ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது... தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை

கதானாயகன் சுரேஷ்.... நாயகி அஸ்வினி... இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்.

இளையராஜா

ராஜா சார் சும்மா இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் இந்த படத்தில். பின்னணி இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். இளையராஜாவின் இசை பல இடங்களில் மனதை வருடுகிறது. எனக்கு பிடித்த பாடல்கள் இதோ ....

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா....

பிறகு,

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள். ஒரு புதிய முயற்சியை அப்போதே செய்து அசத்தியிருக்கார் இயக்குனர்.


பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை... ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்!

கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மொத்தத்தில் 'நண்டு' - இனிய பாடல்கள் + நகைச்சுவை என அருமையான பொழுதுபோக்கு படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Pichaikaaran.



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top