காஞ்சனா - (ஒரு பக்கக் கதை)

காஞ்சனாவிற்கு அழுது, அழுது அவளது சிவந்த முகம் வீங்கியிருந்தது. அத்தை ஏன்தான் இப்படி ஒரேயடியாக மாறிப்போனார்களோ? நினைக்க, நினைக்க அவளுக்கு இதயத்துடிப்பு அதிகமானது. இதில் இன்னொரு கொடுமை, கணவன் ரஞ்சித்தும் அவளை கண்டுகொள்ளவே இல்லை. அதுதான் அவளுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

காஞ்சனாவிற்கு திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது. ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறாள். ரஞ்சித்தோடு பிறந்தது ஒரு அக்கா ரஞ்சனி மட்டும்தான். மாமனார் இல்லை. நல்ல வசதியான குடும்பம் என்பதால் ரஞ்சனியை மும்பையில் தொழிலதிபர் யுகேந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரஞ்சித்தும் நன்கு படித்து சாப்டர்வேர் என்ஜினியராக திருச்சியில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறான்.

தம்பி திருமணத்தின்போது ரஞ்சனி வந்து போனாள். தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதால் சீர் செய்யவே இப்போது தனியாக வந்திருக்கிறாள். அவள் வருவதற்கு முன்பு வரை அத்தை பர்வதம் காஞ்சனாவை தாங்கு, தாங்கு என்றுதான் தாங்கினாள். அதுவும் மருமகள் மாதமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளை எந்த வேலையும் செய்ய விட மாட்டாள். எல்லா வேலையையும் தானே இழுத்துப் போட்டு செய்வாள்.

திருமணமாகி இந்த எட்டு மாதத்தில் காஞ்சனா தன் தாய் வீட்டிற்கு ஒரு முறைதான் சென்று வந்தாள். காஞ்சனாவின் தாய் தான் அடிக்கடி வந்து மகளை பார்த்து விட்டு போவாள். அத்தை பர்வதம் கூட "ஏன் காஞ்சனா வேணும்னா அம்மாகூடப் போய் ஒரு பத்து நாள் தங்கிவிட்டு வாயேன்" என்பாள். "வேண்டாம் அத்தை. ஒரு வழியாக பிரசவத்திற்கே போய்க்கிறேன்" என்பாள்.

அப்படி இருந்த மாமியார், மகள் ரஞ்சினி வந்ததிலிருந்து காஞ்சனா மீது எரிந்து, எரிந்து விழுகிறாள். அவள் எது செய்தாலும் அதில் ஒரு குற்றம் கண்டுபிடிக்கிறாள். இதையெல்லாம் பார்த்த ரஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் காலையில் ஆபீஸ் கிளம்பினான்.

இன்று காலையில் கூட அவரசமாக காபியை ஆற்றி "அத்தை.. காபி" என்றாள் காஞ்சனா. அவள் கொடுக்கும் போது டம்ளர் தவறி கீழே சிந்தியது. உடனே பர்வதம் "ஏன் காஞ்சனா பொறுமையாக செய்யக்கூடாதா? குழந்தை மேலே ஊற்றியிருந்தால் என்னவாயிருக்கும்?" என்று சத்தம் போட்டாள். ரஞ்சனிதான் "விடும்மா. அவ என்ன வேனும்னா சிந்தினா? கை தவறிதானே கீழே கொட்டிச்சி" என்றாள்.


மதியமும் அப்படித்தான். சமையில்கட்டுப் பக்கமே அனுப்பாத அவளை காஞ்சனா இன்று மதிய சமையலை நீ செய் என்றாள். சிறிது பயத்தோடுதான் மட்டன் குழம்பும், வறுவலும் தயார் செய்தாள் காஞ்சனா, குழம்பில் சிறிது காரம் அதிகமானதால் ரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை. "ஏன் காஞ்சனா, காரத்தை கொஞ்சம் கம்மியாய் போடலாமில்ல. இப்பப்பார் ரஞ்சனி சரியா சாப்பிடவே இல்லை." என்றாள் மாமியார்.

"சும்மா இரும்மா, மட்டனுக்கு காரம் கொஞ்சம் சுள்ளுன்னு இருந்தால்தான் நல்லாயிருக்கும். எனக்குத்தான் அல்சர். சும்மா அவளை தொணதொணன்னு ஏதாவது சொல்லிகிட்டே இருக்காதே! அவளும் சின்னப்பொண்ணுதானே! போக, போக எல்லாம் சரியாயிடும்" ரஞ்சனி சொல்ல காஞ்சனாவிற்கு அழுகை பீறிட்டது. இதெல்லாம் சின்ன சின்ன விசயம்தான் ஆனால் இதுநாள் வரை பேசாத அத்தை இப்போது இப்படி எடுத்தெறிந்து பேசுவதுதான் புதிதாய் இருக்கிறது.

இரவு ஏழு மணி.

ரஞ்சித் அப்போதுதான் ஆபீஸிலிருந்து வந்திருந்தான். காஞ்சனாவின் அழுது வீங்கிய முகத்தை அவனும் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக அக்கா குழந்தை தேஜாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ "காஞ்சனா காபி எடுத்துட்டு மாடிக்கு வா" என்றவன், சில நாளிதழோடு மாடிக்கு சென்றான். காஞ்சனா காபியோடு கிளம்ப தயார் ஆனாள். அதற்குள் அத்தை பர்வதம் "காபியை கொடு... நான் எடுத்துட்டுப் போறேன்..." என்று பிடுங்காத குறையாக வாங்கிச் சென்றாள். காஞ்சனாவும் பின்னாடியே சென்று கதவருகில் மறைந்து நின்று கொண்டாள்.

அம்மா ஏதோ சொல்ல வருகிறாள் என புரிந்து கொண்ட ரஞ்சித், "என்னம்மா?" என்று கேட்க...

"ரஞ்சித்! வந்த இரண்டு நாள்ல காஞ்சனா மீது நான் எரிந்து எரிந்து விழுகிறேன். நீ எதையும் சாதாரணமாக எடுத்துக்குவ. ஆனா ரஞ்சனி அப்படியில்ல. அவ ஏதாவது சின்ன விசயம்னாலும் உடனே கோபப்படுவா! அதே மாதிரி காஞ்சனா செய்யும் சின்ன தவறுகள் கூட ரஞ்சனியை பாதிக்கும். அதனால அவங்களுக்குள் ஒரு விரிசல் விழுந்திடக்கூடாதில்லையா..? இப்போ நான் இப்படி பேசினால் ரஞ்சனிக்கு காஞ்சனா மேல் உள்ள பாசம் அதிகரிக்கும். அவங்களுக்குள் ஒரு பாசக்கோடு விழுந்திடும். பிறகு அது எப்போதும் அழியாது.

இன்னும் இரண்டு நாள்ல ரஞ்சனி ஊருக்குப் போயிடுவா. பிறகு காஞ்சனாவிடம் சொல்லி சமாதானப்படுத்தலாம் என்றிருந்தேன். ஆனா அவ அழுறதை பார்க்க என்னால் சகிக்கலைடா. அதான் உன்கிட்ட சொல்லி அவளுக்கு புரிய வைக்கலாம்னு..."

மாமியார் சொல்லி முடிப்பதற்குள், "அத்தை என்னை மன்னிச்சிடுங்க. உங்களோட நல்ல மனசை புரிஞ்சிக்காம நான்தான் உங்களை தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்" மாமியார் பர்வதம் கைகளை பிடித்துக் கொண்டு கலங்கினாள் காஞ்சனா.

மாமியார், மருமகள் பாசக்கோட்டினை வியப்போடு பார்த்து நின்றான் ரஞ்சித்.


- ராஜேஸ்வரி பால்ராஜ்



3 comments:

தமிழ் பையன் said...

யப்பா.. சீரியல் எடுக்க சரியான கதை.

Kolipaiyan said...

@தமிழ் பையன் :
ஆமாம். பெரிய கதையா மாற்றலாம்...

மங்களூர் சிவா said...

/
யப்பா.. சீரியல் எடுக்க சரியான கதை.
/
haa haa :)

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top