அப்பா..! (ஒரு பக்கக் கதை)

'முதியோர் இல்லம்' போர்டு கண்ணில் பட்டதும் காரின் வேகம் குறைத்து நிறுத்தினான் கார்த்திக்.

கதவு திறந்து கைகொடுத்து அப்பா கீழிறங்க உதவினான். அதற்குள் முன்பக்கம் இருந்த மகன் இறங்கியிருந்தான். கொஞ்சம் தயக்கமாகவே தன் மகனுடனும், வயதான அப்பாவுடனும் உள்ளே நுழைந்தான்.

அப்பா சடகோபன் முகத்தை தற்செயலாக பார்ப்பதுபோல் பார்த்தான் கார்த்திக். முகத்தில் இறுக்கம் மண்டிக்கிடந்தது. சோகமா, கலக்கமா என்று கண்டுணர முடியாத கேள்விகள் முகத்தில் வரைபடங்களாகத் தெரிந்தன.


"வாங்கோ..." விடுதி நிர்வாகி வரவேற்றார். "அப்பாவா..." கேட்டுக்கொண்டார்.

நேற்று வந்து நிர்வாகியை சந்தித்து அட்வான்ஸ் பணம் கொடுத்துப் போயிருந்தான். அப்பாவை சேர்ப்பதில் தொடங்கி, மாதாந்திர கட்டணம் வரை தெரிந்து வந்திருந்தான்.

அப்பா பாவம். வாயில்லாப்பூச்சி. அம்மா இருந்தவரையில் அளந்து பேசுவார். அம்மா போனபின் நிஜமான வாயில்லாப்பூச்சியாகவே மாறியிருந்தார். ஆனாலும் அப்பாவை பார்த்தால் மைதிலிக்கு ஆகிறதில்லை.

"எப்பப்பாருங்க உங்கப்பா மூக்கை சீந்திண்டு... சில சமயம் சுவரில்கூட மூக்கு ஒழுகலை தடவி வைக்கிறார்..." புகார் பட்டியலை அவ்வப்போது அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அப்பாவுக்கு சோதனையாய் வந்து சேர்ந்திருந்த வறட்டு இருமல் மைதிலியின் தூக்கத்தை தற்காலிகத் தடை செய்தது. அதுகூட, அவள் புகாருக்கு காரணமாக இருக்கலாம்.

"இதோ பாருங்க. இப்ப நல்ல ஹோம்லாம் வந்தாச்சு. நாமா வீட்ல வச்சிப் பார்த்தாலும் அப்படிக் கவனிக்க முடியாதுன்னு சொல்றாங்க. இங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில தான் புதுசா ஆரம்பிச்ச அந்த ஹோம் இருக்கு.. என் பிரண்ட் கோமதியோட மாமனார் இப்ப அங்கேதான் சவுக்கியமா இருக்கார். மாசம் பீஸ் மூவாயிரம் வாங்கறாங்களாம். எதுக்கும் ஒரு நடை எட்டிப்பார்த்துட்டு வாங்களேன்." என்று மைதிலி ஒருநாள் தடாலடியாக சொன்னபோது அவனால் அவளை முறைக்கத்தான் முடிந்தது.

அடுத்தடுத்த இரவுகளில் "நான் சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணிப்பாருங்க" என்று சொல்லத் தொடங்கி அவனை `மூடுஅவுட்' பண்ணினாள்.

அவன் பக்குவமாய் சொல்லிப்பார்த்தான். "நம் காதலைக்கூட கண்ணியமாய் ஏற்றுக் கொண்ட அப்பாவை எப்படி விடுதிக்கு...? உன் எண்ணமே தப்பு..." பேசிப்பார்த்தான். எடுபடவில்லை.

அடுத்து வந்த இரவுகளில் புரண்டு படுத்தாள். 'நைட்லாம்ப்பின்' மெல்லிய ஒளியில் முதுகு காட்டி தூங்கத் தொடங்கி, அவனது நிம்மதியான தூக்கத்துக்கு 'வேட்டு' வைத்தாள்.

அப்போதும் அப்பாவை தாங்கினான். படிக்கிற காலத்தில் அவனுக்கு பிடித்ததை படிக்கச்சொன்ன அப்பா! அவன் விருப்பத்துக்கு மாறாக எதையுமே செய்யாத அப்பா! மைதிலியை காதலிப்பதாக சொன்னபோது கூட, மகனின் பிரியத்துக்கு மறுப்பு சொல்லாமல் அம்மாவின் முணுமுணுப்பையும் தாண்டி(என்ன குலமோ..என்ன கோத்திரமோ...?) திருமணம் செய்து வைத்த அப்பா.

மைதிலியும் மாமனாரிடம் பிரியமாகவே நடந்து கொண்டாள், மாமியார் இருக்கும்வரை.

அப்புறமாய் அவரை கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்தபோது முதுமை வாசனை அவளை சங்கடப்படுத்தியது.

முதுமை மாமனாருக்குள் பலவீனமாய் இருமல் கொண்டு வந்தபோது... தரையில் கிடந்த `கோழை'க்கு முதல் நாள் சின்னதாய் முகம்

சுளித்தாள்.நாளடைவில் அவரை பார்க்கும்போதெல்லாம் முகச்சுளிப்பு நிரந்தரமாயிற்று. ஒரு இரவின் நெருக்கத்தில் அதை கணவனின் காதிலும் போட்டுப்பார்த்தாள்.

ஆனால் இது விஷயத்தில் மனைவியை சமாளித்து விடலாம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்ட கார்த்திக் ஏமாந்து போனான்.

ஒரு கட்டத்தில் `மனைவியா, அப்பாவா' என்று முடிவெடுக்கிற அளவுக்கு நிலைமை விபரீதமானது. பகலிலும் பாராமுகம் காட்டினாள். நினைத்தது நடக்காத ஆத்திரம் டைனிங் டேபிளில் பாத்திரங்களின் `தட்...தட்...' ஓசையிலும் எதிரொலித்தது. இனியும் அப்பா விஷயமாய் மனைவியிடம் மல்லுக்கட்டினால் அதனால் உறவுச்சிக்கல் வரை போய் மகனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடக்கூடும்.

அப்பாவுக்கு இவன் ஒரே வாரிசு. இவனுக்கு மகன் மகேஷ் ஒரே வாரிசு. 6-வது படிக்கும் மகேஷ் முழுக்க அம்மா பிள்ளை. அதே நேரம் தாத்தா செல்லம்.

ஆனாலும் நோய்த் தொற்றை காரணம் காட்டி மகேஷை தாத்தாவிடம் நெருங்காமல் பார்த்துக்கொண்டாள் மைதிலி. பேரனின் அருகாமை கூட தவிர்க்கப் பட்ட அப்பா, அனாதை போல் பரிதாபப் பார்வையுடன் வீட்டில் நடமாடியதை ஜீரணிக்கத் திணறினான் கார்த்திக்.

ஜன்னல் கதவு திறந்திருந்தும் மூச்சு முட்டிய ஒரு மாலைப் பொழுதில் அப்பாவிடம் மனம் திறந்தான். "மாச வாடகை மூவாயிரம்ப்பா. நல்ல வசதி. வாரம் ஒரு தடவை பார்க்க வந்துடறேன்" என்றான். சொல்லும்போதே குரல் தழுதழுப்பில் உள்வாங்கியது.

அப்பா மவுனமாக பார்த்தார். பேசவில்லை. பார்வையில் இருந்த அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டு, அப்பாவின் சொற்ப உடமைகளையும் எடுத்துக்கொண்டு... இதோ முதியோர் இல்லம்.

"பார்ம் பில்லப் பண்ணிட்டேன் சார். படிச்சுப் பார்த்துட்டு ஒரு ஸைன் போட்டுடுங்க."

விடுதி நிர்வாகி சொல்ல, `எஸ்.கார்த்திக்' போட்டான்.

"அப்பா..." - மகன் மகேஷ் அழைத்தான்.

"தாத்தாவை ஹோம்ல விடத்தானே வந்திருக்கிறோம்."

"ஆமாப்பா..."

"தாத்தாவை விட்டுட்ட பிறகு அவர் இன்ஷியல் மட்டும் உனக்கு எதுக்குப்பா? இன்ஷியல் இல்லாம ஸைன் போடுப்பா..."

கடவுளே குழந்தையாக வந்து பொட்டில் அறைந்தது போலிருந்தது. `என் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருந்த அப்பாவை தூக்கிப் போட்டுவிட்டு அவர் இனிஷியலை மட்டும் பயன்படுத்திக் கொள்ள எனக்கென்ன தகுதி இருக்கிறது?' அதிர்ச்சி விலகாமல் அப்பாவை நோக்கினான்.

"வீட்டுக்குப் போலாம்பா..." என்றான்.

அப்பா இப்போது அமைதியாய் இருக்கவில்லை. பேசினார். "கார்த்திக்... உங்கம்மா எப்ப போனாளோ அப்போது முதலே தனிமையை ரொம்ப `பீல்' பண்றேன். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியே கணவன்-மனைவி நேசிப்பில் தான் இருக்கு. அதை நான் வாழ்ந்து பார்த்தவன். ஆனால் அதே சந்தோஷம் என் மூலம் உனக்கு தடைபடறதை உன்அப்பாவா என்னால் நிச்சயம் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. அதனால இருக்கிற மிச்சம்

மீதி நாட்களை இங்கேயே கழிச்சிடறேன். தயவுசெய்து தடுக்காதே."

அப்பா அந்த இயலாமையிலும் மகனைப் பார்த்து கைகூப்ப முயல...

அதற்குள் முந்திக்கொண்டு அந்தக் கையைப் பிடித்துக்கொண்ட கார்த்திக், குழந்தை மாதிரி அழத் தொடங்கினான்.

விடுதி நிர்வாகி அவரையும் மீறி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.

- கே.பாலசுந்தரம்



7 comments:

மாய உலகம் said...

நல்ல கதை ....

Unknown said...

நெஞ்சை தொட்ட கதை, இது போலான மருமகள்களும் மாமனார்களும் இருக்கின்ற இந்தியாவில் இதற்கெல்லாம் எப்பொழுதான் விடிவு வருமோ?

karthik vaigai said...

நல்ல கதை ...நல்ல கதை ...

Kolipaiyan said...

@மாய உலகம்,
@இரவு வானம்,
@karthik vaigai :

வருகைக்கு நன்றி நண்பா

மங்களூர் சிவா said...

very nice

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

gud story

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top