Showing posts with label ஒரு பக்கக் கதை. Show all posts
Showing posts with label ஒரு பக்கக் கதை. Show all posts

ஜென் கதை: பிரார்த்தனையின் வழி


எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே. இதை உணர்த்தும் ஒரு ஆன்மிக கதையை பார்க்கலாம்.


சமய நூல்களையும், சூத்திரங்களையும் திறம்பட கற்ற மகா குரு ஒருவர் இருந்தார். அவர் இறைவனை வழிபடும் போது இந்த முறையில், இந்த வழியில்தான் பிரார்த்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டவர். அவர் கூறும் தத்துவங்களையும், அறிவுரைகளையும் கேட்டு மக்கள் பலரும் மெய்மறந்து போவார்கள்.

ஒரு முறை அந்த மகா குரு கப்பல் பயணம் மேற்கொண்டார். கப்பல் பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, பலர் அவரது சீடர்களாக மாறிவிட்டனர். ஒரு நாள் அதிகாலை நேரம் மகா குரு கப்பலில் நின்று கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் மணல் திட்டு ஒன்று தென்பட்டது. உடனடியாக கப்பல் மாலுமியை அழைத்து, ‘அது என்ன மணல் திட்டு?’ என்று கேட்டார்.

‘ஆத ஒரு சிறிய தீவு. கடலில் மூழ்கிய ஒரு மலையில் சிறு பகுதி’ என்றான் கப்பல் மாலுமி.

உடனே மகாகுரு, ‘அந்த இடத்தில் யாராவது இருக் கிறார்களா?’ என்றார்.

மாலுமி, ‘அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. யாரோ மூன்று துறவிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு ஓரிரு இலந்தை மரங்கள்தான் இருக்கின்றன. இவர்கள் எப்படித்தான் அங்கு வசிக்கிறார்களோ?’ என்றான்.

அவனது வார்த்தையைக் கேட்ட மகாகுரு, ‘என்ன துறவிகளா?’ என்று வியந்தபடி, அந்த பகுதிக்கு கப் பலைச் செலுத்தும்படி உத்தரவிட்டார்.

அவர் சொல்படியே, கப்பல் அந்த மணல் திட்டின் அருகில் போய் நின்றது. கப்பலை விட்டு இறங்கிய மகா குரு, ‘நான் அந்த துறவிகளைக் காண வேண்டும். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று அறிய வேண்டும். அவர்கள் பண்டிதர்களாக இருந்தால், அவர்களுடன் வாதிட்டு, புத்தரை வழி படும்படி செய்துவிட்டு திரும்புவேன். பாமரர்களாக இருந்தால் என்னுடைய கருத்துக்களை போதிப்பேன். மாலைக்குள் நான் இந்தக் கப்பலுக்கு வந்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு மணல் திட்டில் இறங்கி காட்டிற்குள் நடக்கத் தொடங்கினார்.

கொஞ்ச தூரத்தில் ஒரு குடில் இருந்தது. அதில் மூவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வயோதிகர்களாக இருந்தனர். சாதாரண உடையால் அவர்களின் தோற்றம் பிச்சைக்காரர்களைப் போல் காணப்பட்டது.

மகா குருவின் தோற்றத்தைப் பார்த்ததும் மூவரும் வணக்கம் தெரிவித்தனர். குருவும் பதில் வணக்கம் கூறிவிட்டு, ‘நீங்கள் மூவரும் துறவிகளா?’ என்றார்.

‘இல்லை ஐயா..’ என்றார் அவர்களில் ஒருவர். ‘துறப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது? நாங்கள் எதைத் துறப்பது? எதனிடம் இருந்து துறப்பது?’ என்றார் மற்றொருவர்.

இப்போது குரு, ‘நீங்கள் எந்த மதம்?’ என்றார்.

அவர்களுக்கு ஒரே குழப்பம், ‘மதமா..? அப்படியென்றால்..?’

‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டார் குரு.

மூவருக்கும் மீண்டும் குழப்பம் ‘வழிபாடா?’ என்ற படி ‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

மகா குரு, ‘நான் புத்தரை வழிபடுபவன்’

‘ஓ.. புத்தரா? அவர் வணக்கத்திற்கு உரியவர்தான். நாங்களும் அவரை வணங்குவோம்’ என்றனர்.

‘எப்படி வணங்குவீர்கள்?. உங்கள் வழிபாட்டு முறை என்ன?’ என்றார் மகா குரு.

‘வழிபாட்டு முறை.. வழிபாட்டு நேரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது மனதிற்குள், ‘பூமியை படைத்தவனுக்கு வணக்கம். புத்தருக்கு வணக்கம். புத்தருக்கு முன்னும், பின்னும் உலகின் துயரங்களுக்கு விரிவு காண முயன்ற அனைவருக்கும் வணக்கம்’ என்று பிரார்த்திப்போம். அவ்வளவுதான்’ என்றனர் மூவரும்.

குருவிற்கு சிரிப்புதான் வந்தது. ‘இது சரியான முறை அல்ல.. எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கிறது. நியதி இருக்கிறது. அதுபோலத்தான் வழிபட வேண்டும். அதை நான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன்’ என்று கூறியவர், அவர்களுக்கு ஸ்தோத்திரங்கள், பாடல்கள், சூத்திரங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். சொல்லிக்கொடுத்ததை அவர்களிடம் ஒப்புவிக்க கூறினார். அவர்கள் திணறினர். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தார். ஓரளவு புரிந்து கொண்டதுபோல் தெரிந்தது குருவிற்கு. அதற்குள் மாலை நேரம் வந்து விட்டதால் குரு, மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கப்பலுக்குத் திரும்பினார்.

கப்பல் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், தீவில் இருந்த மூவரும் ஓடிவந்தனர். அவர்கள் குருவிடம், ‘எங்களை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னது எல்லாம் மறந்து போச்சு.. இன்னொரு தடவை சொல்லிக் கொடுங்க’ என்றனர்.

மகா குருவிற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.

‘நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும். உங்களின் வழிபாடு எதுவோ, அதையே செய்யுங்கள். ஏனெனில் அதைத்தான் புத்தர் விரும்புகிறார். அதில் எளிமை உள்ளது. அவர் நேசிப்பது அந்த எளிமையைத்தான்’ என்றார்.

எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image



தெனாலிராமன் கதைகள் 2

கதை 1 : பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது.

அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர், "ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?" எனக் கேட்டார்.

"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!" என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது," என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

கதை 2 :கிடைத்ததில் சம பங்குபங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது.

தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Rammalar



ரஜினி சொன்ன குட்டி கதை - 05


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செல்லும் பொது மேடைகளில் குட்டி கதைகளை சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன குட்டிகதைகளின் தொகுப்பே இந்த பதிவு.

ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

ஒரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.

அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, “நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்” என்றார்.

அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்திச்சாங்க. “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று குரு கேட்டார். ஒருத்தன் சொன்னான், ‘எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும்’னு. ‘எடுத்துக்கொள்” என்று குரு சொன்னார்.

இன்னொருத்தன், ‘எனக்கு நிம்மதி மட்டும் போதும்’ என்றான். ‘எடுத்துக்கொள்’ என்றார் குரு.

5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனைச் சந்திச்சார். ‘எனக்கு பணம் வந்தது. ஆனால் நிம்மதி இல்லை’ன்னு சொன்னான்.

நிம்மதி வேணும்னு கேட்டவன்கிட்ட போனார் குரு. அவனோ, ‘எனக்கு நிம்மதி இருக்கு. சந்தோஷம் இல்லை’ன்னு சொன்னான்.

பணம் கேட்டவனைப் பார்த்து, ‘நீ சம்பாதிச்ச பணத்தை நீயே வச்சிக்கிட்டே. அதனால்தான் நிம்மதி இல்லை”ன்னு குரு சொன்னார்.

அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, “நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவிகள் செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்களே”ன்னான்.

“ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு” ன்னு குரு சொன்னார்.

“பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதைச் செய்…”, என்று குரு அறிவுரை சொன்னார்.



கஷ்டப்படாம சம்பாதிக்க ஆசைப்பட்டா!

மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.

ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார்.

ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.., என்று.

அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார்.

இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, இலவச உதவிகளை ஏமாத்தி வாங்கினா… உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!



கண்ணதாசனின் குட்டிக்கதைகள்

கண்ணதாசனின் குட்டிக்கதை - குறக்குளி இழுத்தல்

சுடுகாட்டில் அந்த சடலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

சிதைக்குத் தீ மூட்டியதும், சடலம் சூடுபட்டு நரம்புகள் முறுக்கேறி, பிரேதம் எழுந்து உட்காரும். இதை, "குறக்குளி இழுத்தல்" என்பர். அப்படி பிரேதம் எழுந்ததும், வெட்டியான்கள், அந்த உடலைத் தடியால் அடித்து, மீண்டும் படுக்கையில் கிடத்துவர்.

ஒருமுறை, வட்டிக்காரனின் பிரேதம், தீ மூட்டப்பட்டது. பிரேதம் சூடு கண்டதும், குறக்குளி இழுத்து, எழுந்து உட்கார்ந்தது. உடனே வெட்டியான், "வட்டி எல்லாம் வசூலாகி விட்டது!" என்றான்.

மீண்டும் படுத்துக் கொண்டது பிரேதம், நிம்மதியுடன்!


கண்ணதாசனின் குட்டிக்கதை - மகா ஞானி

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார். பக்கத்தில் மனைவியைக் காணவில்லை.

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக்காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் "எனக்கு மிக்க மகிழ்ச்சி! ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே !"

"நீயல்ல, குதிரைக் காரன்"

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்..! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !"


கண்ணதாசனின் குட்டிக்கதை - விதி வலியது

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒவொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது , "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று கேட்பது அவன் வழக்கம்.

இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது. அவளும் இறக்கமுற்றாள். சிவனிடம் பார்வதிதேவி பிச்சைக்காரனிடம் இரக்கம் காட்டும்படி வேண்டினாள்.

சிவபெருமான் இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் பிராப்தம் என்றும், அவன் விதியை தம்மால் மாற்றமுடியாது என்று எவ்வுளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிகொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை. தாய் அல்லவா ?

"முடிந்தால் அவன் விதியை மாற்றி கொள்" என்று சிவபிறான் கூறி விடுகிறர்.

"நான் அவனை மிக பெரிய கோடீஸ்வரனாக மாற்றி அவன் விதியை நான் மாற்றி காட்டிகிறேன்" என்று ஈசனிடம் சவால் விடுகிறாள் பார்வதி தேவி.

ஈசன் மனதுக்குள் சிரித்து கொள்கிறார்.

ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் மூன்று மூடைகள் தங்க கட்டிகளை அவன் வரும் வழியில் போடுகிறாள் பார்வதி.

அந்த நேரம் பார்த்து பிச்சைகாரனுக்கு திடீரென "ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது ?" என்ற எண்ணம் வருகிறது.

கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்துகொண்டு, இரு கண்களையும் மூடிக்கொண்டு பக்கத்து வீடிற்கு செல்கிறான் பிச்சை காரன். வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டைகள் காலில் இடறுகிறது.

பிச்சைகாரனோ, கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்த பொற்காசு மூடைகளை கல் எண்று நினைத்து, கால்களால் உதைத்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு சென்றடைகிறான்.

அடுத்த வீட்டிற்க்கு சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களையும் திறந்து கொண்டு, குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்துகொண்டு, அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு வழக்கம்போல, "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று வழக்கம்போல் கூவுகிறான்.

விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது...! என்பது இக் கதையின் நோக்கம்.

கொசுறு செய்தி

திருவையாறு பெயர் காரணம் ..?
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம் 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் இங்கே பிரிவதால், இவ்வூர் திரு+ஐ(ஐந்து)+ஆறு என்றாகி, அது திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நாத பிரம்மம் தியாகராஜர் சமாதி உள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ரஜினி சொன்ன குட்டி கதை - 04

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செல்லும் பொது மேடைகளில் குட்டி கதைகளை சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன குட்டிகதைகளின் தொகுப்பே இந்த பதிவு.

நான் தான் ராஜா


ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பபடுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.

1 வருஷம் இல்ல 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்.

எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து "நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு.." கேட்டாரு. அதற்கு ராஜா
"நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."

பயந்தா ஜெயிக்கிறது எப்படி…!


மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம்.

மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, "போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது" என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது.

அதே குரல், ஆனா தவளை கண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் கேட்டுக்கொண்டே தான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது.

இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம்பித்தது.

அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங்களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி.
"அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது.

நாமளும் அப்படித்தான்… பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும். பயந்தா ஜெயிக்கிறது எப்படி?," என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கவலை - ஒரு பக்கக் நீதிக்கதை

காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே! கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது?" என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.


அப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், "என்னப்பா, உனக்கு என்ன கவலை? உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்?" என்று கேட்டது.

"இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன்" என்றது யானை.

யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.

அன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.

கதையின் நீதி:-

கவலையைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், மற்ற இன்பங்கள் காணாமல் போய்விடும்.


ரஜினி சொன்ன குட்டி கதைகள் - 2

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

ஏன் இங்கே இருக்கோம் ...?!

ஒரு தாய் ஒட்டகத்தை பார்த்து குட்டி ஒட்டகம் "அம்மா எமக்கு அதற்காக நீண்ட கால்கள் உள்ளன" என்று கேட்டது. அதற்கு தாய் ஒட்டகம் "நாம் பாலைவனத்தில் மணல்களுக்குள் நடப்பதற்கு இலகுவாக கால்கள் நீளமாக படைக்கப்பட்டுள்ளது" என்று கூறியது.

"சரி எதற்காக நமது உதடுகள் இவ்வளவு சொரசொரப்பாக உள்ளன" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் வெப்பம் அதிகம் என்பதாலும் பாலைவனத்தில் கிடைக்கும் உணவுகள் உலர்ந்ததாகவும் மெல்ல முடியாமலும் இருக்கும் என்பதாலும் அதற்கேற்றால் போல உதடுகள் படைக்கப்பட்டுள்ளது" என தாய் ஒட்டகம் கூறியது.

"அப்படியானால் எதற்கு எமக்கு பெரிய கழுத்துக்கள் உள்ளது" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் உணவு, நீர் என்பன கிடைப்பது அரிது என்பதால் கிடைக்கும் உணவு, நீர் என்பவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கவே பெரிய கழுத்துக்கள் படைக்கப்பட்டன" என தாய் ஒட்டகம் பதில் கூறியது.


"அதெல்லாம் சரி பின்னர் எதற்காக நாம் இருவரையும் இங்கு அடைத்து வைத்துள்ளனர்" என்று விலங்கு காட்சிசாலையில் இருந்த அந்த குட்டி ஒட்டகம் தன் தாயை பார்த்து கேட்டது.

இந்தக்கதையின் தாக்கம் என்மனதில் பல கேள்விகளை உண்டாக்கியது, உங்களுக்கும் இந்த கதை ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன் என்றார் ரஜினி. இவர் எதனை சொல்ல வருகிறார் என்பது உங்களுக்கும் புரிதிருக்கும் என்று நினைக்கிறன்.

நேரம் நல்லாயிருந்தா…!!!!

ஒரு ஊரில் ஒரு சம்சாரி. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. நூறாண்டு வாழ்ந்த ஒருவரைப் பார்த்தான். ‘இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீர்கலே எப்படி! எப்படி?’ என்று கேட்டான்.

அதற்க்கு அவர், “நான் மாமிசம் சாப்பிடமேட்டேன். தண்ணி அடிக்க மேட்டேன். அதனால் தான்!” என்று பதிலளித்தார்.

லேசான இருமல் சத்தம் கேட்டது. இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.

“எங்கள் அண்ணன்” என்றார் அந்த நூறாண்டு மனிதர். “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்கவேண்டுமே” என்றார் சம்சாரி.


அவரை பார்த்தார். “எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன், தண்ணி அடிப்பேன்” என்றார் நூறாண்டு மனிதரின் அண்ணன். நமக்கு நல்ல நேரம் என்றால் விஷம் சாப்பிட்டாலும் தப்பித்துவிடுவோம். கெட்ட நேரம் என்றால் பாலும் விஷமாகலாம்.”

குறிப்பு: ரஜினியே எதிர்த்திருந்தாலும், நேரம் நல்லாயிருந்துனால ஒருத்தரு போன லோக்சபா தேர்தல்ல அசால்ட்டா எல்லா சீட்டும் ஜெயிச்சாரு. அதே நேரம் இப்போ சரியில்லை எனும்போது – ஒரு பெரிய கூட்டணியில இருந்து கூட – அவரால ஒரு சீட் கூட ஜெயிக்க முடியலே…

ஸோ, எல்லாத்துக்கும் நேரம் ரொம்ப முக்கியம்…..!!

Thanks : Eegarai & Eppoodi
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஆணிவேர் - ஒரு பக்கக் கதை!

மதன்-மைதிலி திருமணம் பேசிமுடித்த நாளில் இருந்தே பிரச்சினை தான். பெண் வீட்டிலோ பையன் வீட்டிலோ யாராவது ஒருவர் உப்பு பெறாத விஷயத்துக்குக் கூட முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

இதனால் எந்த நிமிடத்திலும் கல்யாண ஏற்பாடுகள் நின்று விடுமோ என்ற பயம்கூட இருவர் வீட்டிலும் நிலைகொண்டிருந்தது.

மைதிலியின் அப்பா திருமண பத்திரிகை அச்சடித்த கையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து மாப்பிள்ளையின் பெரியப்பா பத்திரிகை படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மாப்பிள்ளையின் பெரியப்பா என்று அவர் நெற்றியில் எழுதியா ஒட்டியிருந்தது? அதனால் யாரோ வயசான பெரியவர் என்ற பட்டியலில் அவரை சேர்த்து விட்ட பெண்ணின் அப்பா அவரை கண்டு கொள்ளாமலே போய் விட்டார்.


அவர் போனாரோ இல்லையோ மாப்பிள்ளையின் பெரியப்பா இதையே ஒரு கொடும் குற்றமாக எடுத்துக்கொண்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.

"என்னை அவமானப்படுத்தியவன் வீட்டில் பொண்ணு எடுத்துத்தான் ஆகணுமா?" என்று அவர் போட்ட கூச்சலில் அந்தப்பக்கமாக போய்க்கொண்டிருந்த ஒரு தெருநாய் கூட வாலை சுருட்டியபடி ஓட்டம் பிடித்தது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாப்பிள்ளையின் அப்பா பராங்குசம், சீர்வரிசைப்பட்டியலில் கடைசியாக பைக்கையும் சேர்த்தார். பைக் கொடுக்கமுடியாவிட்டால் தன் அண்ணனின் ஆசையை நிறைவேற்றிய மாதிரிஆச்சு. பைக் கிடைத்துவிட்டால் அண்ணனின் காட்டுக்கத்தலுக்கு கிடைத்த போனசாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.

கையில், பையில் இருந்ததெல்லாவற்றையும் பெண்ணின் கல்யாணத்துக்கு வாரிவிட்ட பெண்ணின் அப்பா செங்கோடன் புதிதாக வந்த 'பைக்' திணிப்பில் நொந்து போய்விட்டார். பைக் பற்றி சொல்லிவிட்டுப்போக வந்த மாப்பிள்ளையின் தூரத்து சொந்தக்காரரிடம் 'குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

அதைப்பார்த்து பயந்துபோன அந்த மனிதர், தோளில் போட்டிருந்த துண்டு பறந்து போவதுகூட தெரியாமல் அப்போது எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஓட்டமாய் ஒடிப்போய் ஏறிக்கொண்டு விட்டார்.

அதிலிருந்து கடுகு வெடிக்க ஆரம்பித்தது.

எப்படியோ ஊர் பெரிசுகள் தலையிட்டதில் கல்யாணம் முடிந்து இதோ முதல் பந்தி ஆரம்பம்.

வீட்டு பெரிசுகள் இனி எப்படி முட்டிக்கொண்டாலும் மதனும் மைதிலியும் குடும்பத்தை ஓட்டியாகணுமே. ஆயிரம் காலத்துப் பயிராயிற்றே...

எல்லாம் முடிந்து மண்டபம் காலி செய்து மாப்பிள்ளை வீடு வந்தாயிற்று. பெண் வீட்டாரும் கொஞ்சப் பேர் உடன் வந்தார்கள். மாப்பிள்ளை தன் புது மனைவியிடம் "மைதிலி காபி கொண்டா" என்றான்.

மைதிலியும் காபி போட்டு எடுத்து வந்தாள். முதல் சேவகம் தானே... கணவனாகி விட்ட மதனிடம் காபியை நீட்ட, வாங்கிய மதன் கை நழுவ விட்டதில் காபி கொட்டி விட்டது. அதுவும் அவன் கல்யாண பேண்ட் மீது.


இந்த காட்சியை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரு வீட்டாரும் 'ஆஹா கிடைத்து விட்டதடா பிரச்சினை' என்ற சந்தோஷத்தில் நெருங்கினார்கள்.

"கூறுகெட்ட பிள்ளை, முதல் முதலா காபி கொடுக்கிறா. ஒழுங்கா கொடுக்கத் தெரியுதா? எப்படித்தான் குப்ப கொட்டப் போறாளோ?"

"திமிர் பிடித்த பையன், எங்கேயோ பார்த்துக்கிட்டு காப்பிய வாங்கினா இப்படித்தான்"

வெறும் வாயை மென்று கொண்டிருந்த கூட்டம் பிரச்சினையைக் கிளப்ப...

மைதிலியும், மதனும் அதிர்ந்தார்கள். இதுவரை எப்படியோ... இப்போது தாலி கட்டியாயிற்று. இனி இவர்களின் கவுரவ பசிக்கு நாம் இரையாகி விடக்கூடாது.

முடிவுக்கு வந்த மாப்பிள்ளை கேட்டான். "மைதிலி, என்னம்மா ஆச்சு?"

"முதன் முதலாய் ஆசையா காபி போட்டுக் கொண்டு வந்தேன். என் கவனக் குறைவினாலே காப்பி கொட்டிப் போச்சு மாமா". பெண் சொன்னாள்.

"இல்லம்மா... ஆசைஆசையாய் நீ போட்டுக் கொண்டு வந்த காபியை அஜாக்கிரதையாய் நான் வாங்கியதால் வந்த வினை. தப்பு என் மேலே தான்".- இது மாப்பிள்ளை.

வார்த்தைகளில் தம்பதியர் விட்டுக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தது இரு வீட்டாருக்குள்ளும் அதிர்ச்சி கலந்த வெட்கத்தை ஏற்படுத்தி வைக்க,

புதமண தம்பதியரைப் பார்த்து வாயடைத்து நின்றன பெரிசுகள்.

மைதிலி அடுத்த காபி கொண்டுவரப் போனாள்.

-பி.எஸ்.ஜேம்ஸ்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



நாணயம் - ஒரு பக்கக் கதை!

அந்த கிராமத்தின் கடைக்கோடியில் இருந்த அண்ணாச்சி கடை என்றால் தெரியாதவர்கள் இல்லை. நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் அண்ணாச்சி. காலை, பகல் பொழுதை விட, மாலை வேளைகளில் தான் கடையில் கூட்டம் மிகுதியாக காணப்படும், ஊரில் பெரும்பாலும் கூலிப்பாட்டு மக்கள்தான்! மானம்பார்த்த தெக்கத்திச் சீமை மண்ணையே நம்பி வாழும் சனங்க.

உடல் உழைப்பையும், கூலிப்பாட்டையுமே நம்பி வாழும் கூட்டம், வேலை முடிந்து களைத்து வீடு திரும்பும்போது கூலிக்காசுக்கு அரிசி, பருப்பு, புளி என்று வாங்கிப் போய் உலை வைத்து பொங்கித் தின்று எட்டு மணிக்கெல்லாம் முடங்கி விடுவார்கள்.

காலையில் கூலிப்பாட்டுக்கு வெள்ளன எழும்பணுமே! அதனால் பலசரக்கு சாமான் வாங்க மாலைப் பொழுதில்தான் அண்ணாச்சி கடையில் கூட்டம் கூடும்.

"அண்ணாச்சி அரை கிலோ புழுங்கரிசி. நூறு மொளகாத் தூளு, நூறு பருப்பு, அம்பது புளி. வெரசா கட்டிக் குடுங்க!" முந்தானை முடிச்சிலிருந்து காசை எடுத்துப் பிரித்தபடியே சொன்னாள் பவுனம்மா.

பவுனம்மா அருகில் நின்றிருந்த காமாட்சி கேட்டாள். ``என்ன பவுனு இன்னிக்கென்ன வெறும் சாம்பாரு தானாக்கும், வெஞ்சனமில்லியா?''

"ஆமா தெனமும் நாலுவகை பொரியல் காய்கறிகளோட விருந்து சாப்பாடா சமைக்கிறேன்? கிடைக்கிற கூலிக்காசிலே அரிசிக்கே அரைவாசிப் பணம் போயிருது. இதுல வெஞ்சனத்துக்கு வேறு நாக்கு அலையுதாக்கும்? மோர் மொளவா பொரிச்சா போதும்'' என்றபடி காசைக் கொடுத்துவிட்டு சாமான்களை அள்ளிக்கொண்டு நடந்தாள்.

அப்போதுதான் கவனித்தார் அண்ணாச்சி. சனிக்கிழமை தோறும் கூலிப்பணம் வாங்கியதும் கொஞ்சமாக மளிகை சாமான் வாங்கும் தேவானை தயங்கி நிற்பது தெரிந்தது. கூட்டம் கலையட்டும் என்று காத்திருப்பது போலிருந்தது.


``என்னலே ஒதுங்கி நிக்கே, சட்டுபுட்டுனு சாமான்க வாங்கிப் போவியா.. இப்படி ஒத்தையிலே நிக்கியே? என்ன வேணும்?'' கேட்டார் அண்ணாச்சி. "அரைக்கிலோ அரிசி, கருப்பட்டி காக்கிலோ, காப்பித்தூளு அம்பது, புளி நூறு வேணும்.

``அறுபத்தேழாச்சு''.

``தப்பா நெனைச்சுக்கிடாதிய அண்ணாச்சி. காசு கம்மியாயிருக்கு. பதினைஞ்சு ரூவாதே இப்பம் இருக்கு. மிச்சத்தை கடன்லே எழுதிக்கிடுங்க'' என்றபடி தயக்கத்தோடு கையிலிருந்த காசைக் கொடுத்தாள்.

``இதுக்காவா சொணங்கி நின்னே? எப்பமும் வாங்குகிற ஆளுதானே நீ! அதனாலென்ன ஜாமான் வாங்கிப்போ. காசு வந்ததும் குடு'' என்றபடி பொட்டலங்களை பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுத்தார்.

``பிஞ்சு கத்தரிக்காயா வாங்கி சுள்ளுனு புளிக்கொழம்பு வைக்கணும். கையிலே அஞ்சு ரூவாதே மிச்சமிருக்கு!'' தனக்குத்தானே முனுமுணுத்தபடி நடந்தாள் தேவானை.

அவள் கணவன் தேனப்பனுக்கு சூளையில் கல்லடுக்குகிற வேலை. வேலை கிடைத்தால் கூலி. வானம் மப்புத்தட்டி மூடியிருந்தால் சூளையில் வேலை நடக்காது. மண்ணும் மிதிக்க மாட்டார்கள். இரண்டு பிள்ளைகள். கூலிப்பணம் இல்லையென்றால் கும்பி எப்படி நிறையும்? கோழிக்குஞ்சாய் தீனிக்கு பறக்கும் குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியுமா? பவலையில் கெவுருக் கூழைக் கரைத்துக் குடிச்சாலும் ராப்பொழுதுக்கு கொதிக்கக், கொதிக்க புளிக்குழம்போடு சோறு கிடைக்கும் என்று காத்திருக்கிற குஞ்சும், குலுவனுமாச்சே? புருஷனுக்கு கூலிப்பாடு இல்லாத நாட்களில் உடையார் ரைஸ் மில்லுக்குப் போய் அரிசி புடைப்பாள். கூலிக்காசோடு கொஞ்சம் அரிசிக் குருணையும் கிடைக்கும். அரிசி வாங்கக் காசில்லாத இக்கட்டான நேரங்களில் அந்த அரிசிக் குருணை கமகமக்கும் சுடுகஞ்சியாக மாறும்! தொட்டுக் கொள்ள தோதாய் பருப்புத் துவையல் அரைப்பாள் தேவானை.

அண்ணாச்சி கடையில் கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. பொழுதடையும் நேரத்தில் வேர்க்க, விறுவிறுக்க ஓலைக்கூடையோடு வந்தாள் வேலம்மா.

``அண்ணாச்சி சுள்ளிக்கட்டு வித்து வர்ற பணத்திலேதான் தெனத்திக்கும் அரிசி, பருப்பு வாங்குவேன். இட்லிக்காரம்மா இன்னிக்கி காசு தரலே. நாளைக்குத் தரம்னுட்டாவ! நாள் வந்து சோறாக்கித் தருவேன்னு வூட்லே புள்ளைவ பசியோட காத்துக் கெடக்குங்க. இன்னிக்கி மட்டும் அரிசி, பருப்பு, எண்ணெய் குடுங்க அண்ணாச்சி. நாளைக்கு சுள்ளிக்கட்டு வித்த பணத்த வாங்கித் தந்துடறேன்.'' கெஞ்சலோடு கேட்டாள் வேலம்மா.

அவளது புருஷன்காரன் அவளை கை விட்டு விட்டான். வேறொருத்தியோடு பக்கத்து ஊரில் குடித்தனம் நடத்துகிறான். ஓலைக்கூரை வேயும் வேலை செய்து சம்பாதிக்கிறான். ஆனால் குழந்தைகளுக்காகக் கூட பணம் தருவதுமில்லை. திரும்பிப் பார்ப்பதுமில்லை. அவனைப் பொறுத்தவரை இவர்கள் கை கழுவப்பட்டவர்கள் என்பதே சரி.

ஆனால்.......

ஒரு தாயால் பெற்றபிள்ளைகளை உதறித் தள்ள முடியுமா? அதிலும் வேலம்மா படிக்காத கைநாட்டுக்காரி. அன்னாடங்காய்ச்சி, புருஷன் கொண்டு வந்தால் ஆக்கிப் போடவும், துவைத்துப் போடவும், பாத்திரம் தேய்க்கவும் மட்டுமே தெரிந்த வீட்டுப் பறவை.

ஆனால் இப்போதோ? காடு கரை என்று திரிந்து சுள்ளி பொறுக்கி விறகு வெட்டி கட்டாக சுமந்து இட்லி கடைக்கும், ஓட்டல் கடைக்கும் போட்டு வயிற்றுப்பாட்டை கவனிக்கிறாள்.

``என்ன அண்ணாச்சி யோசிக்கிறிய, அப்ப நான் கௌம்பட்டா?'' என்றாள் வேலம்மா. "இந்தாப்பா முருகா! வேலம்மா கேட்ட சாமான்களை போட்டுக் கொடுத்தனுப்பு!'' என்ற அவரது உத்தரவைத் தொடர்ந்து பலசரக்குச் சாமான்கள் கைமாறின.

கிட்டத்தட்ட இதேநேரத்தில் வந்தான் சேகர். "அண்ணாச்சி, இந்த சாமானெல்லாம் போட்டுத்தாங்க'' என்றபடி துண்டுக் காகிதத்தை நீட்டினான்.

பட்டியலை வாங்கிப் பார்த்த அண்ணாச்சி நிமிர்ந்தார்.

``என்னப்பா 5 கிலோ அரிசி, பருப்பு, ஆயில்னு கிலோ கணக்கிலே லிஸ்ட் போட்டிருக்கே... மொத்தமாப் பார்த்தாக்கா எழுநூறு ரூபாய்க்கு மேலே ஆவும்போலிருக்கே? பணமிருக்கா?'' என்றார் அண்ணாச்சி.

"அடுத்த வாரம் தந்துடறேன் அண்ணாச்சி. இப்ப மளிகை சாமான்களைப் போட்டுத்தாங்க''. என்றான் சேகர்.

"ஏற்கனவே நீ சாமான் வாங்கிய கடன் மூன்னூத்தி இருபது நிக்கி. அதைத்தராம மேக்கொண்டு ஜாமான தர தோதுபடாது'' என்று அவன் கொடுத்த சீட்டைத் திருப்பிக் கொடுத்தார்.

``வீட்லே மளிகை சாமான் ஏதுமில்லே, இப்பக் கொடுங்க. அடுத்த வாரம் பணம் தர்றேன்.''

``இல்லப்பா. கடன் தர ஏலாது. பழைய பாக்கி நிக்கில்ல?'' கறாராக மறுத்தார் அண்ணாச்சி.

இவ்வளவு நேரமும் இறங்கிய குரலில் பேசியவன், கோபம் உசுப்பேற்ற, குரலை உசத்தினான். ``நான் கடனுக்கு ஜாமான் கேட்டாக்க தரமாட்டிய! மப்பும், மந்தாரமுமா பார்க்க கண்ணுக்கு லட்சணமா எள வயசுக்காரியா வேலம்மா போல பொம்பிளை கேட்டாக்கா மறுக்காம கடனுக்கு ஜாமாங்க தருவிய. சேலை கட்டினவளுக்கு ஒரு நாயம், மீசை வெச்சவனுக்கு ஒரு நாயம்'' ஆங்காரம் தொனித்தது அவனது குரலில்.

"நீ சம்பாதிக்கிறதையெல்லாம் குடியிலயும், சீட்டாட்டத்திலேயும் அழிக்கிறே அதனாலே ஒன்னோட பொண்டாட்டி புள்ளைவ, பசி, பட்டினினு கஷ்டப்படறாங்க. வேலம்மாவோ... புருஷன் கைவிட்டாலும், படிப்பறிவில்லாதவ. அவ சுள்ளி பொறுக்கியாச்சும் பெத்த புள்ளைகளைக் காப்பாத்துறா. அவ நாணயத்தை நம்பித்தான் கடன் குடுத்தேன். வியாபாரத்துல மட்டுமில்லே, வாடிக்கைக்காரர்களுக்கும் தேவை நாணயந்தே! நாளைக்கு இதே நேரம் இந்தக் கடைப்பக்கம் வந்து நின்னு வேடிக்கை பாரு. வேலம்மா சுள்ளி பொறுக்கறவதான். ஆனா சொன்ன சொல்லைக் காப்பாத்தறவ! நாளைக்கு காசைக் கொண்டுகிட்டு வருவா. அப்படிப்பட்டவளை தப்பாப் பேசிப்புட்டியே?'' அண்ணாச்சி சொன்னதைக் கேட்டு, அதிலுள்ள நியாயம் சாம்பலை உதிர்த்த தணலாய்ப் புரிபட, மனதிற்குள் உறுதிமொழி எடுத்தான் `குடியும், சீட்டும் இனிமேல் என் வாழ்க்கையில் இல்லே' என்று.

"மன்னிச்சிடுங்க அண்ணாச்சி கோபத்திலே பேசிப்புட்டேன். தரவேண்டிய பணத்தை அடுத்த வாரம் கண்டிப்பா தந்துடறேன்'' என்றபடி திரும்பி நடந்தான். திருந்திய மனத்தோடு சேகர்.

ஞான விடியலுக்கு போதி மரம் தேவையில்லை. அண்ணாச்சியின் பலசரக்கு கடையும் போதி மரம் தான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சிரிக்க சிந்திக்க ஓஷோ கதை

நானும் ஒரு விபச்சாரி

ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் “ நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா ?“

முதல் பெண் “ நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.

நிதிபதி “ 30 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் “ நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை “ எனச் சொன்னாள் ( பொய்தான் ) நீதிபதி “ உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் “ ஐயா ! நான் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி “ நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! “ எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா” ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னார்

மறுமணம்

ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.

அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

மனைவியை இழந்தவர் கேட்டார்.

தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?

பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:

தெரியாதா உங்களுக்கு?இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.

மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.பிறகு கூறினார்.

உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.

தழுவல் : ஓஷோ
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க!

இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

நளன் தமயந்தி கதை :-

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள-தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, "உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்" என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. "இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?" என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.


திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். "சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது" என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்!!! சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்!!!

Thanks : Dinamalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஓஷோவின் சிறு கதைகள்

ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றிவருகிறார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. அதிலிருந்து ஒரு சில சிறு கதைகள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஓஷோ சொன்ன கதைகள்

கதை : 1

சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார். வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார். அவரை பார்த்து வியந்தவர்கள் "எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், " ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா ? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.
கதை : 2

குருட்ஜீஃப் பின் தன் சீடர்க்கள் முழுமையாக சரணடைதல் தேவைப்பட்டது. அவர் எதை சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட பயிற்சியை கூறுவார். அதை செய்து கொண்டிருக்கும் போது 'நிறுத்து !' என்பார். உடனே நிறுத்திவிட வேண்டும்.

ஒரு நாள் காலையில் கால்வாயில் இறங்கி நடக்கிற போது அவர் நிறுத்து என்று சொல்லிவிட்டு, தன் டென்ட்டிற்குப் போய்விட்டார். நான்கு சீடர்கள் கால்வாயில் நின்றிருந்தனர். யாரோ தண்ணீரைத் திறந்து விட, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது.

குருட்ஜூஃப் உள்ளே போய்விட்டார். அவருக்கு தெரியாது. ஆனாலும் சீடர்கள் காத்திருந்தனர்.

கழுத்துவரை தண்ணீர் வந்து விட்டது. ஒருவன் கரைக்கு ஓடி விட்டன். "இது ரொம்பவும் அதிகம். குருவுக்கு எப்படி தெரியும் ? " என்றான்.

மற்ற இரண்டு சீடர்களும் மூக்குவரை தண்ணீர் வந்ததும் வெளியேறி விட்டனர். ஆனால், ஒரு சீடன் மட்டும் அப்படியே நின்றான். தண்ணீர் அவன் தலையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூழ்கிக் கொண்டிருந்தான்.

தன் அறையை விட்டு பாய்ந்து வந்த குருட்ஜீஃப் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார்.

மரணத்தில் இருந்து வந்த சீடர் கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக இருந்தான். அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பழைய மனிதன் இறந்து அவன் புதிதாகப் பிறப்பெடுத்திருந்தான்.

அந்த சீடன் குருவை முழுமையாக ஏற்றுக் கொண்டான். தன் மனதையும், அதன் கணக்குகளையும் அவன் நிராகரித்தான். தன் வாழ்வின் மீதான பற்றை நிராகரித்து, உயிராசையைத் துறந்தான். அதனால் அதான் அவனை எதுவும் நகர்த்தி விடவில்லை என்பதை ஓஷோ இந்த கதையின் மூலம் சொல்லுகிறார்.

கதை : 3

ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், " நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம். ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.

பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.

அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், " வாத்து வெளியில் தான் இருக்கிறது !"

நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.
தழுவல் : ஓஷோ
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ரஜினி சொன்ன சில குட்டி கதைகள்

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...


பக்காவா பிளான் பண்ணனும்... இல்லைனா ..?!

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பபடுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்ல 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா "நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."

பயந்தா ஜெயிக்கிறது எப்படி…!

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம்.

மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது.

அதே குரல், ஆனா தவளை கண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது. இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம்பித்தது.

அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது.

நாமளும் அப்படித்தான்… பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும். பயந்தா ஜெயிக்கிறது எப்படி?,’ என்றார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் - ஒரு பக்கக் கதை

சிரிக்க... சிந்திக்க... ஒரு சிறு முல்லா கதை இதோ...


என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...?

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு(கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

1) உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )

2) சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )

3) ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )

4) அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்...
முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும், சாதாரண முறையில் முதலில் பரீட்சிக்க விரும்பி அதற்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார்.

அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் "ஒரு மணி நேரத்திற்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தது. முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது.

முழு திருப்தியுடன் அதற்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையை விட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவு தான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம், கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார். முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் 42-வது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது.

முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை. தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும். அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்.

அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது. முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! "நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்" என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

முல்லா 'னே' என விழித்தார். பின்னர் அந்த நிகழ்வை நினைத்து முல்லா சிரிக்க...

முற்றும்.

நன்றி: ஓஷோ


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



காதலிக்க நேரமுண்டு - ஒரு பக்கக் கதை

ஒரு நிமிஷம் அபியென மெல்லிய தாய் ஒலித்த குரல் கேட்டு திரும்பினாள் அபி.

அவளின் முகம் பார்த்த நிலையில் அடுத்த வார்த்தை வராதவனாய் அப்படியே ஸ்தம்பித்து மௌனமாய் சில நொடிகள் நின்றான் சத்யா!


ஏன் அபி, என்னை நீ என்னைக்கும் புரிஞ்சுக்க மாட்டியா, நா . உன்னை உண்மையிலே நா மனசார விரும்புறேன். என் மனசு எல்லாம் நீ தானியிருக்கிறாய்.

நீ மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நா கண்டிப்பா சூசைட் பண்ணிக்குவேன் அதில எந்தவித மாற்றமும் இல்லையென அவன் பேசியதில் கண்களில் ஒருவித வெறி தெரிந்தது.

ஒரு நிமிடம் அபி ஆடி போய் விட்டாள். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காயென்னா? இப்படி கண்டபடி பேசற.

நீ நல்ல பையன் தான். அழகாகவும் அடக்கமாகவும் தானிருக்கிற. ஆனா, நீ சின்ன கிராமத்துல பொறந்தாலும் பல மைல் தூரமுள்ள பக்கத்து ஊருக்கு கஷ்டப்பட்டு பல நாட்கள் நடந்தே ஸ்கூலுக்குப் போயி நல்லபடியா 12 வது வகுப்பு வரை விடாத முயற்சியோடு படிச்சு முதல் மாணவனா எக்ஸாம்ல வெற்றி பெற்று வந்திருக்கிற.

உன்னுடைய கஷ்டத்தோட பலனா நல்ல மார்க்குபெற்று காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருச்சு என்ன, என்னை அப்படி ஆச்சர்யமா பாக்குற. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு யோசிக்கிற அப்படித்தானே அவளின் கேள்விக்கு அவன் தலையசைத்தான் ஆமாம்யென்பது போல்.

பற்கள் பளிச்சிட அவள் சிரித்தாள். இதெல்லாம் பர்ஸ்ட் டே நாம காலேஜ×க்கு வந்தன்னைக்கு நாம நம்மளை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ நீ சொன்னது. இதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு யோசிக்கிறியா, இருக்கு? உன்னுடைய குடும்பம் ஏழைக் குடும்பமாயிருந்தாலும் உன்னை எப்படியாவது ஒரு பட்டதாரியா ஆக்கிடணும்னு உங்கப்பாவும் அம்மாவும் வயக்காட்ல வெயில் மழைன்னு பாக்காம உடம்பை கூட சரியா கவனிச்சுக்காம உழைச்சு ஓடாய் ஒவ்வொரு நாளும் தேஞ்சுக்கிட்டு இருக்காங்க.

ஒண்ணுக்கு பத்தா வட்டிக்கு கடன் வாங்கியாவது உனக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கைப்பாதையை அமைக்க தங்களோட சுய கவுரவத்தை யும், உயிருக்கும் மேலான குடும்ப மானத்தையும் அடமானம் வைக்கிறாங்க.

அண்ணன் படிச்சு வந்து நல்ல வேலைக்கு போயி கைநிறைய சம்பாரிச்சு தனக்காக வரன் தேடி தன்னை வாழ வைப்பான்னு கல்யாணக் கனவு கண்டுக்கொண்டிருப்பாள் உன் தங்கை. இப்படிப்பட்ட ஆசைகளை அழிக்கப் போகும். இந்த காதலை நான் ஏற்கவா சொல்லு சத்யா...

நாம இப்பதான் காலேஜ் வாசலை அடியெடுத்து வச்சிருக்கிறோம். அதுக்குள்ள நமக்கு இந்த காதல் தேவையா? காதல் வேண்டாம்ன்னு சொல்லலை ஆனா அது இப்ப வேணாம். உன்னை பெத்தவங்களுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் இந்த காதலால இழந்து விடாதே! திரும்ப பெற முடியாது.

கடமையை நிறைவேற்ற நல்லா படி சத்யா. நல்ல மார்க். வாங்கி ரேங்க் ஹோல்டரா வா. அப்புறம் நல்ல வேலையை தேடிக்கிட்டு எல்லா கடமையையும் நிறைவேத்திட்டு வா! அப்ப நம்ம காதல் பற்றி பேசுவோம் என இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த எண்ணத்தை வெளிப்படுத்திய நிறைவோடு தோளிலிருந்து இறங்க காத்திருந்த துப்பட்டாவை புத்தகங்களை பிடித்திருந்த இரு கரங்களின் ஒன்றில் அதனை தோளுக்கே உயர்த்தி அவனுடைய பதிலுக்கு காத்திராமல் நடை போட்டாள் அவள்.

சத்யா கிளாஸை விட்டு வெளியேறிய புரொபசரை நோக்கி நடையில் வேகத்தை கூட்டினான். நடையில் மட்டுமல்ல மனதிலும். தவற விட்ட முன் பீரியடை பற்றிய குறிப்பு வாங்க!

நன்றி : ஆர்.விஜயலட்சுமி


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



உதவி - ஒரு பக்கக் கதை

கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது.அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர்.

செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.


கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப் பிடுங்கியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, "நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமானரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்''என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, "என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும் தான் கொடுப்பாரே" என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, "நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று" என நாயைப் பார்த்து கதறியது.

படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல்,"ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர் தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே" என்றது நாய்.



கதையின் நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



காஞ்சனா - (ஒரு பக்கக் கதை)

காஞ்சனாவிற்கு அழுது, அழுது அவளது சிவந்த முகம் வீங்கியிருந்தது. அத்தை ஏன்தான் இப்படி ஒரேயடியாக மாறிப்போனார்களோ? நினைக்க, நினைக்க அவளுக்கு இதயத்துடிப்பு அதிகமானது. இதில் இன்னொரு கொடுமை, கணவன் ரஞ்சித்தும் அவளை கண்டுகொள்ளவே இல்லை. அதுதான் அவளுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

காஞ்சனாவிற்கு திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது. ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறாள். ரஞ்சித்தோடு பிறந்தது ஒரு அக்கா ரஞ்சனி மட்டும்தான். மாமனார் இல்லை. நல்ல வசதியான குடும்பம் என்பதால் ரஞ்சனியை மும்பையில் தொழிலதிபர் யுகேந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரஞ்சித்தும் நன்கு படித்து சாப்டர்வேர் என்ஜினியராக திருச்சியில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறான்.

தம்பி திருமணத்தின்போது ரஞ்சனி வந்து போனாள். தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதால் சீர் செய்யவே இப்போது தனியாக வந்திருக்கிறாள். அவள் வருவதற்கு முன்பு வரை அத்தை பர்வதம் காஞ்சனாவை தாங்கு, தாங்கு என்றுதான் தாங்கினாள். அதுவும் மருமகள் மாதமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளை எந்த வேலையும் செய்ய விட மாட்டாள். எல்லா வேலையையும் தானே இழுத்துப் போட்டு செய்வாள்.

திருமணமாகி இந்த எட்டு மாதத்தில் காஞ்சனா தன் தாய் வீட்டிற்கு ஒரு முறைதான் சென்று வந்தாள். காஞ்சனாவின் தாய் தான் அடிக்கடி வந்து மகளை பார்த்து விட்டு போவாள். அத்தை பர்வதம் கூட "ஏன் காஞ்சனா வேணும்னா அம்மாகூடப் போய் ஒரு பத்து நாள் தங்கிவிட்டு வாயேன்" என்பாள். "வேண்டாம் அத்தை. ஒரு வழியாக பிரசவத்திற்கே போய்க்கிறேன்" என்பாள்.

அப்படி இருந்த மாமியார், மகள் ரஞ்சினி வந்ததிலிருந்து காஞ்சனா மீது எரிந்து, எரிந்து விழுகிறாள். அவள் எது செய்தாலும் அதில் ஒரு குற்றம் கண்டுபிடிக்கிறாள். இதையெல்லாம் பார்த்த ரஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் காலையில் ஆபீஸ் கிளம்பினான்.

இன்று காலையில் கூட அவரசமாக காபியை ஆற்றி "அத்தை.. காபி" என்றாள் காஞ்சனா. அவள் கொடுக்கும் போது டம்ளர் தவறி கீழே சிந்தியது. உடனே பர்வதம் "ஏன் காஞ்சனா பொறுமையாக செய்யக்கூடாதா? குழந்தை மேலே ஊற்றியிருந்தால் என்னவாயிருக்கும்?" என்று சத்தம் போட்டாள். ரஞ்சனிதான் "விடும்மா. அவ என்ன வேனும்னா சிந்தினா? கை தவறிதானே கீழே கொட்டிச்சி" என்றாள்.


மதியமும் அப்படித்தான். சமையில்கட்டுப் பக்கமே அனுப்பாத அவளை காஞ்சனா இன்று மதிய சமையலை நீ செய் என்றாள். சிறிது பயத்தோடுதான் மட்டன் குழம்பும், வறுவலும் தயார் செய்தாள் காஞ்சனா, குழம்பில் சிறிது காரம் அதிகமானதால் ரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை. "ஏன் காஞ்சனா, காரத்தை கொஞ்சம் கம்மியாய் போடலாமில்ல. இப்பப்பார் ரஞ்சனி சரியா சாப்பிடவே இல்லை." என்றாள் மாமியார்.

"சும்மா இரும்மா, மட்டனுக்கு காரம் கொஞ்சம் சுள்ளுன்னு இருந்தால்தான் நல்லாயிருக்கும். எனக்குத்தான் அல்சர். சும்மா அவளை தொணதொணன்னு ஏதாவது சொல்லிகிட்டே இருக்காதே! அவளும் சின்னப்பொண்ணுதானே! போக, போக எல்லாம் சரியாயிடும்" ரஞ்சனி சொல்ல காஞ்சனாவிற்கு அழுகை பீறிட்டது. இதெல்லாம் சின்ன சின்ன விசயம்தான் ஆனால் இதுநாள் வரை பேசாத அத்தை இப்போது இப்படி எடுத்தெறிந்து பேசுவதுதான் புதிதாய் இருக்கிறது.

இரவு ஏழு மணி.

ரஞ்சித் அப்போதுதான் ஆபீஸிலிருந்து வந்திருந்தான். காஞ்சனாவின் அழுது வீங்கிய முகத்தை அவனும் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக அக்கா குழந்தை தேஜாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ "காஞ்சனா காபி எடுத்துட்டு மாடிக்கு வா" என்றவன், சில நாளிதழோடு மாடிக்கு சென்றான். காஞ்சனா காபியோடு கிளம்ப தயார் ஆனாள். அதற்குள் அத்தை பர்வதம் "காபியை கொடு... நான் எடுத்துட்டுப் போறேன்..." என்று பிடுங்காத குறையாக வாங்கிச் சென்றாள். காஞ்சனாவும் பின்னாடியே சென்று கதவருகில் மறைந்து நின்று கொண்டாள்.

அம்மா ஏதோ சொல்ல வருகிறாள் என புரிந்து கொண்ட ரஞ்சித், "என்னம்மா?" என்று கேட்க...

"ரஞ்சித்! வந்த இரண்டு நாள்ல காஞ்சனா மீது நான் எரிந்து எரிந்து விழுகிறேன். நீ எதையும் சாதாரணமாக எடுத்துக்குவ. ஆனா ரஞ்சனி அப்படியில்ல. அவ ஏதாவது சின்ன விசயம்னாலும் உடனே கோபப்படுவா! அதே மாதிரி காஞ்சனா செய்யும் சின்ன தவறுகள் கூட ரஞ்சனியை பாதிக்கும். அதனால அவங்களுக்குள் ஒரு விரிசல் விழுந்திடக்கூடாதில்லையா..? இப்போ நான் இப்படி பேசினால் ரஞ்சனிக்கு காஞ்சனா மேல் உள்ள பாசம் அதிகரிக்கும். அவங்களுக்குள் ஒரு பாசக்கோடு விழுந்திடும். பிறகு அது எப்போதும் அழியாது.

இன்னும் இரண்டு நாள்ல ரஞ்சனி ஊருக்குப் போயிடுவா. பிறகு காஞ்சனாவிடம் சொல்லி சமாதானப்படுத்தலாம் என்றிருந்தேன். ஆனா அவ அழுறதை பார்க்க என்னால் சகிக்கலைடா. அதான் உன்கிட்ட சொல்லி அவளுக்கு புரிய வைக்கலாம்னு..."

மாமியார் சொல்லி முடிப்பதற்குள், "அத்தை என்னை மன்னிச்சிடுங்க. உங்களோட நல்ல மனசை புரிஞ்சிக்காம நான்தான் உங்களை தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்" மாமியார் பர்வதம் கைகளை பிடித்துக் கொண்டு கலங்கினாள் காஞ்சனா.

மாமியார், மருமகள் பாசக்கோட்டினை வியப்போடு பார்த்து நின்றான் ரஞ்சித்.


- ராஜேஸ்வரி பால்ராஜ்



அப்பா..! (ஒரு பக்கக் கதை)

'முதியோர் இல்லம்' போர்டு கண்ணில் பட்டதும் காரின் வேகம் குறைத்து நிறுத்தினான் கார்த்திக்.

கதவு திறந்து கைகொடுத்து அப்பா கீழிறங்க உதவினான். அதற்குள் முன்பக்கம் இருந்த மகன் இறங்கியிருந்தான். கொஞ்சம் தயக்கமாகவே தன் மகனுடனும், வயதான அப்பாவுடனும் உள்ளே நுழைந்தான்.

அப்பா சடகோபன் முகத்தை தற்செயலாக பார்ப்பதுபோல் பார்த்தான் கார்த்திக். முகத்தில் இறுக்கம் மண்டிக்கிடந்தது. சோகமா, கலக்கமா என்று கண்டுணர முடியாத கேள்விகள் முகத்தில் வரைபடங்களாகத் தெரிந்தன.


"வாங்கோ..." விடுதி நிர்வாகி வரவேற்றார். "அப்பாவா..." கேட்டுக்கொண்டார்.

நேற்று வந்து நிர்வாகியை சந்தித்து அட்வான்ஸ் பணம் கொடுத்துப் போயிருந்தான். அப்பாவை சேர்ப்பதில் தொடங்கி, மாதாந்திர கட்டணம் வரை தெரிந்து வந்திருந்தான்.

அப்பா பாவம். வாயில்லாப்பூச்சி. அம்மா இருந்தவரையில் அளந்து பேசுவார். அம்மா போனபின் நிஜமான வாயில்லாப்பூச்சியாகவே மாறியிருந்தார். ஆனாலும் அப்பாவை பார்த்தால் மைதிலிக்கு ஆகிறதில்லை.

"எப்பப்பாருங்க உங்கப்பா மூக்கை சீந்திண்டு... சில சமயம் சுவரில்கூட மூக்கு ஒழுகலை தடவி வைக்கிறார்..." புகார் பட்டியலை அவ்வப்போது அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அப்பாவுக்கு சோதனையாய் வந்து சேர்ந்திருந்த வறட்டு இருமல் மைதிலியின் தூக்கத்தை தற்காலிகத் தடை செய்தது. அதுகூட, அவள் புகாருக்கு காரணமாக இருக்கலாம்.

"இதோ பாருங்க. இப்ப நல்ல ஹோம்லாம் வந்தாச்சு. நாமா வீட்ல வச்சிப் பார்த்தாலும் அப்படிக் கவனிக்க முடியாதுன்னு சொல்றாங்க. இங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில தான் புதுசா ஆரம்பிச்ச அந்த ஹோம் இருக்கு.. என் பிரண்ட் கோமதியோட மாமனார் இப்ப அங்கேதான் சவுக்கியமா இருக்கார். மாசம் பீஸ் மூவாயிரம் வாங்கறாங்களாம். எதுக்கும் ஒரு நடை எட்டிப்பார்த்துட்டு வாங்களேன்." என்று மைதிலி ஒருநாள் தடாலடியாக சொன்னபோது அவனால் அவளை முறைக்கத்தான் முடிந்தது.

அடுத்தடுத்த இரவுகளில் "நான் சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணிப்பாருங்க" என்று சொல்லத் தொடங்கி அவனை `மூடுஅவுட்' பண்ணினாள்.

அவன் பக்குவமாய் சொல்லிப்பார்த்தான். "நம் காதலைக்கூட கண்ணியமாய் ஏற்றுக் கொண்ட அப்பாவை எப்படி விடுதிக்கு...? உன் எண்ணமே தப்பு..." பேசிப்பார்த்தான். எடுபடவில்லை.

அடுத்து வந்த இரவுகளில் புரண்டு படுத்தாள். 'நைட்லாம்ப்பின்' மெல்லிய ஒளியில் முதுகு காட்டி தூங்கத் தொடங்கி, அவனது நிம்மதியான தூக்கத்துக்கு 'வேட்டு' வைத்தாள்.

அப்போதும் அப்பாவை தாங்கினான். படிக்கிற காலத்தில் அவனுக்கு பிடித்ததை படிக்கச்சொன்ன அப்பா! அவன் விருப்பத்துக்கு மாறாக எதையுமே செய்யாத அப்பா! மைதிலியை காதலிப்பதாக சொன்னபோது கூட, மகனின் பிரியத்துக்கு மறுப்பு சொல்லாமல் அம்மாவின் முணுமுணுப்பையும் தாண்டி(என்ன குலமோ..என்ன கோத்திரமோ...?) திருமணம் செய்து வைத்த அப்பா.

மைதிலியும் மாமனாரிடம் பிரியமாகவே நடந்து கொண்டாள், மாமியார் இருக்கும்வரை.

அப்புறமாய் அவரை கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்தபோது முதுமை வாசனை அவளை சங்கடப்படுத்தியது.

முதுமை மாமனாருக்குள் பலவீனமாய் இருமல் கொண்டு வந்தபோது... தரையில் கிடந்த `கோழை'க்கு முதல் நாள் சின்னதாய் முகம்

சுளித்தாள்.நாளடைவில் அவரை பார்க்கும்போதெல்லாம் முகச்சுளிப்பு நிரந்தரமாயிற்று. ஒரு இரவின் நெருக்கத்தில் அதை கணவனின் காதிலும் போட்டுப்பார்த்தாள்.

ஆனால் இது விஷயத்தில் மனைவியை சமாளித்து விடலாம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்ட கார்த்திக் ஏமாந்து போனான்.

ஒரு கட்டத்தில் `மனைவியா, அப்பாவா' என்று முடிவெடுக்கிற அளவுக்கு நிலைமை விபரீதமானது. பகலிலும் பாராமுகம் காட்டினாள். நினைத்தது நடக்காத ஆத்திரம் டைனிங் டேபிளில் பாத்திரங்களின் `தட்...தட்...' ஓசையிலும் எதிரொலித்தது. இனியும் அப்பா விஷயமாய் மனைவியிடம் மல்லுக்கட்டினால் அதனால் உறவுச்சிக்கல் வரை போய் மகனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடக்கூடும்.

அப்பாவுக்கு இவன் ஒரே வாரிசு. இவனுக்கு மகன் மகேஷ் ஒரே வாரிசு. 6-வது படிக்கும் மகேஷ் முழுக்க அம்மா பிள்ளை. அதே நேரம் தாத்தா செல்லம்.

ஆனாலும் நோய்த் தொற்றை காரணம் காட்டி மகேஷை தாத்தாவிடம் நெருங்காமல் பார்த்துக்கொண்டாள் மைதிலி. பேரனின் அருகாமை கூட தவிர்க்கப் பட்ட அப்பா, அனாதை போல் பரிதாபப் பார்வையுடன் வீட்டில் நடமாடியதை ஜீரணிக்கத் திணறினான் கார்த்திக்.

ஜன்னல் கதவு திறந்திருந்தும் மூச்சு முட்டிய ஒரு மாலைப் பொழுதில் அப்பாவிடம் மனம் திறந்தான். "மாச வாடகை மூவாயிரம்ப்பா. நல்ல வசதி. வாரம் ஒரு தடவை பார்க்க வந்துடறேன்" என்றான். சொல்லும்போதே குரல் தழுதழுப்பில் உள்வாங்கியது.

அப்பா மவுனமாக பார்த்தார். பேசவில்லை. பார்வையில் இருந்த அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டு, அப்பாவின் சொற்ப உடமைகளையும் எடுத்துக்கொண்டு... இதோ முதியோர் இல்லம்.

"பார்ம் பில்லப் பண்ணிட்டேன் சார். படிச்சுப் பார்த்துட்டு ஒரு ஸைன் போட்டுடுங்க."

விடுதி நிர்வாகி சொல்ல, `எஸ்.கார்த்திக்' போட்டான்.

"அப்பா..." - மகன் மகேஷ் அழைத்தான்.

"தாத்தாவை ஹோம்ல விடத்தானே வந்திருக்கிறோம்."

"ஆமாப்பா..."

"தாத்தாவை விட்டுட்ட பிறகு அவர் இன்ஷியல் மட்டும் உனக்கு எதுக்குப்பா? இன்ஷியல் இல்லாம ஸைன் போடுப்பா..."

கடவுளே குழந்தையாக வந்து பொட்டில் அறைந்தது போலிருந்தது. `என் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருந்த அப்பாவை தூக்கிப் போட்டுவிட்டு அவர் இனிஷியலை மட்டும் பயன்படுத்திக் கொள்ள எனக்கென்ன தகுதி இருக்கிறது?' அதிர்ச்சி விலகாமல் அப்பாவை நோக்கினான்.

"வீட்டுக்குப் போலாம்பா..." என்றான்.

அப்பா இப்போது அமைதியாய் இருக்கவில்லை. பேசினார். "கார்த்திக்... உங்கம்மா எப்ப போனாளோ அப்போது முதலே தனிமையை ரொம்ப `பீல்' பண்றேன். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியே கணவன்-மனைவி நேசிப்பில் தான் இருக்கு. அதை நான் வாழ்ந்து பார்த்தவன். ஆனால் அதே சந்தோஷம் என் மூலம் உனக்கு தடைபடறதை உன்அப்பாவா என்னால் நிச்சயம் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. அதனால இருக்கிற மிச்சம்

மீதி நாட்களை இங்கேயே கழிச்சிடறேன். தயவுசெய்து தடுக்காதே."

அப்பா அந்த இயலாமையிலும் மகனைப் பார்த்து கைகூப்ப முயல...

அதற்குள் முந்திக்கொண்டு அந்தக் கையைப் பிடித்துக்கொண்ட கார்த்திக், குழந்தை மாதிரி அழத் தொடங்கினான்.

விடுதி நிர்வாகி அவரையும் மீறி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.

- கே.பாலசுந்தரம்



தாய்மைக்கு தண்டனை - ஒரு பக்கக் கதை

உலகத்தின் எல்லா சந்தோஷத்தையும் தானே அனுபவிப்பதை போல உணர்ந்தாள் ஆனந்தி.

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் பூரித்துப் போனாள்.

எத்தனை நாள் தவம்!
எத்தனை நாள் கண்ணீர்!
எத்தனை நாள் வேதனை!

இன்று முடிவுக்கு வந்தது. ஆனந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.


திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் ஆனந்திக்கும், ரவிக்கும் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்ற குறையை விட மலடி என்ற பட்டம் ஆனந்தியை வாட்டி வதைத்தது.

எத்தனை கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடிஎடுத்து வைத்தாளோ, அத்தனை கனவும் கண்ணீரில் கரைந்தன. கணவன் ரவி அன்பானவன் தான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் தான். ஆனால், குழந்தை இல்லாத குறையை எத்தனை நாள்தான் அவனும் ஜீரணிப்பது! ரவியும் சில நேரங்களில் ஆனந்தியிடம் முகம் சுளிக்க ஆரம்பித்தான். பார்க்காத டாக்டர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை. எல்லாமே வீண்!

ரவியின் அம்மா சாரதா புலம்பித் தள்ளுவாள்: "நேத்து வந்தவளெல்லாம் நெல்லிக்காயும், மாங்காயும் சாப்பிட்டு புள்ளைய பெத்து போடறா!... ம்... இந்த வீட்டுக்கு அந்த கொடுப்பனையே இல்லை..." என்று பெருமூச்சு விடுவாள்.

ஆயுசு முழுக்க ஆனந்தமாய் வாழ வேண்டுமென்றுதான் ஆனந்தி என்று பெயர் வைத் தார்கள். ஆனால், கழுத்தில் தாலியை சுமக்க ஆரம்பித்த நாள் முதல், மனம் வேதனையை சுமக்க ஆரம்பித்தது.

பெண்ணாய் பிறந்த யாரும் தாய்மையை வெறுப்பதில்லை. தாய்மை யாருக்கு வாய்க்குமோ? யாருக்கு வாய்க்காதோ? கடவுளுக்கே வெளிச்சம்! ஆனால் யாரும் கடவுளை குற்றம் சொல்வதில்லையே! ஆண்டுகள் கடந்தாலும் காலங்கள் மாறினாலும், என்ன தான் கம்ப்ïட்டர் யுகத்திலேயே வாழ்ந்தாலும் குழந்தை பேறு இல்லை என்றால் இந்த சமுதாயம் பெண்களைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கும். இது பெண் வர்க்கத்துக்கே உண்டான சாபக்கேடு.

எந்த பெண்ணும் அவ்வளவு சீக்கரம் முடி வெடுக்க முடியாத விஷயம். எந்த பெண்ணும் தன் கணவனைப் பார்த்து கேட்கக் கூடாத வார்த்தை. ஆனந்தி ஒருமுறை தன் கணவனை கேட்டே விட்டாள். "நீங்க வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?"

"பைத்தியமா உனக்கு... குழந்தை வேணுங் கிறது நம்முடைய ஆசை தான். அதுக்காக என்னுடைய மனிதாபிமானத்தை பலி கொடுக்க முடியாது" என்றான்.

பாலைவனத்தில் முளைத்தெழுந்த முல்லை கொடிக்கு அவ்வப்போது பாசமாய் பொழியும் வானமழைபோல், கணவனின் பாச வார்த் தைகளை உணர்ந்தாள். திருமணமாகி ஏழு வருடங்களாகியும் கணவன் நல்லவனா, கெட்டவனா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆனந்திக்கு.

நல்லவன் என்று எப்போதெல்லாம் நினைக்கிறாளோ, அப்போதெல்லாம் அதற்கு எதிர்மறையாகத் தான் இருப்பான். அவன் கெட்டவன் என்று ஒதுங்கி நிற்கும் போது, அவனே நெருங்கி வந்து அவளை கெஞ்சலோடு கொஞ்சுவான்.

ஆனந்திக்கு வாழ்க்கையும் கேள்விக்குறி! கணவனும் கேள்விக்குறி!

நடந்ததெல்லாம் போகட்டும். இத்தனை நாள் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்தது!

செவிலியர் கொடுத்த தன் குழந்தையை அன்போடு அள்ளி மார்போடு அணைத்தாள். கண்களில் நீர் சுரந்தது. மார்பில் பால் சுரந்தது. கண்ணீர் எப்போதுமே உப்பு கரிக்குமாம். ஆனால், ஆனந்திக்கு தேனாய் இனித்தது.

தன் மடியில் தவழும் இந்த மழலைக்காக ஏங்கிய நாட்கள் எத்தனை!

"என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" - எங்கோ தூரத்தில் ஒலித்த பாடல் வரிகள் எந்த அர்த்தத்துக்காக எழுதப்பட்டதோ தெரியவில்லை. ஆனால், ஆனந்திக்கு புரிந்தது ஒரே அர்த்தம்தான்.


உறவினர்கள் எல்லோரும் குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். உறவினர்களையும், அக்கம் பக்க வீட்டுக்காரர்களையும் பார்த்ததும் ஆனந்திக்கு அழுகை தாங்க வில்லை. குரல் உடைந்து அழுதாள்.

"ஏண்டி அழறே! அசடு! எல்லாம் முடிஞ்சி போச்சிடி! உன் கவலைகள் எல்லாம் முடிஞ்சி போச்சு! இன்னிலேர்ந்து நீ ராசாத்தி மாதிரி இருக்கணும். சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் பிள்ளையை பெத்தவடி நீ! எதுக்கும் கவலைப்படாதே!" என்று ஆனந்தியின் மாமியார் பூரிப்பில் ஆறுதல் சொன்னாள்.

"அவர் வரலியா" என்றாள் ஆனந்தி.

"போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டோம். முதலாளிகிட்ட கணக்கு ஏதோ கொடுத் துட்டு வரணுமாம். வர்றேன்னு சொன்னான்" என்றார்கள்.

மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிய, கணவன் வருகைக்காக காத்திருந்தாள் ஆனந்தி! உறவினர்களின் பார்வை நேரம் முடியும் தருணத்தில் வந்தான் ரவி. அவனது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்ததை ஆனந்தி கவனித்தாள்.

"இது என்ன புதுப்பழக்கம்? முதல் முதல் நம்ம குழந்தையை பார்க்க இந்த கோலத்திலேயா வருவது ?" என்றாள்.

அவன் எதுவும் பேசவில்லை. ஆனந்தி படுத்திருந்த கட்டிலருகே போடப்பட்டிருந்த தொட் டிலில் படுத்திருந்த குழந்தையை குனிந்து பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

"நல்லாருக்கானா நம்ம பையன்... ஏன் உங்க முகத்துல சந்தோஷத்தையே காணோம்...!" என்றாள்.

"நீயும் கறுப்பு, நானும் கறுப்பு. குழந்தை மட்டும் வெள்ளையா இருக்கு... நம்ம வீட்ல உள்ள வங்க யாருடைய முகச்சாயலும் குழந்தைக்கு இல்ல... இதை நான் மட்டும் சொல்லல... வெளியில் பேசிக்கிறாங்க... " அவன் குரலில் குடிகாரர்களுக்கே உரிய குழறல் இருந்தது. ஆனால், உளறல் இல்லை.

இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் அத்தனையையும் மறுபடியும் ஒரே நொடியில் அனுபவித்த மாதிரி இருந்தது ஆனந்திக்கு!

நேற்று வரை அவள் சுமந்த துன்பம் வேறு! இனி அவள் சுமக்கப் போகிற துன்பம் வேறு!


- மின்னூர் மகாதேவன்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!




தாய் மனம் - ஒரு பக்கக் கதை

அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு.

`சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்'

உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி.

கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து மணமுடித்து விட்டிருந்தாள் அம்மா.

ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா என்பதால், இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள். மனைவிகளை அழைத்து வந்து ஒரு நாள் தங்கியிருந்து விருந்து சாப்பிட்டு விட்டு, மருமகன்கள் இருவரும் தங்களது வேலைகளை கவனிக்க கிளம்பி விட்டார்கள். மேலும் இரண்டு நாள் தங்கிவிட்டு வருவதாக இவர்கள் கூறிவிட்டனர். குழந்தைகளும் கூடவே இருந்து விட்டார்கள்.

வசந்தி குடும்பம் நடுத்தரமானது. அவள் கணவர் தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை ஓட்டி வரும் நிலை. ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரண்டு வாரிசுகள்.

புவனாவின் குடும்பம் வசதிக்கு பஞ்சமில்லை. இவள் கணவருக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பளம். ஒரு பெண் குழந்தை மட்டும்.

திருவிழாவிற்கென முதலில் வருகை தந்தவள் வசந்தி தான். வந்ததுமே, `இன்னும் புவனா வரலையாம்மா?' எனக்கேட்டு அவள் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவள் தான்..

புவனா குடும்பத்தோடு வந்ததும் நலம் விசாரிப்பதில் தொடங்கி, பழைய நினைவுகளைப்பேசி என பொழுது நன்றாகதான் கழிந்தது. ஆனால், அம்மாவின் பாசத்தில் ஓரவஞ்சனை இருப்பதாக நேற்றிலிருந்து தான் உணர்ந்தாள் வசந்தி.

`புவனா.. நல்லா சாப்பிடும்மா... ரொம்பவும் இளைச்சுப்போயிட்டே?'

`இல்லம்மா.. நார்மலா தான் இருக்கேன்.. ரொம்பநாள் பார்க்காமல் இருந்ததால் உனக்கு அப்படி தெரியுது'

தன்னைக் கேட்கவில்லையே என மனதுக்குள் சஞ்சலமானாள் வசந்தி. அவளைப்புரிந்து கொண்டது போல், `என்னம்மா வசந்தி.. நீயும் கூட இளைச்ச மாதிரி தான் தெரியறே..' எனக்கேட்டாள் அம்மா.

`எனக்கென்ன.. நல்லா தான் இருக்கேன்' என்றாள் வெடுக்கென. `அவள் வசதியாக இருக்கிறாள் என்பதற்காக முதலில் அவளைக் கேட்டு விட்டு, ஒப்புக்கு சப்பாணியாக என்னையும் கேட்கிறாள்' என நினைத்துக் கொண்டாள்..

`இந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க, கொஞ்சம் ஒத்தாசை பண்ணு வசந்தி.

`வேலை செய்ய மட்டும் நான்.. அவளும் வந்து பாத்திரம் கழுவினால் தேய்ஞ்சா போயிடுவாள்' அம்மாவிடம் சொல்ல வாய் எழவில்லை மனப்புழுக்கம் அதிகரித்தது.

இதுபோல சின்னச்சின்ன செய்கைகள் வசந்தி மனதில் புகைச்சலை அதிகப்படுத்தியது.

`வசதி இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்ளும் அம்மாவை புரிந்து கொண்டாயிற்று. இனி இங்கிருந்து என்ன செய்யப்போகிறோம்... கேட்டால், அவள் எப்போதாவது வருபவள்.. நீ அடிக்கடி வந்து போறவள்னு நியாயம் பேசுவாள்... ஏன் கேட்டு வருத்தப்பட செய்வானேன்...அவளையே கொஞ்சட்டும். நாம் கிளம்புவோம்' என்றெண்ணியவள் தாயிடம் கூறினாள்.

`அம்மா.. இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்பறேன்'

`என்ன அவசரம் வசந்தி.. மாப்பிள்ளையே இன்னும் நாலைஞ்சு நாள் இருந்துட்டு வாங்கன்னு சொல்லிட்டாரே.. அதுக்குள்ள கிளம்பாட்டி என்ன?'

`அவர் அப்படித்தாம்மா சொல்வாரு.. அங்கே தனியா இருந்து ரொம்பவும் சிரமப்படுவார்.. வீட்ல நான் இல்லைன்னா சரியா சாப்பிடவே மாட்டார்.. போதாதற்கு, தைக்கிறதுக்குனு வாங்கி வச்ச துணிகள் நிறைய சேர்ந்து கிடக்கு.. வர்றேம்மா... புவனா ஊருக்கு கிளம்பும் போது அப்படியே வீட்டுக்கு வந்துட்டு போ..'

`இருக்கா.. அம்மா நாளைக்கு கறி எடுக்கிறாங்களாம்.. சாப்பிட்டு ஒண்ணாவே கிளம்பலாம்..'

`இல்ல புவனா.. நீ சாப்பிடு.. நீ சாப்பிட்டா, நான் சாப்பிட்ட மாதிரி' என சிரித்துக்கொண்டே தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடைபெற்றாள் வசந்தி.

வெளித்தோற்றத்தில் தான் சிரித்தாளே தவிர, உள்ளுக்குள் பொருமல் இருந்தது.


``அக்காவை கண்டுக்காமல், அம்மா என்னை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கும்போதே நினைச்சேங்க.. அம்மா எதையோ எதிர்பார்க்கிறாள்னு...'' போனில் கணவனிடம் கூறினாள் புவனா..

`என்ன கேட்டாங்க?'

`முன்ன மாதிரி சமையல் வேலை இல்லையாம்.. கஷ்டமா இருக்குதுன்னு புலம்பினாங்க.. அதனால, வச்சுக்கம்மான்னு சொல்லி ஐயாயிரம் ரூபாயை கையில் குடுத்துட்டு வந்தேன்.. இதுக்கு தான் அக்கா நைசா முதல்நாளே கிளம்பிட்டா போலிருக்கு..'

`பரவாயில்லை விடு புவனா.. அம்மாவுக்கு கொடுக்கிறதுல தப்பில்லை.. உங்கக்கா வீட்டுக்கு போகலையா?'

`நீங்க இல்லாம நான் மட்டும் போனா மரியாதையா இருக்காதுங்க.. அதனால, இன்னொரு நாள் குடும்பத்தோட வர்றேன்னு போன் பண்ணி சொல்லிட்டேன்..'...

இந்தா வசந்தி.. இதுல ஐயாயிரம் ரூபாய் இருக்கு.. இப்ப நீ கஷ்டத்துல இருக்கிறே.. வச்சுக்க' என வசந்தியிடம் கொடுத்தாள் அம்மா.

`ஏதும்மா?'

`நான் கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லி புவனா கிட்டே வாங்கினேன் வசந்தி.. உன்னை சரியா கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டிருப்பே தானே.. அடிக்கடி உன்னை நேர்ல பார்த்து நலம் விசாரிக்க முடியும்மா.. ஆனா, அவளை எப்பவாவது விசேஷம்னா தானே பார்க்க முடியும்.. தவிர, பக்கத்துல இருக்கிறதால தான் அக்கா மேல பாசம் காட்டறாங்கன்னு அவள் மனசுல தப்பான எண்ணம் வந்துடக்கூடாது பாரு.. பொதுவா ரெண்டு பேர் கிட்டேயும் ஒரே மாதிரி தான் அன்பு காட்டினேன்.. நீ தான் மனசுக்குள்ளே சலனத்தை ஏற்படுத்திக்கிட்டு வெறுப்போட வந்துட்டே.. உன் கஷ்டம் தெரிஞ்சு தான் எனக்காக பணம் கேட்டேன்.. தங்கச்சி கிட்டே கஷ்டம்னு சொல்லி நீ கேட்டா கவுரவக் குறைச்சல் ஆகும் வசந்தி.. ஆனா, மக கிட்டே தாய் கேட்கறதிலே கவுரவம் குறைஞ்சிடாது..'

தாயை புரிந்து கொண்டவளாக, `என்னை மன்னிச்சுடும்மா.. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்' என்றாள் வசந்தி.


இந்த சிறு கதை உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டுபோட்டு உங்கள் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி : S.சுமதி



Related Posts with Thumbnails
 
back to top