உன் சமையல் அறையில் (2014) - விமர்சனம்

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்ற பொதுக்கருத்துக்கு மீண்டும் வலு சேர்த்திருக்கிறது "உன் சமையல் அறையில்'.

லால், ஸ்வேதா மேனன் நடிப்பில் மலையாளத்தில் மெஹா ஹிட்டான "சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். தமிழுக்கு ஏற்ப மசாலா சேர்த்துள்ளதால் "தலப்பாகட்டு பிரியாணி' போல வாசம் கமகமக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வாழ்க்கை என்பதே சாப்பிடுவதற்காகத்தான் என நம்பும் பிரகாஷ் ராஜ். 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காமல், பிரம்மச்சாரியாக நண்பர் குமாரவேலுவைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாழ்கிறார்.

நண்பரின் பலவித வற்புறுத்தலுக்குப் பின்பு, பெண் பார்க்கப்போகும் இடத்தில் சாப்பிட்ட வடையில் மனதைப் பறிகொடுத்து, பெண்ணுக்குப் பதிலாக சமையல்காரரை (தம்பி ராமையா) கையோடு வீட்டுக்கு அழைத்து வருமளவுக்கு, சாப்பாடுதான் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பிரகாஷ் ராஜுக்கு.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகா, தகுந்த வரன் கிடைக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாக இருக்கிறார். பிரகாஷ் ராஜ், சிநேகாவுக்கு இடையே, ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல் நட்பாகி, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகிறது. இருவரும் சந்தித்துப் பேச நினைக்கும்போது, வயதானவன் என சிநேகா நினைத்து விடுவாரோ எனத் தயங்கி, தனக்குப் பதிலாக தனது மருமகனை (நவீன்) அனுப்புகிறார் பிரகாஷ் ராஜ்.

அதே போல சிநேகாவும் தனக்குப் பதிலாக தனது அறை நண்பியை (மேக்னா) அனுப்புகிறார். இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொள்ள, பிரகாஷ் ராஜ் - சிநேகா காதல் என்னவானது என்பதை காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து தாளித்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரகாஷ் ராஜ்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரகாஷ் ராஜ்
வடையை ரசித்து ஆழமாக ருசிக்கும் ஒரு காட்சிபோதும் பிரகாஷ் ராஜின் அபரிமிதமான நடிப்பை விவரிக்க. 45 வயதான ஒருவரின் உளவியலை அப்படியே மனக்கண் முன்பாக நிறுத்துகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் - சிநேகா இடையேயான காதல் காட்சிகளில் இருக்கும் உயிர்ப்பு, நவீன் - மேக்னா காதல் காட்சிகளில் இல்லை.

சிநேகா
படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைவது இவர்களின் காதல் காட்சிகளால்தான். பெண்களுக்குத் திருமணம் தாமதமானாலோ, தடைபட்டாலோ சமூகம் என்ன சொல்லும் என்பதை சிநேகாவின் விம்மி வெடிக்கும் அழுகை உணர்த்துகிறது. வெல்டன் சிநேகா!


இசை இளையராஜா
படத்தில் இன்னொரு ஹீரோ இளையராஜாவின் இசை. இசையில் ராஜாங்கமே நடத்தி இருக்கிறார். நான்கு பாடல்களும் காதுக்கு இனிமையாக அமைந்து "ராஜா ஆல்வேஸ் ராஜா' என்று நிரூபிக்கின்றன. "இந்தப் பொறப்பு தான்' பாடல், உணவு வகைகளின் ருசிகளைச் சொல்லி ரசிக்க வைக்கிறது. "ஈரமாய்' பாடலில் காதல் வழிந்தோடி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. "காற்று வெளியில்' பாடலில் இளையராஜாவின் குரல், கேட்பவர்களை உருக வைக்கிறது.

படத்திற்குப் பெரிய பலம் ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. நம் வீட்டு சமையல் அறைக்குள் வழிமாறி நுழைந்து விட்டோமோ என தடுமாற வைக்கிறது இவரது ஒளிப்பதிவு.

படத்தில் வரும் காட்டுவாசி பாத்திரம்தான் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் அழகாக இருந்து இருக்குமே...

எப்போதாவது ஒரு தடவைதான் இதுபோன்ற "ஃபீல் குட்' படங்கள் தமிழில் வரும். அந்த வகையில் ஆபாசம், வன்முறை இல்லாமல் வெளிவந்துள்ள "உன் சமையல் அறையில்' நாம் அனைவருமே ஒருமுறை வலம் வரலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'உன் சமையல் அறையில்' - ஃபீல் குட் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



2 comments:

Sastha L said...

Why no mention about Samyukta Hornad?

chothachody said...

dfgfdg

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top