Showing posts with label தல வரலாறு. Show all posts
Showing posts with label தல வரலாறு. Show all posts

வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்

சேலம்-ஆத்தூர் அருகே, வடசென்னிமலையில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய முருகன் கோவில் உள்ளது. அதன் தல வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்.

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை

மூலவர் : பாலசுப்பிரமணியர்
உற்சவர் : சுப்பிரமணியர்
அம்மன்/தாயார் : வள்ளி & தெய்வானை
தல விருட்சம் : --
தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : --
ஊர் : வடசென்னிமலை
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

  • பங்குனி உத்திரம்
  • திருகார்த்திகை
  • கந்தசஷ்டி
  • தைபூசம்.

தல சிறப்பு:

கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். இந்த மூன்று மூர்த்திகளும் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,
வடசென்னிமலை - 636121,
சேலம் மாவட்டம்.

போன்: +91- 4282 - 235 201.

பொது தகவல்:

5 நிலைராஜ கோபுரம், தொடக்கத்தில் சுயம்புமூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. பக்தர் ஒருவரின் கனவில் சென்ற முருகன் இத்தலத்தில் குழந்தை வடிவாக இருக்க விரும்புவதாக கூறினாராம். அதன்பின் சுயம்புமூர்த்தி சிலைகளுக்கு பின்பகுதியில் பாலசுப்பிரமணியராக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். மூன்று கோலத்தில் முருகன் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலவிநாயகர் அடிவார விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை. மன அமைதி வேண்டுபவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நிலம், வீடு வாங்க விரும்புவோர் மலைப்பாதையில் உள்ள அவ்வையார் சிலை அருகில் கல் வைத்து வேண்டுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

முக்கோல தலம்: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம்.

ஒரேசமயத்தில் முருகனின் இம்மூன்று கோலங்களையும் வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும், பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை. இம்மூன்று கோலங்களும் வாழ்க்கையின் பெரும் உண்மையையும் விவரிக்கின்றது. மனிதன் குழந்தையாக இருக்கும்போது மகிழ்ச்சியின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கிறான். அவனே இல்லற வாழ்க்கை எனும் பந்தத்தில் இருக்கும் போது மகிழ்ச்சியும் துன்பமும் கலந்த கடமையில் உழல்கிறான். எதன் மீதும் பற்றில்லாத துறவற நிலையை அடையும்போது எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

மொத்தத்தில் எதன் மீதும் அதிக பற்று வைக்கவேண்டாம் என இத்தலத்து முருகன் உணர்த்துகிறார்.

சிறப்பம்சம்:

இங்குள்ள தண்டாயுத பாணி கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், தலைப்பாகை அணிந்து காட்சி தருகிறார். நடுமலையில் இடும்பன் சன்னதியும், அதனருகில் நெல்லிக்கனியை முருகனுக்கு அவ்வையார் வழங்கிய காட்சியை விவரிக்கும் சிலையும் உள்ளது. இவ்விடத்தில், பக்தர்கள் வீடு போல கற்களை குவித்து வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் வீடு கட்டும் பாக்கியம் பெறலாம் என நம்புகின்றனர். சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் அறுபது வருடங்களை குறிக்கும்படியாக படிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

வடசென்னிமலையில் இருக்கும் பாலசுப்பிரமணியர் ஒரு குன்றின் மீது கோயில் கொண்டுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொண்டான்.

சிறிது நேரம் விளையாடிய அவன், திடீரென ஒன்றும் சொல்லாமல் குன்றின் மீது வேகமாக ஏறினான். சிறுவர்களும் விளையாட்டு எண்ணத்தில் பின் தொடர்ந்தனர். ஓரிடத்தில் நின்ற அச்சிறுவன், பேரொளி தோன்ற அதன் மத்தியில் மறைந்துவிட்டான். உடன் சென்ற சிறுவர்கள், அதிர்ச்சியடைந்து ஊர்மக்களிடம் நடந்ததை கூறினர். மக்கள் வந்து பார்த்தபோது, சிறுவன் மறைந்த இடத்தில் மூன்று சுயம்பு சிலைகளும், அவ்விடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. சிறுவனாக வந்து அருள் புரிந்தது முருகன்தான் என்றறிந்த மக்கள் இவ்விடத்தில் கோயில் கட்டினர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். இந்த மூன்று மூர்த்திகளும் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



முருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா ?

முருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா ?

தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?


அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலைச் சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.


இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேறற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.


இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

தைப்பூச விரத முறை

தைப்பூசம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

இதேபோல், மாலையிலும் குளிந்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றைய தினம் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில்


மெட்டாலா கணவாயில் எனும் இந்த இடம் ஒரு காலத்தில் கொடிய வனவிலங்குகள் உலவும் வனமாக இருந்தது. இப்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டவுடன் அழகான திருத்தலமாக மாறிவிட்டது.

கோரைப் புற்களிடையே ஓடியதால் கோரையாறு என்ற பெயருடன், காவிரி, திருக்கோயிலுக்கு எதிரே ஓடிக் கொண்டிருக்கிறது.

கன்னிமார் ஊற்று என்ற சிறு சுனை அருவியும் உண்டு. கோயிலைக் கடந்து செல்லும் எல்லா மக்களும் வாகனங் களும் இங்கு நின்று வணங்காமல் செல்வதில்லை.


உருண்டையான ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர், இரண்டடி உயரத்தில், நின்ற நிலையில், சாந்த வடிவத்தில் திருக்காட்சி அளிக்கிறார். நாமக்கல் குடவரைக் கோயில்களைக் கட்டிய அதியன் குணசீலன் என்ற, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் உருவாக்கிய கோயில் இது. அப்போது காவல் தெய்வமாக இந்த அனுமன் சிலை செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சங்ககிரி மலையில் எண்திசைக் காவலர்களாக, இதே தோற்றத்தில் ஆஞ்சநேயரின் உருவங்கள் சிறியதும் பெரியதுமாக காணப்படுகின்றன; இன்றும் வழிபடப்படுகின்றன. பரமத்தி கோட்டையண்ணன் கோயிலிலும் இதேபோன்ற ஆஞ்சநேயரை பெரிய வடிவில் தரிசிக்கலாம்.

உருண்டைப் பாறைக் கல்லைப் பிரதானமாக வைத்து, மகா மண்டபம், விநாயகர், சிவன், விஷ்ணு துர்க்கை, நவகிரகங்கள் சந்நதிகளை பக்தர்கள் உருவாக்கினர். ஆஞ்சநேயருக்கு எதிரில், திருக்கடையூர் அபிராமி, கொண்டமுத்து மூகாம்பிகை, சோட்டாணிக்கரை பகவதியம்மன், திருவானைக்காவல் அகிலேண்டேஸ்வரி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி, பராசக்தி, காயத்ரி ஆகிய தெய்வங்கள் சுதைச் சிற்பங்க ளாக அருள்பாலிக்கின்றனர். மேல் விதானத்தில் அஷ்டலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்திலேயே தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில் இதுதான் என்றே சொல்லலாம்.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில், கடைசி ஞாயிறு அன்று பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள். விழாவின்போது பஞ்சலோகத்தாலான உற்சவமூர்த்தி, அருகே, ஒடுவன்குறிச்சியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து இங்கு கொண்டு வரப்படும். இந்த ஈசன் கோயிலிலிருந்து ஆஞ்சநேயரை ரதத்தில் எழுந்தருளச் செய்து, காலை 10 மணிக்கு, ஒடுவன்குறிச்சி, சீராப்பள்ளி, தேவஸ்தானம் புதூர் வழியாக வரும் உலா இரவு 7 மணிக்கு நாமகிரிப்பேட்டையில் நிறைவுபெறும். 7:30 மணிக்கு நாமகிரிப்பேட் டையில் பந்த சேர்வை திருவீதி உலா வருவார்.

மறுநாள் காலை 7 மணிக்கு உற்சவமூர்த்தி ரதமேறி நாமகிரிப்பேட்டை, தண்ணீர்பந்தல் காடு, கும்பகொட்டாயி, கட்டப் புளியமரம், கோரையாறு வழியாக மெட்டாலா கணவாய்க்கு வந்தடைந்து தன் திருக்கோயிலில் எழுந்தருள்வார்.

காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். 11:00 மணிக்கு மெட்டாலா கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமி சக்தி அழைத்தல் நடைபெறும். மதியம் 12 மணிக்கு அக்கினி குண்டம் பற்ற வைக்கப்படும். 1 மணிக்கு சுவாமி கோரையாற்றில் நீராடிவிட்டு மதியம் 3 மணிக்கு அக்கினி குண்டம் இறங்குவார். மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா இனிதே முடியும். மீண்டும் உற்சவர் வந்த வழியே திருவீதி உலாவை முடித்துக் கொண்டு ஒடுவன் குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றடைவார்.

இத்திருக்கோயில் 2007-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மற்றுமொரு கும்பாபிஷேகத்தினைக் கண்டது. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதூர்யம் முதலியவை கிட்டும்.

இக்கோயில் வளாகத்தில் எண்ணற்ற குரங்குகள் உள்ளன. அவை யாருக்கும் இதுவரை எந்த துன்பத்தையும் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஞ்சநேயர் தன்னை நாடி வரும் பக்தர்களைப் பரிபாலிக்கத் தயாராக இருக்கும்போது, அவர் அம்சமான இந்தக் குரங்குகள் அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவா செய்யும்?

ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் ஆனந்தாயா மலையடி வாரத்தின் பாதையோரமாக மெட்டாலா கணவாயில் எனும் இத்தலம் அமைந்துள்ளது.

நான் இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்றுவருகிறேன். நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள் அந்த வழியாக செல்லும்போது. இத்திருத்தலத்தில் வழிபட்டு மேன்மை பெற வாழ்த்துக்கள்!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Dinakaran daily news paper.



Related Posts with Thumbnails
 
back to top