Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts
Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts

எவர்கிரீன் எம்.ஜி.ஆர்

'வாழ்ந்தவர் கோடி - மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நிற்பவர் யார்..?' என்ற அர்த்தமுள்ள, அற்புத பாடல் வரிகளுக்கு ஒப்புவமை இல்லாத புத்தகராதியாக வாழ்ந்து காட்டியவர், பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன்.


தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் தலைசிறந்த முதல்வராகவும் திகழ்ந்து, எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கோடானு கோடி தமிழர்களின் இதய தெய்வமாக போற்றப்படும் அவரது பிறந்த நாளை படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைத்து தரப்பினரும் போற்றி, கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதேபோல், மறைவு தினத்தையும் எம்.ஜி.ஆரின் நினைவுகளோடு லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

'புரட்சித் தலைவர்' என்ற சிறப்பு பட்டத்திற்கேற்ப, சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, மகத்தான திட்டமாக அவர் செயல்படுத்தியதால்தான், இன்று 50 வயதுக்குட்பட்ட தமிழக மக்களில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகளாகவும், கை நிறைய பணம் சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினராகவும் உயர்ந்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவான உண்மையாக நிரூபணமாகியுள்ளது.


'அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்' என்ற குறிக்கோளில் அபார நம்பிக்கை கொண்ட தொலைநோக்கு பார்வையாளரான எம்.ஜி.ஆர்., தனது மனித நேயத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு மக்கள் திலகமாகவும், பொன்மனச் செம்மலாகவும் விளங்கினார்.

ஏழ்மை, பசி, வறுமை ஆகிய சொற்களை வெறும் தமிழ் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திராமல், அவற்றை நெடுங்காலம் அனுபவித்துணர்ந்து, தனக்கு ஏற்பட்ட அந்த கொடிய நிலைமை வேறு யாருக்கும் இனி நேரக்கூடாது என இளம் வயதிலேயே அவர் சபதமேற்றார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து-உழைப்பால் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்ட அசுர ஜாதகத்துக்கு சொந்தக்காரர், எம்.ஜி.ஆர். மட்டுமே என்றால்... அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடாக இருக்க முடியாது.

இதன் அடிப்படையில் தான், 'நான் ஆணையிட்டால் - அது நடந்து விட்டால் - இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்' என்ற பாடலுக்கேற்ப அவரது ஆட்சிக் காலத்தில் ஏழைகளை பாதிக்கும் எந்த சட்டத்தையோ, திட்டத்தையோ எம்.ஜி.ஆர். நினைத்துக் கூட பார்த்ததில்லை.


அதனால் தான், எம்.ஜி.ஆரின் பிறந்த மற்றும் மறைந்த தினங்களில் தமிழகமெங்கும் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை - எளிய மக்கள், தங்கள் வீட்டின் வாசலில் அவரது புகைப்படத்தை வைத்து குத்து விளக்கேற்றி, பூ மாலை சூட்டி அலங்கரித்து புளகாங்கிதம் அடைகின்றனர்.

அவரது புகைப்படத்தின் கீழே உடைத்து வைக்கப்படும் தேங்காய் மூடியின் வெள்ளை வெளேர் 'பளிச்' சிரிப்பையும் முறியடிக்கும் வகையில் புகைப்படத்தில் இருந்தவாறு புன்னகைக்கும் அந்த ரோஜா மேனி தலைவரின் எழில் முகம் தமிழர்களின் மனக் கண்களில் சுவர் ஓவியமாக நிலைத்துப் போய் விட்டது.

தோல்வியை தோற்கடித்து... வெற்றி ஒன்றையே தனது வாழ்க்கை வரலாறாக்கிக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தனிப்பெரும் தலைவர், எம்.ஜி.ஆர். ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



எம்.ஜி.ஆர் பற்றி சுவையான 25 குறிப்புகள்!

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !

  1. எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

  2. பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

  3. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

  4. எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

  5. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

  6. சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

  7. முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !


  8. ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

  9. நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

  10. எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

  11. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

  12. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

  13. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

  14. சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

  15. எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

  16. தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

  17. ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

  18. அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !


  19. ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

  20. ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

  21. அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

  22. எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

  23. முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

  24. அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !

  25. ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : ஆ.வி



Related Posts with Thumbnails
 
back to top