ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (2013) - விமர்சனம்

தமிழில் நடனத்தை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த போடா போடி-யும் கூட நடனத்தை மையப்படுத்தியதே. ஆனாலும் ஹலிவுட்டில் வெளிவந்திருக்கும் "ஸ்ட்‌ரிட் டான்ஸ், ஸ்டெப் அப்" போன்ற முழுக்க நடனம், நடனம் அன்றி வேறில்லை என படங்கள் இந்திய அளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் குறையை போக்கும் விதமாக பிரபுதேவா நடித்திருக்கும் படம் ஏபிசிடி. "எனிபடி கேன் டான்ஸ்" என்பதன் சுருக்கம். ஸ்டெப் அப் திரைப்படத்தைப் போல இந்த ஏபிசிடி யும் 3D யில் தயாராகியுள்ளது. அந்தவகையில் 3D-யில் தயாரான முதல் இந்திய நடனத் திரைப்படம் என இதனை சொல்லலாம்.

இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்து விட்ட நம்மூர் நடன இயக்குனர் + நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில், நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் 3D படம் தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்!"

படத்தோட கதை என்னனா ...

மும்பையில் நண்பர்களான KK மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள். மும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கும் KK மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று KK மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.

மனமுடைந்த பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார். இந்நிலையில் இவரது மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார். அவரிடம் நடந்ததை விவரிக்கிறார்.

உடனே, புதிய நடனப்பள்ளி தொடங்க பிரபுதேவாவுக்கு கணேஷ் ஆச்சர்யா ஆலோசனை கூறுகிறார். மேலும், சொந்த ஊருக்கு திரும்பும் முடிவை கைவிடுமாறு ஆச்சர்யா பிரபுதேவாவிடம் கூறுகிறார்.

தன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை துவங்குகிறார்கள்.

அதன்படி, கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா. இதற்காக அவர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார்.

ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.

இந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரபுதேவா
நடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார்.

நட்பு, நம்பிக்கை, துரோகம் என சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார். ஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.

குறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் சோலோ நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது.

பிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


கணேஷ் ஆச்சர்யா & KK மேனன்
பிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

KK மேனன்
மெல்லிய புன்சிரிப்புடன் வலம் வரும் KK மேனன், கேரக்டருக்கு அப்படி பொருந்துகிறார். வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக செய்திருக்கிறார்.

"இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்கிறது ஆடியன்ஸ்தான். நடக்குறது போட்டியில்லை. ஷோ" என்று பேசி வில்லத்தனமாக காய் நகர்த்து வதும், கிளைமாக்சில் பிரபுதேவாவிடம் தோற்றதும் அதே வில்லச் சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதும் நச்!.


எதிர்பாராத திருப்பம்
கிளைமாக்ஸ் காட்சியில், நடனப்போட்டியில் தனது குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம்.

இயக்குனர் ரெமோ டிசோசா
ரீலுக்கு ஒரு டான்ஸ், ஒரு திருப்பம், ஒரு சென்டிமெண்ட் என படத்தை விறுவிறுப்பாகச் கொண்டு சென்றிருக்கிறார்கள். எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து, ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.

இசை & ஒளிப்பதிவாளர் விஜய்குமார்
சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன. ஒவ்வொரு நடன கலைஞர்களும் உயிரைக் கொடுத்து ஆடியிருக்கிறார்கள், அதனை அதன் உயிர்ப்பு குலையாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்குமார் அரோரா.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து காப்பாற்றும் ரசிகர்கள் இது போன்ற தரமான படத்தை ஆதரிக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ஏபிசிடி - ஒரு முறை பார்க்கலாம் பாய்ஸ்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to maalaimalar new paper which inspired me to see this movie.



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்க நினைத்துக் கொண்டிருக்கும் படம்... விமர்சனத்திற்கு நன்றி....

Prithiviraj said...

நீங்க சொன்னதுல ஒரு விஷயம் மட்டும் மத்தவங்களுக்கு ஆழமா புரியணும்....
"எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து காப்பாற்றும் ரசிகர்கள் இது போன்ற தரமான படத்தை ஆதரிக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்."
நச் வரிகள் ..................

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top